சனி, 24 ஏப்ரல், 2010

அறிவியல் அற்புதம் நிறைந்த வேம்பு

          மேலை நாட்டு அறிவியல் வல்லுனர்கள் இந்திய குடும்ப பெண்கள், பல நூற்றாண்டு களாக நம்பி வந்த கருத்தை அறிவியல் மூலம் நிரூபித்துள்ளனர். அதுதான் வேப்ப மரத்தின் பயன். வேப்ப மரத்தின் நோய் நீக்கும் பயனை தற்போது அமெரிக்க விஞ்ஞானிகள் அறிந்துள்ளனர்.

கிராமங்களின் மருத்துவ சாலை

வாஷிங்டனில் உள்ள தேசிய விஞ்ஞான ஆய்வு மையத்தில் வேப்பமரம் பற்றிய சிந்தனை கள் ஒரு புதிய திருப்புமுனையை உருவாக்கியுள்ளது. வேப்ப மரம் பல்லாயிரக்கணக்கான மக் களுக்கு விலை குறைவான மருந்துகளை தருகிறது. வேப்பமரம் எண்ணிக்கையில் அதிகம் வளர்வதால் சுற்றுப்புற சூழ்நிலையை பாதுகாக்கிறது. பூமியில் சூரியனின் வெப்ப தாக்குதல் குறைகிறது.

வேப்ப மரம் கிராமங்களின் மருத்துவச் சாலை என்ற கருத்தை அமெரிக்க விஞ்ஞானி கள் வலியுறுத்துகின்றனர். கி.பி.1959-ல் ஜெர் மானிய பூச்சிக்கொல்லி அறிஞர் திரு. ஹெயன் ரிச் ஸ்கூமுட்டர் சூடானில் ஒரு அதிசயத்தை கண்டார். பூச்சிகள் ஒரு தோட்டத்தை நாசமாக்க படை யெடுத்து சென்றன. தோட்டத்தில் இருந்த வேப்ப மரத்தை தவிர அனைத்து செடி, கொடிகளும் நாசமாயின. இந்த அதிசயத்தை கண்ட ஜெர் மானிய விஞ்ஞானி இதனை உலகுக்கு அறிவித் தார். புதுடெல்லியில் இருக்கும் இந்திய விவசாய கழகத்தில் இருந்து வெளியாகும் பத்திரிகையில் மூன்று மாதத்துக்கு ஒரு முறை வேப்பமரத்தின் பயன்குறித்து கட்டுரைகள் வெளிவரலாயின.

வேப்ப மரப்பட்டையின் சாறு மாத்திரை களாக தயாரிக்கப்பட்டு ஆண்கள் உட்கொண் டால் ஆண்களுக்கு அது இயற்கையிலேயே ஒரு குடும்ப கட்டுப்பாட்டு சாதனமாக அமைகிறது. வேப்ப மரப்பட்டைகள் மற்றும் வேப்ப இலைகள் இயல்பாகவே ஒரு பூச்சி கொல்லி மருந்தாக வேலை செய்கிறது.

பூச்சிக்கொல்லி மருந்து

வேப்ப மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பருத்தி மற்றும் புகை யிலைச் செடிகளை அழிக்கும் பூச்சிகளை அழிக்கிறது. இதனை சோதனை முறையில் இந்தியா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் பயன்படுத்தி அறிவியல் வல்லுநர்கள் வெற்றிகண்டனர்.

வேப்பமரம் சுற்றுப்புறச் சூழ்நிலையை பாதுகாக்கிறது. மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. அதிகமான வேப்ப மரங்கள் நடுவதால் பூமி குளிர்ச்சி அடைகிறது. எந்த சூழ்நிலை யிலும் வேப்பமர வளர்ச்சி பாதிப்பு அடைவது இல்லை. வேப்பமரம் மிக வேகமாக வளரும் மரமாகும். தொண்ணூறு அடி உயரம் வரை வளரும். பூமியின் பசுமையை காப்பாற்றும் மரம் வேப்ப மரமாகும்.

கனடாவில் உள்ள ஒட்டவா பல்கலைக்கழகம் விவசாய ஆய்வில் சிறப்பான இடத்தை வகிக்கிறது. அதில் பணியாற்றும் விஞ்ஞானி டாக்டர் ஜான் ஆர்னசான் வேப்ப மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கையான பூச்சிக் கொல்லி மருந்துகள் தற்போது சந்தையில் இடம் வகிக்கும் வேதியியல் பூச்சிக் கொல்லி மருந்துகளை பின்னுக்கு தள்ளிவிடும் என்கிறார்.

