சனி, 26 ஜூன், 2010

உணவில் கலக்கும் விஷம்!

பள்ளிகள் கல்லூரிகளில் உள்ள வேதியல் ஆய்வுக்கூடங்கள் பார்த்திருப்பீர்களே அது போலத்தான் இன்றைய நவீன சமையலறைகள் மாறி விட்டன. இயற்கை உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விட்டோம்.
சூப்பர் மார்கெட் ஷெல்ஃப்களில் குவிந்து கிடக்கும் உணவுப்பொருட்கள் எல்லாவற்றிலும் சுவைக்காவும், நிறத்திற்காகவும் , கெடாமல் வைத்திருக்கவும் பலவித ஆபத்தான இரசாயனப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது.
இது பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் விளம்பரங்கள் சொல்லும் பச்சைப் பொய்களின் கவர்ச்சியில் மயங்கி வாய்க்குள் அள்ளித் திணித்து கொள்கிறோம்.
உணவுப்பொருட்களில் உண்டான வியாபாரப் போட்டியின் விளைவு இன்றைக்கு 100% தரமான இயற்கையான உணவு உண்பது என்பது குதிரைக்கொம்பு தான்.
உணவில் சுவை கூட்டும் ரசாயனப்பொருட்களில் எந்த விதமான ஊட்டசத்தும் இல்லை . இவைதேவையற்றது, ஊட்ட சத்து சேர்க்கப்பட்டவை என கூறப்படும் உணவும் உண்மையில் பல இயற்கையான ஊட்ட ச்த்துகள் நீக்கப்பட்டு சில ரசாயனங்கள் சேர்க்கப்பட்டது தான். பல உணவுப்பொருட்களில் இயற்கையான பொருட்களுக்கு பதில் அது போன்ற சுவை தரும் செயற்கையான சுவையூட்டிகள் மட்டுமே உள்ளன.
வெனிலா கலக்கப்படும் உணவு வகைகளில் பேன்களைக் கொல்ல பயன் படுத்தப்படும் பைப்பர் ஹோல் என்ற இராசயனப் பொருள் சேர்க்கப்படுகிறது.
டின்களில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட பழங்களில் துணிகளையும் தோல்களையும் கழுவப் பயன்படுத்தப்படும் பென்சி அஸிடெட், எதில் அசிடெட், அமில் அசிடெட் முதலியன சேர்க்கப்படுகின்றன. இது உடலுக்கு அதிகம் கேடானது.
கடைகளில் கிடைக்கும் பலவகை ஆப்பிள் பழங்களின் தோலை நகத்தால் சிறிது நெருடிப்பார்த்தால் அதிலிருந்து மெழுகு உதிர்ந்து வரும். ஆப்பிள் கெடாமல் இருக்க தோலில் மெழுகு தடவி பேக் செய்கிறார்கள். நாம் அதை அப்படியே உண்கிறோம்.
கேக்குகளில் எண்ணெய் உறையவைக்க சோடியம் அலுமினியம் சேர்க்கப்படுகிறது. இந்த எண்ணெய் உண்பதற்கு ஏற்றது அல்ல. மாவை வெண்மையாகவும் உப்ப வைக்கவும் பிளீச்சிங் பவுடரும், பிற பவுடர்களும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் உடல் நலத்திற்குத் தீமையே!
வெண்ணெய் நீக்கப்பட்ட பால் அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்காக சில பால் நிறுவனங்கள் கலக்கும் ரசாயனப் பொருள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாக்க பல வித ஆபத்தான ரசாயன பூச்சிக்கொல்லிகள் உபயோகிக்கிறார்கள். இதன் விளைவாக நாம் உண்ணும் அரிசி, பருப்பு, காய்கறிகளிலும் கான்சர், மலட்டுத்தன்மை உருவாக்கும் பூச்சிமருந்து எச்சங்கள் இருக்கின்றன. பழங்களை பழுக்கவைக்க கூட ரசாயனங்கள் உபயோகிக்கிறார்கள். இயற்கையான பூச்சி ஒழிப்பு முறையில் இயற்கையான உரம் இட்டு வளர்ந்த உணவுப்பொருளே சிறந்தது. இதற்கான திட்டங்களையும் ஊக்குவித்தலகளையும் பயிற்சியையும் அரசு விவசாயிகளுக்கு வழங்கி இயற்கையான உணவு எங்கும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஜெனெடிக் என்ஜினீயரிங்க் மூலம் பெறப்படும் புது விதமான உணவுப்பொருட்கள் மனித உடலில் உண்டாக்கும் பாதிப்புகளை அறிய பல காலமாகலாம். சரியான ஆராய்ச்சிமுடிவுகளை அறியாமலேயே அவற்றை சந்தைப்படுத்துவது காசு கொடுத்து வாங்கி உண்ணும் மக்கள உடலிலேயே உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் சோதனைகளை நிகழ்த்துவதாகிறது.
பொதுவாக உணவுப்பொருளில் சேர்க்கப்படும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய சில பொருட்கள்:
