வீரத்தமிழனை எடுத்துக்காட்டும் புறநானூறு பாடல்களில் சிறப்பாகப் போற்றப்பட்ட வெள்ளைச்சோளம், செஞ்சோளம், இருங்கு, கருஞ்சோளம், அரிசிக்கம்பு, செந்தினை, கருந்தினை, பைந்தினை, பெருந்தினை, சிறுதினை, காடைக்கண்ணி, கேப்பை, வரகு, குதிரைவாலி, பெருஞ்சாமை, செஞ்சாமை, சாமை போன்ற தானியங்களுக்குரிய பொதுவான தமிழ்ப்பெயர் புன்செய் தானியங்கள். நன்மை என்றால் சிறந்தவை. புன்மை என்றால் அற்பம், சிறுமை, இழிவு என்று பொருள் உண்டு. நெல், வாழை, கரும்பு எல்லாம் நன்செய். மற்றவை புன்செய். நல்ல சுவையான உணவு தானியங்களுக்கு ""புன்மை'' என்று பட்டம் கட்டினர்.
உண்மையில் அரிசிச் சோறு உண்டவர்கள் தாம் பூஞ்சையாக இருந்தனர். புஞ்சை உணவாகிய கம்பு உருண்டையையும், உளுத்தங்களியையும், கேப்பைக் களியையும் உண்டவர்கள் நோய்நொடியின்றி வலுவாக இருந்தனர். வீரம் விளைத்தனர்.
எட்டாண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஒரு மாபெரும் இயற்கை விவசாயக் கருத்தரங்குக்கு அழைக்கப்பட்டிருந்தேன். நான் பேச வேண்டிய ""பசுமைப்புரட்சி'' என்ற தலைப்பு எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளையில் பணிபுரிந்த முன்னாள் கோவை விவசாயப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு வழங்கப்பட்டது. பேச்சு ஒருகட்டத்தில் நான் ஏற்கெனவே தொட்டிருந்த புன்செய் தானிய விஷயத்துக்கு வந்தது. அப்போது அவர் எனது புள்ளிவிவரங்களை அள்ளித் தந்தார். அதாவது 1950 - 51 புள்ளிவிவரத்துடன், 2000 - 01 புள்ளிவிவரத்தை (2009 - 10 - புள்ளிவிவரமானாலும்) ஒப்பிட்டால் அரிசி உற்பத்தி 400 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம் பெருவகை புன்செய் தானியங்களான சோளம், கம்பு, கேப்பை சுமார் 300 சதவீதம் உற்பத்தி குறைந்துவிட்டதுடன், தினை, சாமை, வரகு முதலிய சிறு தானியங்கள் காணாமல் போய்விட்டன என்றும் குறிப்பிட்டு, உணவு தானியங்கள் உற்பத்தியில் உள்ள சமனற்ற போக்கை வெளிப்படுத்தினார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் நான் எழுந்து சில கேள்விகளைக் கேட்க அனுமதிக்கப்பட்டேன். ""புன்செய் தானிய உற்பத்தி குறைந்தது தெரிந்த விஷயம். அதற்குக் காரணமானவரே நீங்கள்தானே? புன்செய் தானிய உற்பத்தியை உயர்த்தும் முயற்சிகளைச் செய்வதில் வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு பொறுப்பு இல்லையா?'' என்று கேட்டேன்.
""பஞ்சத்தையும் பசியையும் போக்குவதற்கு அரிசி உற்பத்தி மட்டுமே வழிவகுக்கும் என்று நெல் சாகுபடிக்கு மட்டுமே பேக்கேஜ் திட்டம், மானியம் வழங்கப்பட்டது'' என்று அவர் கூறிய விளக்கம் யாரையும் கவரவில்லை. மீண்டும் நான் எழுந்து, ""புஞ்சை தானியங்களுக்குத்தான் பஞ்சம் தீர்க்கும் பஞ்சை தானியம் என்று பெயருண்டு. அரிசியை 2 மாதம் சேமிக்கலாம். நெல்லை ஓராண்டு சேமிக்கலாம். ஆனால் புஞ்சை தானியங்களை 5,6 ஆண்டுகளுக்குச் சேமிக்கலாம். ஆகவே ஆண்டுதோறும் பல்லாயிரம் டன்கள் அளவில் வீணான அரிசி சிவில் சப்ளை கார்ப்பரேஷனில் ஏலம் விடப்பட்டு பசை உற்பத்தி நிறுவனங்களுக்குச் செல்கிறது. வீணாகி விஷமான ரேஷன் அரிசி ஏழை மக்களின் வயிற்றுக்கும் செல்வதால், வீரத்தமிழன் நோய் தொற்றி நோஞ்சானாகி விட்டான் என்றேன்.
அதை அவர் ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல; எவ்வாறு அந்த மாஜி துணைவேந்தரின் பாட்டி அவர் கிராமத்தில் கம்பைக் குத்திப் புடைத்துக் குடித்ததை ஒரு மலரும் நினைவாக எடுத்துக் கூறினார்.