வியாபார முக்கியத்துவம்

வேப்பமரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தாவரங்களை அழிக்கும் பூச்சிகளை அவை கூட்டு புழு பருவத்தில் இருக்கும் போதே அழித்து விடுகிறது. வேப்பமரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளித்தால் அம்மருந்தின் வாசனை இருக்கும் வரை பூச்சிகள் எந்த செடியினையும் அழிக்காமல் உள்ளது. மேலும் அப்பூச்சிகள் பட்டினியால் சாவதையும் கண்டார் டாக்டர் ஜான் ஆர்னசான்.

வேப்ப மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்தில் உள்ளடையதில் டால மேட்டை விட அதிக சக்தி வாய்ந்தவை யாகும்

இத்தகு கண்டுபிடிப்புகளின் பலனாய் வேப்ப மரத்தின் முக்கியத்துவம் வியாபார முக்கியத்துவம் அடைந்து விட்டது. ரசாயன பூச்சி மருந்துகளை பயன்படுத்துவதால் ஆண்டுக்கு இருபது ஆயிரம் பேர் மரணம் அடைகின்றனர் பத்து லட்சம் பேர் நோயால் பாதிக்கப்படுகின்றனர் என கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞான டாக்டர் மர்ரே இஸ்மான் கூறுகிறார்.

ஆண்மைக் குறைவு

ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் அமெரிக்காவில் தற்போது 450 மில்லியன் டாலருக்கு விற்பனை ஆகிறது. வரும் ஆண்டுகளில் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளின் விற்பனை இரு மடங்கு ஆகிவிடும். இதனால் சுற்றுப்புற சூழ்நிலை பாதிப்பு அடைந்து விடும் என்பதை உணர்ந்த அமெரிக்க மக்கள் இயற்கை உரமான வேப்ப மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேப்பங்கொட்டையை பொடியாக்கி பயன் படுத்தும் ஊர்களில் மக்கள் மத்தியில் இரண்டு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதனால் ஆஸ்துமா என்ற ஒவ்வாமை நோய் ஏற்படுகிறது என்றும். ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது என்றும் மக்கள் கருதுகிறார்கள். இந்த ஐயப்பாட்டை வேளாண் அறிஞர்கள் களைய வேண்டிய நிலையில் உள்ளனர்.

இவ்வளவு பெருமை வாய்ந்த வேப்ப மரத்தின் காப்புரிமையைத் தற்போது அமெரிக்க அரசு இந்தியாவிடம் கோரியுள்ளது. எனவே வேப்ப மரத்தின் அவசியத்தை இந்திய மக்கள் உணர்ந்து வேப்ப மரம் வளர்த்து சுற்றுப்புறச் சூழ்நிலை பாதுகாக்க வேண்டுமாய் நமது வேளாண் விஞ்ஞானிகள் கேட்டுள்ளனர்.

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

வேளாண்மையில் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் : அறிவியலும், அரசியலும்!

மரபணு மாற்று கத்தரிக்காய், நுகர்வோருக்கு மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு (Genetic Engineering Approval Committee) அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயையும், அதைத் தொடர்ந்து அனைத்து மரபணு மாற்றப்பட்ட பயிர்களையும் சந்தையில் அறிமுகப்படுத்த வழி ஏற்பட்டுள்ளது. மரபணு மாற்று தொழில் நுட்பத்தை வேளாண்மையில் பயன்படு்த்துவதற்கு தொழில்நு்ட்ப நிபுணர்களில் ஒரு தரப்பினரும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், இயற்கை விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்களை சந்தையில் அறிமுகப்படுத்தும் முன் இது குறித்து அனைத்து தரப்பினரிடமும் விரிவான விவாதங்கள் நடத்தப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் உறுதி அளித்துள்ளார்.

இந்த விவகாரத்தை முழுமையாக புரிந்து கொள்ள மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை எளிமையாக புரிந்து கொள்ள முயற்சிப்போம்.


மரபணு என்றால் என்ன?

ஒரு உயிர் அதன் தன்மைகளை அடுத்த சந்ததிக்கு மாற்ற உதவும் அணுவை மரபணு (DNA) என்று சொல்கிறோம். இந்த மரபணுதான் தாய், தந்தையின் உருவ அமைப்புகளையும், குணாதிசயங்களையும் குழந்தைகளுக்கு கடத்துகிறது. இது மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகள், தாவரங்கள் ஆகிய அனைத்து உயிரிகளுக்கும் பொதுவானது.