330 and E330 Citric Acid: இயற்கையான சிட்ரிக் ஆசிட் கெடுதல் இல்லை. ஆனால் செயற்கையாக தயாரிக்கப்படும் சிட்ரிக் ஆசிடில் அதன் தயாரிப்பு முறையின் போது அதிலிருந்து Sulfur மற்றும் Sulfites முழுமையாக நீக்கப்படா விட்டால் ஆஸ்த்மா, அலர்ஜி உண்டாக வாய்ப்புள்ளது. சிட்ரிக் ஆசிட் கலந்த பானம் அதிகம் அருந்துவது பற்களுக்கு கேடு. 924 & E924 Potassium Bromate (Agent used in Bleaching Flour): நரம்பு மண்டலம், சிறுநீரகம், அஜீரணம், மற்றும் புற்றுநோய்க் காரணி.
407 & E407 Carrageenan (Thickening & Stabilizing Agent) : இவை ஆஸ்த்மா, அல்சர், கான்சர் போன்றவற்றை உருவாக்ககூடும்.
Sucralose (Splenda): 40%thymus gland ஐ சுருங்கச்செய்வதாக சோதனை முடிவுகள் சொல்கின்றன. சிறுநீரகம் மற்றும் ஈரல் வீக்கம், மற்றும் ஈரலில் சுண்ணாம்பு சத்தை படியச்செய்கிறது. உண்ணத்தகுந்ததல்ல.
கேசரிப் பவுடர் உடல் நலத்திற்கு நல்லதல்ல. வீட்டில் செய்யும் எந்த உணவிலும் நிறத்திற்காக கேசரிப்பவுடர் அல்லது புஷ் பவுடர் சேர்க்காதீர்கள்.
குளிர் பானங்கள் மிட்டாய்களில் சேர்க்கப்படும் பல வித கவர்ச்சியான வண்ணங்கள் புற்று நோய், மூளைக்கட்டி, தைராய்ட், அட்ரீனல் மற்றும் சிறுநீரக பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.
சாயங்கள்: 104 & E104 Quinoline Yellow, 107 & E107 Yellow 2G, 110 & E110 Sunset Yellow, 122 & E122 Azorubine, Carmoisine, 123 & E123 Amaranth, 124 & E124 Ponceau, Brilliant Scarlet, 127 & E127 Erythrosine, E128 Red 2G, 129 & E129 Allura Red AC, E131 Patent Blue, 132 & E132 Indigotine, இண்டிகோ கார்மினே 133 & E133 ப்ரில்லியன்ட் ப்ளூ 151 & E151 Activated Vegetable Carbons, Brilliant Black154 Food Brown, Kipper Brown, Brown FK155 & E155 Chocolate Brown HT, Brown HT
போன்ற சாயப் பொருட்கள் ஹைப்பர் ஆக்டிவிட்டி, ஆஸ்த்மா, புற்று நோய் உருவாக்ககூடும்.
120 &
E120 Carmines, Cochineal, 142 & E142 Acid Brilliant Green, Green S,, 160b & E160b Bixin, Norbixin, Annatto Extracts 143 Fast Green போன்ற சாயப் பொருட்கள் ஹைப்பர் ஆக்டிவிட்டி, ஆஸ்த்மா போன்றவற்றை உருவாக்ககூடும்.
150 & E150 Caramelஇது ஹைப்பர் ஆக்டிவிட்டி உருவாக்கும்.
 பென்சோயேட்ஸ் (Benzoates) : பதனீட்டுப் பொருள். ஆஸ்துமா நோய் உள்ளவர்களிடையே நெஞ்சில் இறுக்கமான உணர்வை ஏற்படுத்தும். தொண்டையில் அரிப்பு அல்லது புண் ஏற்படலாம். Butylated Hydroxyanisole (BHA), Butylated Hydroxytoluene (BHT) : காற்றுபுகாமலிருக்க பயன்படுத்தப்படும் பொருள்-பொதுவாக குழந்தை உணவுகள் சுவிங்கம், தாவர எண்ணெய் ஆகியவற்றை கெடாமல் வைத்திருக்கிறது். இது கான்சர் காரணி மற்றும் சிலரிடையே தோல் எரிச்சலை ஏற்படுத்தலாம்.
எப்.டி. & சி (FD & C dyes) : வர்ணங்கள்-இது சிலரிடையே அரிப்பை ஏற்படுத்தலாம். குழந்தைகளின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
Monosodium Glutamate (MSG) : தலைவலி, குமட்டல், வயிற்றுப்போக்கு, வியர்வை, நெஞ்சில் இறுக்கம், கழுத்துக்குப் பின்னால் எரிச்சல், ஆஸ்துமா நோயாளிகளிடையே அதிக ஆஸ்துமாவை ஏற்படுத்தும். குறிப்பாக விளையாட்டு வீரர்கள் திடீரெனெ இதய நோய் தாக்குதலுக்குள்ளாவதில் இதன் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. நைட்ரேட் (Nitrates) : பதனீட்டுப் பொருள்-தலைவலி.பாராபென் (Parabents) : பதனீட்டுப் பொருள்-கடுமையான தோல் நோய், வீக்கம் அரிப்பு.