இந்தியாவிலேயே புன்செய் தானிய உணவை கிராமங்களில் இன்னமும் விட்டுக் கொடுக்காதவர்கள் வீரமராட்டியர்களே. மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டுமே மானாவாரி புன்செய் தானிய சாகுபடி விரிந்த அளவில் எஞ்சியுள்ளதுடன் அவ்வளவையும் சொந்த உணவு உபயோகத்துக்குப் பயன்படுத்துகின்றனர்.
தமிழ்நாட்டில் காணாமல்போன பல வகையான சாமை, குதிரை வாலி, தினை வகைகள், வரகு எல்லாவற்றையும் மராட்டிய மாநிலத்தில் கண்டுபிடித்து விடலாம். கிருஷ்ணராஜசாகரம், கபினி அணைகள் கட்டி, புஞ்சை நிலங்கள் சதுப்பு நிலமாக மாற்றப்பட்டு, கர்நாடகத்தில் நெல்லும் கரும்பும் ஆக்கிரமித்துக் கொண்டன.
இதனால் புன்செய் தானியம் உண்டு வீரமாக வாழ்ந்த திப்புசுல்தான் படைவீரர்களின் வாரிசுகள் இன்று கர்நாடகத்தில் நோயாளிகளாகிவிட்டனர். ஏனெனில் புன்செய் தானிய சாகுபடியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடமாகவும் கர்நாடக மாநிலம் இரண்டாவது இடமாகவும் விளங்கி வந்தது.
கர்நாடக மாநிலச் சூழ்நிலை எல்லா மாநிலங்களிலுமே ஏற்பட்டுள்ளதால் இந்திய அளவிலும் எந்த வளர்ச்சி வீதத்தில் நெல், கோதுமை சாகுபடி உயர்ந்துள்ளதோ அந்த வளர்ச்சி வீதத்துக்குமேல் பன்மடங்காக புன்செய் தானிய சாகுபடி குறைந்துவிட்டது. மராட்டிய மாநிலம் மட்டுமே சற்று விதிவிலக்கு.
இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் "பழைய குருடி கதவைத் திறடி' என்ற பழமொழிக்கு ஏற்ப ஹரியாணா, மேற்கு உ.பி. பஞ்சாப் பகுதியில் சில விவசாயிகளும் ஆந்திரப் பிரதேசத்திலும் அரிசி, கோதுமையை விதைக்காமல் புன்செய் தானியங்களையும், பருப்புவகைப் பயிர்களையும் சாகுபடி செய்துள்ளனர். இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் நெல் சாகுபடி 1960-க்குப் பின் அறிமுகமானது. அதற்கு முன்பு, கரீஃப் பருவத்தில் புன்செய் தானியங்களுடன் மக்காச்சோளம், பருப்பு வகை, கரும்பு, எண்ணெய்வித்து சாகுபடி செய்வர். பிறகு ரஃபி பருவத்தில் கோதுமை சாகுபடி செய்வது மரபு. நிலத்தடி நீர் கீழே செல்லச் செல்ல நெல் சாகுபடி செலவுமிக்கதாகவும், நீர்ப்பற்றாக்குறை காரணமாக நெற்பயிர் காய்ந்துவிடும் அபாயமும் உள்ளதால், சில விவசாயிகள் பழைய நிலைக்கு மெல்ல மெல்லத் திரும்புவதாகத் தகவல்.
ஆந்திர மாநிலத்திலும் இம்மாற்றம் தெரிகிறது. ஆந்திர மாநிலத்தில் கடற்கரை மாவட்டங்கள் தவிர மையப்பகுதி மாவட்டங்களில் மழைப்பொழிவும் குறைவு. நிலத்தடி நீரும் வற்றிவிட்ட சூழ்நிலையில் பழையபடி புன்செய் தானியம் மற்றும் துவரை சாகுபடி துளிர்விடுகிறது.
இரண்டாவது போகமாக உளுந்து, பாசிப்பயறு, கொண்டைக்கடலை சாகுபடி செய்யவும் அம்மாநில அரசு, மத்திய அரசின் வறட்சிப் பயிர் சாகுபடித் திட்டம் மூலமும் தக்காண சமூக வளர்ச்சி மையம் போன்ற சில தொண்டு நிறுவனங்கள் மூலமும் ஊக்கம் அளித்தாலும்கூட, அடிப்படையான கொள்கை மாற்றம் இல்லாத ஒரு சூழ்நிலையில் புன்செய் தானியம் - பருப்பு வகை சாகுபடி உகந்த அளவில் வளர்ச்சி பெறுமா என்பது ஒரு கேள்விக்குறி.
தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் வறட்சிப் பயிர் சாகுபடி முயற்சியில் ஒரு துரும்புகூட அசைவு இல்லை. ஒரு ரூபாய்க்கு அரிசி கிடைக்கும்போது 12 ரூபாய்க்கு யார் சோளமோ கம்போ வாங்கி உண்பார்கள்? இதர மாநிலங்களில் இரண்டு ரூபாய் அரிசித் திட்டம் உள்ளது. தமிழ்நாட்டைவிட இதர மாநிலங்களில் புன்செய் தானிய விலை சற்று மலிவாக இருந்தாலும், மகாராஷ்டிர மாநில மக்களைத் தவிர இதர மாநிலங்களில் பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் புன்செய் தானியங்களுக்கு உகந்த கிராக்கி வருமா என்பது ஒரு கேள்விக்குறி.