இந்த மரபணுக்கள் குறித்த முழுமையான உண்மைகளை மனித இனம் இன்னும் கண்டறியவில்லை. ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த ஆய்வுகளின் ஒரு பகுதியாகவே மரபணுவை மாற்றி அமைக்கும் ஆய்வுகளும் தொடர்ந்து வருகின்றன.


மரபணு மாற்றம் (Genetic Engineering –or- Genetic Modification) என்றால் என்ன? அது எதற்காக?

மாங்கனிகளில் ஒட்டு மாங்கனி என்று ஒரு வகையை கேள்விப் பட்டிருக்கலாம். நல்ல ருசியுள்ள மா வகையையும், நல்ல விளைச்சல் தரக்கூடிய மா வகையையும் இணைக்கும் விதத்தை உயர்நிலைப்பள்ளியில் உயிரியல் பாடத்தில் படித்திருப்போம். இரு மரக்கிளைகளை விவசாயிகளே இணைத்து இந்த புதிய ரகங்களை உருவாக்கிவிடுவார்கள். இரண்டு நல்ல குணங்களையும் இணைத்து கிடைக்கும் பழத்தின் விதை புதிய வீரிய ரக மாமரத்தை உருவாக்கும். மனித முயற்சிகள் இன்றி இயற்கையிலேயே பல வீரிய ரக உயிரினங்கள் தோன்றியுள்ளன.

"The decision is a big blunder and the GEAC has taken this decision despite many dissent notes from various experts and senior scientists," said Supreme Court appointed observer in GEAC scientist Dr Pushp Bhargava.


இதை புரிந்து கொள்ள உயிர்களின் தோற்றத்தை ஆய்வு செய்து விளக்கிய அறிவியல் மேதை சார்லஸ் டார்வினின் இயற்கைத் தேர்வு கொள்கையை படித்தால் முழுமையாக புரியும்.

ஆரோக்கியமான உயிரினங்களை உற்பத்தி செய்வதற்காகவே இயற்கையும், மனிதர்களும் இது போன்ற உத்திகளை கையாண்டுள்ளனர்.

மரபணு மாற்று தொழில்நுட்பத்தை எதிர்ப்பவர்கள் எதற்காக எதிர்க்கின்றனர்?

அறிவியலும், தொழில்நுட்பமும் மனித வாழ்வின் மேம்பாட்டுக்கு மிகவும் அவசியம் என்றாலும் அதை பயன்படுத்துவதில் சில அம்சங்களை கவனிக்கவேண்டும் என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது. அறிவியலை வழிபடும் சில மேதைகள் அதன் எதிர்விளைவுகள் மற்றும் தீயவிளைவுகள் குறித்து சிந்திக்க மறந்து விடுவதாக – அல்லது – மறுத்துவிடுவதாக புகார்கள் கூறப்படுகிறது. அறிவியலும் அறம் சார்ந்து இருக்க வேண்டும் என்று அறிவியல் மேதைகளிலேயே ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அறத்தை மறந்து பல அறிவியல் மேதைகள் செயல்படுவதால் மனித இனத்திற்கு பேரழிவுகள் ஏற்படுவதாகவும் இந்த தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இயற்கையிலும், இயற்கையை சீரழிக்காத மனித முயற்சிகளிலும் மரபணு மாற்றம் ஏற்படுவதில் எந்த சிக்கலும் இருப்பதில்லை. ஆனால் இயற்கைக்கு சவால் விடும் வகையில் நடக்கும் நிகழ்வுகளை இயற்கை ஏற்பதில்லை. அதற்கு உரிய எதிர்விளைவுகளை மனிதர்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