சல்பைட் (Sulfites) : பதனீட்டுப் பொருள்-வைட்டமின் B1 ஐ அழிக்கிறது. நெஞ்சில் இறுக்கம், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, குறைந்த இரத்த அழுத்தம், பலஹீனம், சிறு அளவு கூட சிலரிடையே ஆஸ்துமா நோயை ஏற்படுத்தும், மோசமாக்கும்.
Propyl Gallate: இது எண்ணெய் மற்றும் கொழுப்புப் பொருட்கள் கெடாமல் வைத்திருக்க உதவும். தாவர எண்ணெய், பதப்படுத்தப்பட்டஇறைச்சி, உருளைக்கிழங்கு சிப்ஸ், சிக்கன் சூப்பேஸ் மற்றும் சுவிங்கம் ஆகியவற்றில் பயன் படுத்துகிறார்கள். இது புற்று நோய் உருவாக்ககூடும்.
Potassium Bromate: ரொட்டிகளில் சேர்க்கப்படும் இந்தப்பொருள் புற்று நோய் ஏற்ப்படுத்தலாம்.
Aspartame (Equal, Nutra Sweet): இது டயட் சோடா மற்றும் டயட் உணவுகளில் சர்க்கரைக்குப்பதில் பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்பு. இது மூளையில் டியூமர் கட்டியை உருவாக்கும் என அறியப்பட்டது. மிக குறைந்த அள்வு உட்கொள்ளுவது கூட Lymphomas மற்றும் Leukemi நோயை உருவாக்ககூடும். சிலருக்கு தலைவலி, மந்தம், மனக்குழப்பம், மத்திய நரம்பு மண்டல பாதிப்பு, மாதவிடாய் பாதிப்பு, கருவில் மூளைப்பாதிப்பு உருவாக்கக்கூடும்.
Neotame: இது Aspartame போன்றது ஆனால் அதை விட அதிக நச்சுடையது.
Acesulfame-K: சர்க்கரையை விட 200 மடங்கு இனிப்பான இப்பொருள். கேக்குகள், சுவிங்கம், ஜெல்லி, மற்றும் குளிர் பானங்களில் சேர்க்கப்படுகிறது. இது கேன்சர், தைராய்ட் பாதிப்பு உண்டாக்கலாம்.
Olestra: இது ஒரு செயற்க்கைக் கொழுப்பு. உடலால் உறிஞ்சப்படாதது, வயிற்றோட்டம் , வயிற்று வலி போன்ற பல பாதிப்புகளை உண்டாக்கும்.
Sodium Nitrite (Sodium Nitrate): இறைச்சி பதப்படுத்தவதில் உபயோகப்படுகிறது. இது கான்சர் காரணியான Nitrosamine ஐ உருவாக்குகிறது.
Hydrogenated Vegetable Oil: இவ்வாறு பதப்படுத்தப்பட்ட தாவர எண்ணெய்கள் Trans Fat ஐ உருவாக்குகிறது. இது இதய நோய் மற்றும் நீரிழிவுக்கு வழி வகுக்கும்.
Brominated Vegetable Oil : பிறவிக்குறைபாடு, உடல் உறுப்பு வளர்ச்சியின்மைக்கு காரணமாகும்.
Blue 1 and Blue 2: குளிர்பானங்கள் மற்ரும் மிட்டாய்களில் உபயோகப்படும் சாயப்பொருள். இது கான்சர் மற்றும் ட்யூமர் உருவாக்ககூடும்.
Red 3: மிட்டாய் மற்றும் செர்ரியில் பயன்படும் வண்ணப்பொருள் இது தைராய்ட் மற்றும் ட்யூமர் உருவாக்கக்கூடும்.
Yellow 6: கேக்குகள், மிட்டாய்கல், ஜெல்லிக்கள், சாசேஜ் ஆகியவற்றில் பயன் படுத்தப்படுகிறது. அட்ரீனல், சிறுநீரகக்கட்டி, மற்றும் கான்சர் உருவாக்கக் கூடியது.
அப்பப்பா ...பயங்கரம் ..சில கம்பனிகளின் பொருளாசைக்கு பலியாகி எத்தனை விதமான வடிவத்தில் ரசாயனபொருட்களை நமது உணவில் கலந்து உள்ளே தள்ளுகிறோம். இனியாவது எந்தஉணவுப் பொருள் வாங்கினாலும் அதன் "INGREDIENTS"அல்லது "காங்டைன்ஸ்" என்று இட்டிருப்பதை ஒருமுறை வாசித்துப் பார்த்துவிட்டு புற்றுநோய் போன்ற பேராபத்துகளை விலைகொடுத்து வாங்க வேண்டுமா? பிள்ளைகளுக்கு தரலாமா? என்றெல்லாம் ஒன்றுக்கு இரண்டு யோசித்து வாங்குங்கள்.
பெரியவர்களைப்போல் குழந்தைகள் உடல் உணவில் கலந்துள்ள இந்த விஷ்ப் பொருட்களை விரைந்து வெளியேற்ற இயலாது. ஆனால் துரதிஸ்ட வசமாக அனேக குழந்தை உணவுகளே விஷம் மலிந்து கிடக்கிறது.
சர்க்கரை, உப்பு , எண்ணெய் அதிக அளவு உட்கொள்வது உண்ணும் மூளையின் இயற்கையான ரசாயன சமநிலையை பாதித்து, உணவில் அதிக ஆர்வம் உண்டாக்கி அத்தகைய உணவுகளுக்கு அடிமையாக்கிவிடும்.
ஹோட்டல்கள், ரெஸ்டாரென்ட்களில் சாப்பிடுவதை அடியோடு தவிர்க்கவும். முடிந்தவரை உணவுப்பொருட்களை அதன் அடிப்படை பொருளாகவே அவ்வப்போது வாங்கி ஃப்ரெஷ் ஆகவே உண்ணுங்கள். அதற்கேற்ப உணவுப் பழக்கத்திலும் மாற்றம் செய்து கொள்ளுங்கள். பணத்தையும் மிச்சப்படுத்துங்கள்.