எனினும் இந்த விஷயத்தில் உணவு அமைச்சரகத்தைச் சார்ந்த ஊட்ட உணவுக் குழுமம் செய்ய வேண்டிய விழிப்புணர்வுப் பிரசாரமும் பொது விநியோகத்தில் சோளம், கம்பு, ராகி, சாமை, தினை, வரகு போன்றவை வழங்குதலும் விவசாயிகளுக்கு நல்ல விலையும், தாராளமான அளவில் புன்செய் தானிய உற்பத்திக்கு மானியமும் வழங்க வேண்டும். புன்செய் தானியங்களை நன்கு சுத்தப்படுத்தி ரவாவாகவும், மாவாகவும் நல்ல முறையில் பேக் செய்து வழங்கலாம்.
தமிழ்நாட்டில் ஒரு தனிநபராக புன்செய் தானியங்களிலிருந்து விதம்விதமான உணவுகளை இன்சுவையுடன் ராமசுப்பிரமணியம் என்பவர் வழங்குகிறார். வறட்சி நிலப் பயிர்களான தானியங்களில் குறிப்பாக அழிந்து வரும் வரகு, தினை, பனிவரகு, சாமை, குதிரைவாலி போன்றவற்றைத் தேடிப்பிடித்து அவற்றைக் கொள்முதல் செய்வதுடன் அவற்றிலிருந்து நறுமணமுள்ள உணவுகளைச் சமைக்கவும் காலத்துக்கு ஏற்ப புதுமையாகவும் வழங்குகிறார்.
பல்வேறு கண்காட்சிகளில் உணவகங்களை நடத்தித் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளைப் புதுமையான முறையில் அவர் மீட்டுயிர்த்து வருகிறார். மதுரையைச் சேர்ந்த அவர் புன்செய் தானியங்களை இன்சுவை உணவாகப் படைத்து வழங்கிய காட்சிகளை ""கைமணம்'' என்ற பெயரில் மக்கள் தொலைக்காட்சி மதியப் பொழுதில் தொகுத்து வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பசுமைப்புரட்சியின் கரிய விளைவுகளுக்குப் பின் மத்திய மற்றும் மாநில அரசுகள் இன்று நிலவிவரும் நீர்ப்பற்றாக்குறையை அனுசரித்து முன்போல் மானாவாரி - வறட்சி நில சாகுபடிக்கு அதிக முன்னுரிமை வழங்க வேண்டும். புன்செய் தானியங்களையும் பருப்பு வகைகளையும் முன்பு கலப்புப் பயிர்களாக சாகுபடி செய்த மரபு மீண்டும் புத்துயிர் பெற வேண்டும். இவ்வாறு கலப்புப் பயிர் செய்வதன் மூலம் மண்ணும் வளம் பெறும். நீர்ச் செலவும் குறையும்.
புறநானூறு பாடல்களில் விவரிக்கப்பட்ட வீர ரத்தமுள்ள தமிழர்களை மீண்டும் உருவாக்க புன்செய் தானிய உற்பத்தியைப் பன்மடங்கு உயர்த்தி, அவற்றைத் தமிழர்களுக்கு ஊட்ட வேண்டும். புன்செய் தானியங்களில் சோளம், கம்பு, கேப்பை, துவரை, உளுந்து பயிரிடுவோருக்கு ஏக்கருக்கு ரூ. 1,000 மானியமும் அழிந்து வரும் சிறுதானியங்களான சாமை, தினை, வரகு, குதிரைவாலி பயிரிடுவோருக்கு ரூ. 2,000 மானியமும் வழங்க வேண்டும். அவற்றை அரசு கொள்முதல் செய்து, பொதுவிநியோகத்தில் அரிசியுடன் புன்செய் தானியங்களையும் மாதம் 5 கிலோ வீதம் ரேஷன் வழங்கலாமே.
வீரமராட்டியர்களைப் போல் ஊட்டம்மிக்க புன்செய் தானியங்களால் வீரத்தமிழர்களை உருவாக்கும் ஒரு கடமையை நமது முதல்வரும், முத்தமிழ் வித்தகருமான கலைஞரைத் தவிர வேறு யாரால்தான் நிறைவேற்ற முடியும்?
நன்றி : தினமணி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மிகவும் வரவேற்கப்பட வேண்டிய விஷயம்!! நம் விவசாயிகளை சொல்லி தப்பில்லை!! ஆனால் மாற்றம் கண்டிப்பாக விரைவில் வரும்.. நான் தேடி பிடித்து குதிரை வாலி வாங்கினேன்.. எப்படி என்ன செய்வது என்று எம் வீடு பெண்களுக்கு தெரியவில்லை:)
பதிலளிநீக்குதயவு செய்து திரு ராமசுப்ரமணி அவர்களது phone no , mail id தரமுடிமா
பதிலளிநீக்கு