மனித முயற்சியில் குதிரையையும், கழுதையையும் இணைத்து ஒரு புதிய விலங்கு உருவாக்கப்பட்டது. அதன் பெயர்: கோவேறுக் கழுதை. இந்த விலங்கு கழுதையைப்போல் பொதியும் சுமக்கும், குதிரையைப்போல் வேகமாகவும் செல்லும். ஆனால் இந்த புதிய விலங்கு மற்ற விலங்குளைப்போல இயல்பாக இனப்பெருக்கம் செய்யாது. கோவேறுக்கழுதை தேவைப்படும் போதெல்லாம் குதிரையையும், கழுதையையும் இணைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இந்த விலங்கால் மனிதனுக்கு தீமை எதுவும் ஏற்படவில்லை. ஏனெனில் இந்த விலங்கை மனிதன் இன்னும் உணவாக உட்கொள்ள ஆரம்பிக்கவில்லை. ஆனால் மரபணு மாற்றப்பட்ட தாவரங்களை உட்கொண்ட விலங்குகளுக்கு பல்வேறு நலக்கேடுகள் ஏற்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே மரபணு மாற்றுக்கூறுகள் மற்ற உயிர்கள் மீது ஏற்படுத்தக்கூடிய தீய விளைவுகள் குறித்து உரிய பாதுகாப்பு ஆய்வு(BIO-SAFETY TEST)களை மேற்கொள்ளாமல் மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தை வேளாண்மையில் பயன்படுத்தக்கூடாது என்று மரபணுமாற்றுத் தொழில்நுட்பவியல் நிபுணர்களிலேயே ஒரு தரப்பினர் கூறுகின்றனர்

மரபணு மாற்றுத்தொழில் நுட்பம் எந்தெந்த உயிரிகளில் பயன்படுத்தப்படுகிறது?

விலங்குகளில் மாடு, ஆடு, பன்றி, கோழி ஆகியவற்றில் மரபணுமாற்றத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாகவே முட்டையிடாத (பிராய்லர்) கோழிகள், முட்டையிட்டாலும் குஞ்சு பொரிக்கும் திறனற்ற முட்டைகளை ஈனும் (லேயர்) கோழிகள் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கோழிகளையும், முட்டைகளையும் உட்கொள்வோருக்கு ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.

தாவரங்களில் அரிசி, கோதுமை, கரும்பு, பருத்தி உட்பட பல்வேறு ரகங்களில் மட்டுமல்லாமல் மரவகைகளிலும், மூலிகை இனங்களிலும்கூட மரபணு மாற்று ஆய்வுகள் நடைபெறுகின்றன ஆனால் மரபணு மாற்றப்பட்ட தாவரங்களை உட்கொள்ளும் உயிரிகளின் பாதுகாப்பு குறித்த சோதனைகள் உரிய அளவில் நடைபெறவில்லை.


மரபணு மாற்று கத்தரிக்காயில் இந்த பாதுகாப்பு சோதனைகள் நடந்தனவா?

மரபணு மாற்று கத்தரிக்காயை உருவாக்க இருக்கும் மான் சான்டோ நிறுவனத்தின் இந்திய ஏஜென்ட்டான மஹிகோ (Maharashtra Hybrid Company) நிறுவனமே இந்த உயிரிப்பாதுகாப்பு சோதனையை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த சோதனை அறிக்கையை பிரான்ஸ் நாட்டின் உயிரித்தொழில்நுட்ப நிபுணரான பேராசிரியர் செராலினி என்பவரிடம் கருத்து கேட்டு கிரீன்பீஸ் அமைப்பு அனுப்பியது. அந்த அறிக்கையை ஆய்வு செய்த பேராசிரியர் செராலினி, ஒரு பொறுப்பற்ற - மோசமான ஆய்வின் .உதாரணமாக மஹிகோ நிறுவனம் நடத்திய சோதனையை வகைப்படுத்தினார். இது குறித்து விரிவான விமர்சன அறிக்கையையும் அவர் வெளியிட்டார்.

பேராசிரியர் செராலினி வெளியிட்ட விமர்சன அறிககை மத்திய அரசால் அமைக்கப்பட்ட மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு(GEAC)விடம் அளிக்கப்பட்டது. அதை ஆய்வு செய்த மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர் செராலினியை தொடர்பு கொண்டு சில ஐயங்களை எழுப்பியுள்ளனர். பேராசிரியர் செராலினியின் விமர்சனத்தில் கூறப்பட்டுள்ள சில அம்சங்கள் மஹிகோ நிறுவனம் நடத்திய உயிர்ப்பாதுகாப்பு சோதனை அறிக்கையின் எந்த பக்கத்தில் இடம் பெற்றுள்ளது என்று கேள்வியை அவர்கள் எழுப்பியுள்ளனர். ஆக மொத்தத்தில் மஹிகோ நிறுவனம் நடத்தியதாகக் கூறும் பாதுகாப்பு சோதனையின் அறிக்கையைக்கூட மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழுவின் உறுப்பினர்கள் முழுமையாக படிக்கவில்லை எனத் தெரியவருகிறது. இதை பேராசிரியர் செராலினியே அவரது இந்திய வருகையின்போது தெரிவித்தார். இந்திய அதிகாரிகள் அனுப்பிய மின்னஞ்சல் தம்மிடம் இருப்பதாகவு்ம் அவர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு உறுப்பினர்கள்தான், அதை மஹிகோ நிறுவன பாதுகாப்பு சோதனை அறிக்கையை ஏற்றுக்கொண்டு மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயை சந்தையில் உணவாக அறிமுகப்படுத்துவதால் இந்தியர்களின் பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று சான்று அளித்துள்ளனர்.சரி அது என்ன Bt கத்தரிக்காய்?