மனித உடலில் அதிகரிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள்

 ஐக்கிய அமெரிக்க நாடுகள் என்றழைக்கப்படும் யு எஸ் நாட்டில் வாழும் மக்களிடம் மிக அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்துகள் உடலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் பெண்கள் மெக்ஸிகோ வம்சாவளியினர் ஆகியோரிடம் மற்ற மக்களிடம் இருப்பதை விட அதிக வீதத்தில் இந்த பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.


பூச்சிக்கொல்லி தடுப்பு அமைப்பு என்ற Pesticide Action Network அமைப்பு பல அமெரிக்க மருத்துவமனைகளிடமிருந்து பெற்ற விவரங்களைக் கொண்டு சுமார் 2648 மக்களிடம் 34 வகை பூச்சிக்கொல்லிகளின் அளவை ஆராய்ந்து கண்டறிந்துள்ளது.
இந்த ஆராய்ச்சி ' ரசாயன ஆக்கிரமிப்பு : நம் உடலில் இருக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் பெரும் நிறுவனங்களின் பொறுப்பும் ' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. அரசாங்கமே வகுத்த பாதுகாப்பான அளவு என்ற அளவை மீறி இந்த மக்களிடம் பூச்சிக்கொல்லி மருந்து அளவு இருப்பதை இவர்களது ரத்தம் மற்றும் சிறுநீர் ஆகியவற்றை அளந்து கண்டறிந்துள்ளனர்.


'மக்களை பூச்சிக்கொல்லி மருந்துகளிடமிருந்து காப்பாற்றுவதில் நம்அணுகுமுறை தோல்வியடைந்ததையே இந்த ஆராய்ச்சி வெளிக்கொண்டுவந்து காட்டுகிறது ' என்று கிரிஸ்டின் ஷாபெர் கூறுகிறார். இவர் இந்த ஆராய்ச்சியின் ஒருங்கிணைப்பாளர். 'இந்த பூச்சிக்கொல்லிகளை விவசாயத்திலும் மற்ற பகுதிகளிலும் எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்பதைப் பற்றிய புதிய அணுகுமுறையை இந்த ஆராய்ச்சி தரும் என்று நம்புகிறோம். ' என்று இவர் கூறுகிறார்.
சான் பிரான்ஸிஸ்கோவை மையமாகக் கொண்ட இந்த அமைப்பு பூச்சிக்கொல்லிகளை நாம் எவ்வாறு உபயோகப்படுத்துகிறோம் என்பதையும், பூச்சிக்கொல்லிகளுக்கு மாற்றாக இருக்கும் பல பொருட்களை பிரபலப்படுத்துவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டது. இவர்கள் ஆராய்ச்சி செய்த 23 பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஒரு சராசரி ஆள் சுமார் 13 பூச்சிக்கொல்லி மருந்துகளை அளவுக்கு அதிகமாக உடலில் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த பூச்சிக்கொல்லிகளில் பல, மலட்டுத்தன்மை, பிறப்புக்கோளாறுகள், கான்ஸர் மற்றும் பல தீவிரமான ஆரோக்கியப்பிரச்னைகளுக்கு காரணம் என இந்த அமைப்பு தெளிவுபடுத்துகிறது.


'பல ஆராய்ச்சிகள் இப்படிப்பட்ட பூச்சிக்கொல்லிகளில் மிகக்குறைவான அளவுகூட தீய விளைவுகளை நம் உடலில் ஏற்படுத்த வல்லவை என்பதையே உறுதிசெய்கின்றன ' என்றும் இந்த அமைப்பு கூறுகிறது.

6 முதல் 11 வயதான குழந்தைகள் நரம்புகளைப் பாதிக்கும் குளோர்பைரிஃபோஸ் chlorpyrifos என்ற பூச்சிக்கொல்லியை அமெரிக்க அரசாங்கம் வகுத்திருக்கும் அதிக பட்ச அளவைவிட 4 மடங்கு அதிகமாக கொண்டிருக்கின்றன என்பதும் இந்த ஆராய்ச்சி தெரிவிக்கும் விஷயம். இந்த குளோர்பைரிஃபோஸ் chlorpyrifos மருந்து பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைப் பாதித்துஅவைகளை கொல்லும் வகையான பூச்சிக்கொல்லி.


சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு என்ற அமெரிக்க அரசுப் பிரிவு இந்த ஆய்வுகளில் உண்மை இருப்பதை ஒப்புக் கொள்கிறது. 'மேற்கொண்டு ஆய்வுகள் தேவை. இந்த ஆய்வின் மையக் கருத்தைப் பற்றி ஆய்வுகள் செய்ய வேண்டும் ' என்பதும் இந்த அமைப்பின் கருத்து.


டோ கெமிக்கல் கார்ப்பரேஷன் Dow Chemical Corp என்ற வேதி நிறுவனமே அமெரிக்காவில் இருக்கும் 80 சதவீத குளோர்பைரிஃபோஸ் உற்பத்திக்குக் காரணம். (இதுவே வால்ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற அமெரிக்க வியாபார பத்திரிக்கையை நடத்துகிறது. இந்த நிறுவனமே யூனியன் கார்பைட் நிறுவனத்தை வாங்கியது)


டோ கெமிக்கல் நிறுவனத்தின் வெளியுறவு பேச்சாளர் காரி ஹாம்லின் தன்னுடைய கம்பெனியே அமெரிக்காவின்மிகப்பெரிய பூச்சிக்கொல்லி உற்பத்தி நிறுவனம் என்று உறுதி செய்தார். இருப்பினும், இந்த பூச்சிக்கொல்லிகள் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாமல் வெகு விரைவிலேயே மனித உடலிலிருந்து வெளியேறிவிடும் என்றும் கூறினார். மனித உடலில் இருக்கும் ரத்தத்திலும் சிறுநீரிலும் இந்த வேதிப்பொருள் இருப்பதாலேயே இவை மனித உடலுக்கு பாதிப்பேற்படுத்தும் என்பதற்கான எந்த விதமான நிரூபணமும் இல்லை என்றும் கூறினார்.