Bacillus thuringiensis என்ற பாக்டீரியாவை கத்தரியின் மரபணுவில் புகுத்தி தயாரிக்கப்படுவதால் அந்த பாக்டீரியாவின் முதல் எழுத்துகளையும் இனிஷியலாக போட்டு Bt கத்தரிக்காய் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாக்டீரியாவால் பயிர்களை தாக்கும் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. அது நிரூபிக்கப்படவில்லை. ஆனால் மரபணு மாற்றப்பட்ட தாவரங்களை உண்ட உயிரினங்கள் உடலியல் ரீதியாக பாதிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது.மரபணு மாற்றுத் தொழில் நுட்பம் அறிவியலா? அரசியலா?

மரபணு மாற்றுத்தொழில் நுட்பம் இயற்கையாக நடந்தவரை அறிவியலாக மட்டுமே இருந்தது. ஆனால் இந்த அறிவியல் என்பது பன்னாட்டு நிறுவனங்களின் கையில் சிக்கியபோது அறிவியலில் அரசியல் கலந்தது. இந்த பன்னாட்டு நிறுவனங்கள் அரசியல்வாதிகளிடமும், அதிகாரிகளிடமும் முறையற்ற செல்வாக்கை செலுத்த ஆரம்பித்தபோது அறிவியல் முழுமையாக மறைந்து அரசியல் மட்டுமே மிஞ்சியது. இது ஆதிக்க எண்ணம் கொண்ட ஏகாதிபத்திய அரசியல்!

மரபணு மாற்றுத்தொழில்நுட்பம் அனுமதிக்கப்பட்டால் என்ன ஆகும்?

விதைகள் மீது விவசாயிகள் கொண்டுள்ள பாரம்பரிய உரிமைகள் பன்னாட்டு நிறுவனங்களிடம் களவுபோகும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு கப்பம் செலுத்தாத விவசாயிகள் விதைத்திருடர்களாக சித்தரிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்படுவார்கள். இந்தியர்கள் எதைச் சாப்பிடுவது என்பதை பன்னாட்டு நிறுவனங்களே தீர்மானிக்கும். அதை சாப்பிட்டு நோய்வந்தால் அதற்கான மருந்துகளையும், அதை பன்னாட்டு நிறுவனங்கள் விற்பனை செய்வதாகக்கூறி இந்திய்ர்களின் ரத்தத்தை உறிஞ்சும்.

பன்னாட்டு நிறுவனங்களும், அரசும் சேர்ந்து மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிராக சாமானிய மக்களான நாம் என்ன செய்ய முடியும்?

நாம்தான் இந்த அரசை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கிறோம். இந்த பிரசினை குறித்து பரவலான விவாதங்களை ஏற்படுத்துவன்மூலம் ஆட்சியில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் குறித்த அச்சத்தை ஏற்படுத்தலாம். இதன் மூலம் மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தை மட்டுமல்ல, மக்கள் விரோத கொள்கைகள் அனைத்தையும் மாற்றி அமைக்கலாம். அதற்கு நமக்குத் தேவை விழிப்புணர்வும், செயல்பாடுமே!

புல்லில் புதைந்து கிடக்கும் புதையல்....

'வெட்டிவேர்.... வெற்றிவேர்!'
நிலம் வளமாகும்... பணம் வசமாகும்!
வீணான வேலையை, 'வெட்டிவேலை' என்பார்கள்...! ஆனால், அந்த வேருக்கு ஏன் 'வெட்டிவேர்' என்று பெயர் வைத்தார்கள்? ஒருவேளை, 'தேவையற்றதாக விளைந்து கிடக்கிறது' என்று பெயர் சூட்டியிருப் பார்களோ?'அதுகிடக்கட்டும், இப்போது எதற்கு இந்த வெட்டி ஆராய்ச்சி என்கிறீர்களா....?'

காரணம் இருக்கிறது!''விஷயம் தெரியாத வரை அதை 'வெட்டிவேர்' என்று சொல்லிக் கொண்டி ருந்ததில் தப்பில்லை.... ஆனால், இன்றைக்கு அது பணத்தை வெட்டி வரும் வேர்'' என்று சிலாகிக்கிறார்கள் உலகெங்கும் இருக்கும் 'வெட்டிவேர் நெட்வொர்க்' அமைப்பின் உறுப்பினர்கள்.

'சர்வதேச வெட்டிவேர் நெட்வொர்க்' மற்றும் 'இந்திய வெட்டிவேர் நெட்வொர்க்' ஆகிய அமைப்புகள் இணைந்து, பிப்ரவரி 21 முதல் 23-ம் தேதி வரை கேரள மாநிலம் கொச்சியில் ‘சர்வதேச வெட்டிவேர் கருத்தரங்கு’க்கு ஏற்பாடு செய்திருந்தன. அங்கு வந்திருந்த ஒவ்வொருவரும் வெட்டிவேர் பற்றிச் சொல்லச் சொல்ல நாம் ஆச்சர்யத்தின் உச்சிக்கே போய்விட்டோம்.எந்தப் பக்கம் திரும்பினாலும் வெட்டிவேர் மயம்தான். பொம் மைகள், தொப்பிகள், படுக்கை விரிப்புகள், செருப்புகள் என முழுக்க வெட்டிவேர் கொண்டு தயாரிக் கப்பட்ட பொருட்களின் கண்காட்சி பிரமிக்க வைத்தது.நிகழ்ச்சி நடந்த அரங்கத்தில் குடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் கூட வெட்டிவேர் வாசம்தான்! அதுமட்டுமல்ல... ''இந்த நீரைக் குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்'' என்று அருகில் நின்றபடி சொல்லிக் கொண்டி ருந்தனர் 'வெட்டிவேர் நெட்வொர்க் குழு' உறுப்பினர்கள்.

இதில் கலந்து கொள்வதற்காக உலகின் பல நாடுகளிலிருந்தும் கொச்சியில் குவிந்திருந்த விஞ்ஞானி களும், விவசாயிகளும் 'வெட்டிவேர், வெட்டிவேர்' என்றே எல்லா மொழிகளிலும் உச்சரித்துக் கொண்டி ருந்தனர். ஆம், ஆங்கிலத்திலும் கூட அதன் பெயர் வெட்டிவேர்! ஆனால், அதன் அருமை பெருமைகளை நாம் அவ்வளவாக உணரவில்லை... வெளிநாட்டுக் காரர்கள்தான் அதை புரிய வைத்துக் கொண்டிருக் கிறார்கள். அதேசமயம், புது விஷயங்கள் எதுவாக இருந்தாலும் முதல் ஆளாக ஒரு கை பார்த்துவிடும் ஆர்வம் கொண்ட அண்டை மாநிலமான கேரளா, வெட்டிவேர் விஷயத்திலும் முந்திக் கொண்டுவிட்டது. அதன் ஒரு கட்டம்தான் இந்தக் கருத்தரங்கம்!கேரள மாநில ஆளுநர் பாட்டியா, கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசும்போது, ‘‘கேரளாவில் நூற்றாண்டு காலமாகவே வெட்டிவேர் பயன்படுத் தப்பட்டு வருகிறது. இது ஒரு அற்புதமான மருந்தும் கூட. ஆயுர்வேத மருத்துவத்தில் வெட்டிவேருக்கு தனியிடம் உண்டு. உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் இந்த வெட்டிவேர் கொண்டு செல்லப்பட வேண்டும்’’ என்று ஆர்வத்தைத் தூண்டி அமர்ந்தார்.

அற்புத மூலிகை!