குளோர்பைரிஃபோஸ் பரந்து உபயோகப்படுத்தப்படுகிறது. மனிதர்கள் மிகமிக குறைந்த அளவிலேயே இந்த பூச்சிக்கொல்லிக்கு வெளிப்படுத்தப்படுகின்றனர். பூச்சிக்கொல்லி மக்கள் உடலில் வரும்போது மிக வேகமாக இது உடைந்து உடலிலிருந்து சில நாட்களுக்குள் வெளியேற்றப்பட்டுவிடுகிறது ' என்றும் இவர் கூறுகிறார்.ஆராய்ச்சி, பெண்கள் மிக அதிக அளவில் இந்த பூச்சிக்கொல்லியை உடலில் கொண்டிருக்கிறார்கள் என்றும், இந்த ஆர்கனோ குளோரின் எனப்படும் மூன்றுவகை பூச்சிக்கொல்லிகள் குழந்தைகளின் பிறக்கும்போது எடைக்குறைவாய்ப் பிறக்க காரணம் . குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிப்பவையாகவும் இருக்கின்றன என்றும் கூறுகிறார்.மெக்ஸிகன் வம்சாவளியினர் மிக அதிக அளவில் லிண்டான் டிடிடி மற்றும் மெத்தில் பார்தியான் ஆகிய lindane, DDT and methyl parthion பூச்சிக்கொல்லிகளை உடலில் கொண்டிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

ஏன் சில பிரிவினர் அதிக அளவில் இந்தப் பூச்சிக் கொல்லிகளை உடலில் கொண்டிருக்கிறார்கள் என்று ஆய்வு செய்யப்படவில்லை. இவர்கள் எங்கே வசித்தார்கள் என்பது பற்றி தகவல்கள் சேகரிக்கப்படவில்லை. தண்ணீர், உணவு, மற்றும் சுவாசத்தினால் பூச்சிக் கொல்லிகள் உடலில் சேரலாம் என்று தெரிகிறது.பூச்சிக் கொல்லிகள் தயாரிக்கும் கம்பெனிகள் இதற்குப் பொறுப்பேற்கவேண்டும் என்று இந்த அமைப்புக் கோருகிறது. பூச்சிக்கொல்லிகள் பரவுதல் பற்றி ஆய்வு இன்னமும் தீவிரப் படவேண்டும் என்றும் இந்த அமைப்புக் கோருகிறது. ஆபத்தான பூச்சிக் கொல்லிகளைத் தடை செய்யவேண்டும். பூச்சிக் கொல்லிகள் தயாரிப்பாளர்கள் மனித ஆரோக்கியம் கெடாது என்று நிரூபிக்க வேண்டும் என்று வற்புறுத்த வேண்டும்.
பூச்சிக்கொல்லி கலவை பார்க்கின்ஸன் வியாதிக்குக் காரணமா ?

மிக அதிகமாக சாதாரணமாக உபயோகிக்கப்படும் இரண்டு பூச்சிக்கொல்லி மருந்துகள், எலிகளின் உடலுக்குள் செலுத்தப்பட்டால், அவை பார்க்கின்ஸன் வியாதி உருவாக்குவது போலவே மூளையைச் சேதம் செய்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.


எலிகளுக்கு களை அழிக்கும் பாராக்வெட் paraquat உம், காளான் அழிக்கும் மானெப் maneb உம் சேர்த்துக் கொடுத்தால் பார்க்கின்ஸன் இந்த எலிகளில் உருவாவதையும் மூளை அழிவையும் ரோச்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் மருத்துவ, பல்மருத்துவப் பள்ளி ஆராய்ச்சியாளர்களான டெபோரா கோரி ஸ்லேச்டா அவர்களும் அவரது உதவியாளர்களும் தெரிவித்திருக்கிறார்கள்

இரண்டு வேதிப்பொருகளில் ஒன்று மட்டும் கொடுத்தால் இந்த தனிப்பட்ட அடையாளம் கொண்ட மூளை அழிவு தோன்றுவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.


இந்த கண்டுபிடிப்பும் இது போன்ற பல கண்டுபிடிப்புகளும், பூச்சிக்கொல்லிகள் போன்ற வேதிப்பொருள்களுடன் தொடர்ந்து மனித உடல் தொடர்பு கொள்வது, மூளை பாதிப்புக்கு வழிவகுக்கும் என்ற சாட்சியத்துக்கு வலிமை சேர்க்கிறது.

'இதுவரை யாரும் வேதிப்பொருள்களை சேர்த்து செலுத்தி பரிசோதனை நிகழ்த்தவில்லை, இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு ' என்று கோரி-ஸ்லேச்டா சொல்லியிருக்கிறார்.


'எனவே யாருக்கு பார்க்கின்ஸன் வரும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ' என்று இந்த ஆராய்ச்சியில் பங்கு வகித்த நரம்பியல் மூளையியல் வல்லுனர் டாக்டர் எரிக் ரிச்ஃபீல்ட் கூறுகிறார்.


யாருக்கு எந்த அளவில் இந்த வேதிப்பொருள்கள் உடலில் சேரும் என்றும், ஒரு தனிமனிதருக்கு இந்த வியாதி வர அவருக்கு எவ்வளவு வேதிப்பொருள் அவர் உடலில் சேரவேண்டும் என்றும் குறிப்பாகச் சொல்லமுடியாது. உலகத்தில் ஏராளமான வேதிப்பொருள்கள் பூச்சிக்கொல்லிகளாக உபயோகப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு அளவில் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டு மூன்று வேதிப்பொருள்கள் உடலில் சேர்வதை எப்படி அளவிடுவது ? ' என்றும் ரிச்ஃபீல்ட் கூறுகிறார்.

அமெரிக்காவில் மட்டும் சுமார் 500000 பேரை பாதிக்கும் பார்க்கின்ஸன் வியாதி, வளர்ந்து கொண்டே போகும், தீராத ஒரு வியாதி. இது மூளையில் டோபோமைன் என்ற ஒரு திரவத்தை உருவாக்கும் மூளைச்செல்களை பாதிக்கிறது, இந்த டோபோமைன் திரவமே மனிதர்கள் நடப்பதற்கும் அசைவதற்கும் செய்தி கொண்டு செல்லும் திரவம்.

இவ்வியாதியுற்றவர்கள் கை நடுங்க ஆரம்பிக்கும். பின்னர் உடல் முழுக்க பக்கவாதம் வந்து இறப்பர். இந்த வியாதிக்கு மருந்து இல்லை. இருக்கும் மருந்துகளும் இந்த வியாதியின் வளர்ச்சியை மெதுவாக்குமே தவிர தீர்வு ஒன்றுதான்.


இந்த வியாதி, போப்பாண்டவர் ஜான் பால் அவர்களுக்கும், நடிகர் மைக்கல் ஜே ஃபாக்ஸ் (Back to the future) குத்துச் சண்டை வீரர் முகமது அலிக்கும் இருக்கிறது,

ஆராய்ச்சியாளர்கள், தவறான ஜீன் காரணமாகவும் சுற்றுப்புற சூழ்நிலை காரணமாகவும் இது வருகிறது என்று சந்தேகித்து வந்திருக்கிறார்கள். முக்கியமான சந்தேகம் பாஸ்பேட் பூச்சிக்கொல்லிகள். இந்த பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளின் நரம்பு மண்டலத்தை பாதிக்க உருவாக்கப்பட்டவை.


நியூரோஸைன்ஸ் என்ற இதழில் கோரி ஸ்லேச்டாவின் குழு பாராக்குவெட், மானெப் என்ற இரண்டு பூச்சிக்கொல்லிகளைப் பற்றி ஆராய்ந்த கட்டுரை வெளியாகியிருக்கிறது. இந்த இரண்டும் உருளைக்கிழங்கு, தக்காளி, முட்டைக்கோஸ், சோளம், சோயா, பருத்தி, பழங்கள், இவைகளின் வளரும் செடிகள் மேல் தெளிக்கப்படுகின்றன கோடானுகோடி ஏக்கரில்.

இரண்டில் ஒன்று மட்டும் கொடுப்பது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. இரண்டையும் சேர்த்துக் கொடுத்தால், இந்த மூளை பாதிப்பின் தெளிவான அடையாளம் தெரிகிறது. எலிகள் மெதுவாக நடந்தன. டைரோஸின் ஹைட்ராக்ஸிலேஸ் என்ற திரவத்தின் அளவு மிகவும் குறைவாக எலிகளின் உடலில் உற்பத்தியானது. (இந்த திரவம் உடலில் டோபோமைன் ஆரோக்கியமாக இருப்பதை அளவிட உதவுகிறது)


எலிகளின் உடலில் நான்கு பங்கு அளவு reactive astrocytes பிற்போக்கு அஸ்ட்ரோசைட்டுகள் அதிகமாயின. இந்த பொருள்கள் மூளைபாதிப்பு எந்த அளவு இருக்கிறது என்பதை அளவிட உதவும். இந்த எலிகளுக்கு 15சதவீத அளவு குறைந்த டோபோமைன் நியூரான்களும், 15 சதவீத அளவு குறைந்த டோபோமைனும் இந்த எலிகள் உற்பத்தி செய்தன.


டாக்டர் ரிச்ஃபீல்ட் அவர்கள், ஒரு வேதிப்பொருள் மூளைப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் இன்னொரு வேதிப்பொருள் அதற்கு துணை செய்கிறது என்றும் கருதுகிறார். இதை ஆராய்ச்சி செய்தே அறியவேண்டும் என்றும் கருதுகிறார்.

**
பின் குறிப்பு:

1. இந்த செய்தி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தயாரித்தளித்த செய்தி. நன்றி
2. மீண்டும், வேப்பிலை, வேப்பம் புண்ணாக்கு மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்துவதை இந்திய விவசாயிகள் யோசிக்க வேண்டும். வேப்பம் புண்ணாக்கு ஏற்றுமதி மூலம் உலக மக்களை செயற்கை பூச்சிக்கொல்லிகளிலிருந்து காப்பாற்றவும் இயலும். அதற்குள் யாராவது வேப்பம்புண்ணாக்கை பாடண்ட் பண்ணிவிடாமல் பார்த்துக்கொண்டால் நல்லது.

கொத்து மல்லி, லவங்கம் போன்ற வாசனைப்பொருள்களைப் பயன்படுத்தி பூச்சிக்கொல்லி மருந்தினை முர்ரே இஸ்மான் (பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம்) என்பவர் தயாரித்திருக்கிறார்.

வாசனை திரவியங்களில் இருக்கும் எஸ்ஸென்சியல் ஆயில் எனப்படும் வாசனை எண்ணெய்கள் பூச்சிகளை, புழுக்களை, லார்வாக்களை அவற்றின் முட்டைகளை கொல்லக்கூடியன. இவற்றைப் பூச்சிக்கொல்லி மருந்துகளாகப் பயன்படுத்துவதில் புத்திசாலித்தனம் இருக்கிறது. முதலில் இவற்றைப் பயன்படுத்துவதற்கு சட்டபூர்வமான அனுமதி வாங்குவது சுலபம். ஏனெனில், இவை மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்காதவை என்பது ஏற்கனவே தெரிந்தது. இரண்டாவது து செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளைவிட இயற்கைக்குப் பாதுகாப்பானது. து இயற்கைக்குப் பாதுகாப்பானதோ அது மனிதனுக்கும் பாதுகாப்பானது என்பது உண்மை.
பூச்சிகள் சீக்கிரமே மருந்துகளுக்கு சமாளிப்புத்தன்மைகளைப் பெற்றுவிடுவதால், செயற்கை மருந்துகளை அடிக்கடி மாற்ற வேண்டியுள்ளது, அந்தப் பிரச்சனை இயற்கை மருந்துகளுக்குக் கிடையாது. இதில் சில சிக்கல்களும் இருக்கின்றன. செயற்கை மருந்துகளை ஒருதரம் தெளித்தால் ஒருமாதத்திற்கு கவலையில்லாமல் இருக்கலாம்; இயற்கை மருந்துகளை அடிக்கடிப் பயன்படுத்த வேண்டியிருக்கும். சீக்கிரமே ஆவியாகி இவை காற்றில் கரைந்துவிடுவதே காரணம். இதை ஏதாவது ஒரு முறையில் தடுக்க முடிந்தால் இயற்கை மருந்துகளுக்கு ஈடு இருக்காது.

வியாழன், 3 ஜூன், 2010

விவசாயிகளுடன் விளையாடும் மான்சாண்டோ

உலகில் பருத்தி உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. பருத்தி ஏற்றுமதியிலும் இந்தியாவுக்கு 2-வது இடம். ஆண்டுக்கு 240 லட்சம் பேல்கள் பருத்தி (ஒரு பேல் என்பது 170 கிலோ பருத்திப் பொதி) இந்தியாவில் உற்பத்தியாகிறது. 90 லட்சம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்படுகிறது. பருத்தியை நம்பி 40 லட்சம் விவசாயக் குடும்பங்கள் வாழ்கின்றன.
ஆனால், பருத்தி விவசாயிகளுடன்தான் விளையாடுகிறது மான்சாண்டோ நிறுவனம். இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.

மான்சாண்டோ நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு பி.டி. பருத்தி வகையை அறிமுகம் செய்தது. பல்வேறு நோய்களைத் தாங்கி வளரும் என்றும், இதில் மரபீனியிலேயே புழுக்களை அழிக்கும் மூலக்கூறுகள் இருப்பதால் புழுத்தாக்குதல் இருக்காது என்றும் சொல்லி விற்பனை செய்தது. பருத்தி, ஆடைக்குத்தானே பயன்படுகிறது; இதனால் மனிதருக்கு என்ன பாதிப்பு என்று மான்சாண்டோவுக்கு ஆதரவான குரல்கள் எழுந்தன. இருந்தாலும்கூட, இந்த பி.டி. பருத்தியில் கிடைக்கும் பருத்திப் பிண்ணாக்கை மட்டுமல்ல, பருத்தி இலையைத் தின்னும் ஆடுகள்கூட இறக்கின்றன. இந்த ஆடுகளின் பால் மனிதருக்குக் கேடு விளைவிக்கும் என்றெல்லாம் கூட இயற்கை விவசாயப் போராளிகள் குரல் கொடுத்து ஓய்ந்துபோனார்கள்.

இப்போது மான்சாண்டோ நிறுவனம் ரொம்ப நியாயஸ்தன் போல ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதாவது, "குஜராத்தில் நடத்திய கள ஆய்வுகளில், இளஞ்சிவப்பு புழுக்களை எதிர்த்து வளரும் சக்தியை பி.டி. பருத்தி விதைகள் இழந்துவிட்டன. இந்தப் புழுக்கள் தங்களுக்குள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொண்டுவிட்டதால் இனிமேல் பி.டி. பருத்தியில் 2-வது ரகத்தை விவசாயிகள் வாங்குவதுதான் நல்லது' என்று யாரும் கேட்காமலேயே அறிக்கை வெளியிட்டுள்ளது.

மான்சாண்டோ இந்த அறிக்கையை நியாயஸ்தன் போல வெளியிட்டாலும் இதன் மூலம் இரண்டு விஷயங்கள் அம்பலப்பட்டு இருக்கின்றன. ஒன்று, புழு, பூச்சித் தாக்குதலைத் தாங்கி வளரும் என்பது வெறும் பொய்தான். இரண்டாவது, இது ஒரு வியாபார உத்தி. காப்புரிமை பெற்ற பி.டி. விதைகளுக்குக் குறிப்பிட்ட காலம்வரைதான் உரிமத்தொகையைக் காட்டி விலை நிர்ணயம் செய்ய முடியும். குறிப்பிட்ட ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னர், அந்த விதைக்கான உரிமத்தொகை பெறும் உரிமை காலாவதியாகிவிடும். ஆகவே, தற்போது புதிய ரகம் என்ற பெயரில் பி.டி.பருத்தியின் இரண்டாவது ரகத்தை மான்சாண்டோ அறிமுகம் செய்கிறது. முதல் ரகம் தகுதியற்றது என்று சொல்வதன் மூலம் விவசாயிகள் அனைவரும் இரண்டாவது ரகத்துக்கு மாறியே ஆக வேண்டும்.

இந்த உத்தி இந்தியாவுக்குப் புதிது. அமெரிக்காவுக்குப் பழையது. உலகில் 90 சதவீத உயிரி-தொழில்நுட்பப் பயிர்களைக் கையாளும் மான்சாண்டோ, அமெரிக்காவில் அறிமுகம் செய்த மரபீனி மாற்றப்பட்ட சோயாபீன் விதைகளுக்கான உரிமத்தொகை பெறும் உரிமை 2014-ல் முடிகிறது. ஆகவே, அங்கேயும் புதிதாகக் காப்புரிமை பெற்றுள்ள இரண்டாம் வகை சோயாபீன் விதைகளைப் பயன்படுத்த விவசாயிகளைத் தூண்டில் போட்டுக்கொண்டிருக்கிறது மான்சாண்டோ.

மத்திய பருத்தி ஆய்வுக் கழகத்துக்கு இதுபற்றி தாங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தெரிவித்துவிட்டதாக மான்சாண்டோ நிறுவனத்தின் இந்திய இயக்குநர் கூறியபோதிலும், இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு இதுவரை தகவல் தெரியாது என்பது ஆச்சரியமான ஒன்று. இத்தகைய பி.டி. ரக விதைகளுக்கு அனுமதி அளிப்பதே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்தான். ஆனால் அவர்களுக்கு மான்சாண்டோ அறிக்கை வெளியிட்டு, பத்திரிகையில் வெளியான பிறகுதான் தகவல் தெரியும் என்றால், நம்ப முடிகிறதா!

வியாபாரத்துக்காக மான்சாண்டோ போன்ற நிறுவனங்கள் இந்தியாவுக்குள் புகுந்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எந்தவொரு பி.டி. ரக பயிருக்கும் அனுமதி பெறலாம், திடீரென்று இந்த விதை சரியில்லை; ஆகவே எங்களுடைய அடுத்த தயாரிப்பு விதைகளை வாங்கு என்று சொல்லலாம், விலையை தானே நிர்ணயிக்கலாம் அல்லது தான் விரும்புகிற விலையை நிர்ணயிக்கும்படி மத்திய அரசை வளைக்கலாம்...ஆனால் விவசாயிகள்? தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

பருத்தி உற்பத்தியில் உலகிலேயே இரண்டாம் நிலையில் இருக்கிறோம் என்ற எண்ணமோ பொறுப்போ இல்லாமல் மத்திய அரசு இத்தகைய பன்னாட்டு நிறுவனங்களை இந்திய விவசாயிகளிடம் நெருங்கவிடுகிறது. 40 லட்சம் குடும்பங்களின் வாழ்க்கை நாம் மேற்கொள்ளும் முடிவுகளில்தான் இருக்கிறது என்ற பச்சாதாபம்கூட அரசிடம் இல்லை. மான்சாண்டோ போன்ற நிறுவனங்களின் வியாபாரத்தை தடுத்து நிறுத்தவும் தெம்பில்லை.

இதே நிலைமைதான் பி.டி கத்தரியிலும் ஏற்படும் என்பது நிச்சயம். இப்போது பி.டி மக்காச்சோளத்தை நமது வேளாண் பல்கலைக்கழகத்தில் கள ஆய்வு நடத்தி உற்பத்தி செய்து வருகிறார்கள். இன்னும் 40 உணவுப் பயிர்களுக்கு ஆய்வுகள் நடக்கின்றன.

ஒரு விவசாயி, கிராமப்புறச் சூழலில் கிடைக்கும் காட்டுத்தழை, வீட்டுக்குப்பை, ஆடு மாடுகளின் சாணம் என்று வயலில் போட்டு, தனது மாடுகளைக் கட்டி உழுது, அறுவடை செய்து, அடுத்த சாகுபடிக்கு விதைநெல் எடுத்து வைத்து, மற்றதை விற்றுப் பணம் பார்த்து.... அந்த அமைதியான வாழ்க்கையை விரட்டுகின்றன மான்சாண்டோ நிறுவனங்கள். அதற்குத் துணை போகிறது அரசு.

இன்றைய விவசாயி ரசாயன உரத்துக்காகச் செலவிட வேண்டும். ரசாயன உரம் விற்போர் கொழிப்பார்கள். டிராக்டரையும், அறுவடை இயந்திரங்களையும் நம்பியே வாழவேண்டும். இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் விநியோகஸ்தர்களும் கொழிப்பார்கள். விதைகளுக்கும் மான்சாண்டோவைப் போன்ற நிறுவனங்களையே நம்பியிருக்க வேண்டும். இத்தனையையும் மீறி, மழை பெய்து, விளைந்தால், அதற்கும் நியாயமான விலை கிடைக்காது. விவசாயத்தை அழிப்பதற்கு இதைவிட நல்ல உத்தி இருக்க முடியுமா!

இதையெல்லாம் மீறி இந்தியாவில் விவசாயம் நடக்கிறதென்றால், மண்ணை நேசிக்கும் விவசாயிகள் இன்னமும் இருக்கிறார்கள் என்பதைத்தவிர வேறென்ன!

விவசாயிகள், குறிப்பாக தமிழக விவசாயிகள், தற்சார்பு தன்மைகொண்ட பாரம்பரிய விவசாயத்துக்கு மாறுவதைத் தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும். இயற்கை வேளாண்மைக் கொள்கையை தமிழக அரசு அறிவித்து, விவசாயிகளுக்கு புதிய பாதையைக் காட்ட வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.