'சர்வதேச வெட்டிவேர் நெட் வொர்க்' தலைவர் டிக் க்ரிம்ஸா, தன்னுடைய பேச்சால் கூட்டத் தைக் கட்டிப்போட்டார். ‘‘உலகில் இரண்டு வகையான தொழில் நுட்பங்கள் உள்ளன. ஒன்று, அதிக செலவு செய்து பொருட் களை உற்பத்தி செய்வது. மற்றொன்று குறைந்த செலவில் அதிக பொருட்களை உற்பத்தி செய்வது. இரண்டாவது முறை தான், உலகம் முழுவதுமுள்ள ஏழைகளை எழில் கொஞ்சும் வாழ்க்கைச் சூழலில் வாழவைக்கும். அதாவது, அவர்களின் பிழைப்புக்கு நல்ல வழிகாட்டும். அப்படியரு மந்திரச்செடி, இந்த வெட்டிவேர். இதை வணிகரீதியில் பயிரிட்டு, அதன் மூலம் நிறைய பலன் பெற முடியும் என்பதை உலகம் முழுவதும் உள்ள எங்கள் அமைப் பின் உறுப்பினர்கள் நிருபித்துக் கொண்டுள்ளனர். வெட்டிவேர் விவசாயத்தில் பூச்சி, நோய் தாக்குவதில்லை. ரசாயன உரம், களைக்கொல்லி தேவையில்லை. ஆனால், இதன்மூலம் கிடைக்கும் வருமானமோ மிக அதிகம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு உலக வங்கியின் விவசாயப் பிரிவில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது தமிழக-கர்நாடக எல்லையில் மைசூர் அருகே இருக்கும் குண்டல்பேட்டை பகுதியில்தான் வெட்டிவேரை முதல் முறையாகப் பார்த்தேன். அங்குள்ள விவசாயிகள்... மண்அரிப்பை தடுப்பதற்காகவும், தங்களின் நிலத்தை அடையாளப்படுத்திக் கொள்ளவும் வெட்டிவேரை பயன்படுத்திக் கொண்டிருந்தனர். அத்தோடு, வெட்டிவேர் மூலம் வாசனைத் திரவியம் மற்றும் மருந்து தயாரித்து பயன்படுத்தி வருவதாகவும் சொன்னார்கள்.

'எத்தனை ஆண்டுகளாக இதைப் பயன்படுத்தி வருகிறீர்கள்?' என்று கேட்டேன். 'பாரம்பரியமாக, பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம்' என்றார்கள். அந்த நாள்தான் என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய நாள். அதிலிருந்து வெட்டிவேர் பற்றிய ஆய்வில் இறங்கினேன். அதன் முழுப்பரிமாணத்தையும் தெரிந்து கொண்ட பிறகு, 'ஆகா, அற்புதமான ஒரு மூலிகை, பெரிதாகக் கண்டுகொள்ளப்படாமல் வெட்டியாகக் கிடக்கிறதே... அதைப் பற்றி ஓரளவுக்கு மேல் அந்த விவசாயிகளுக்கும் தெரியவில்லையே' என்றெல்லாம் கவலைப்பட்டேன்.

உலக வங்கிப் பணியை விட்டு வந்தபிறகு, 'வெட்டிவேரின் சிறப்புகளை உலகெங்கும் எடுத்துச் சொல்வதுதான் இனி நம்முடைய வேலை' என்று முடிவு செய்தேன். அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன்'' என்று பெருமையோடு சொன்னார் க்ரிம்ஸா.

அன்று, இவர் போட்ட பதியம்... அமெரிக்கா, சீனா, வியட்நாம், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா.. என்று உலகின் பல நாடுகளிலும் இன்று வேர்விட்டு, வெட்டிவேர் விவசாயத்தை பரப்பிக் கொண்டுள்ளது.

செலவில்லாத சுத்திகரிப்பு கருவி!

ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருந்த டாக்டர் பால் ட்ரவுங் பேசும்போது, அரங்கமே ஆச்சர்யத்தால் வாயடைத்துப் போனது.

  

‘‘அறிவியல் என்ற பெயரால் உயிருள்ள நிலத்தில் ரசாயன உப்பை கொட்டினோம். அதன் விளைவு நிலம் வளமிழந்து போய்விட்டது. அதை மீண்டும் சீர்திருத்தி, பழையபடி இயற்கை விவசாயத்துக்கு கொண்டு வருவதற்கு இன்றைக்கு நிறையவே கஷ்டப்பட வேண்டியுள்ளது. ஆனால், இனி கஷ்டப்பட தேவையிருக்காது. எங்கெல்லாம் ரசாயன உரத்தால் பாதிக்கப்பட்ட நிலம் உள்ளதோ, அங்கு வெட்டிவேரினைப் பயிரிட்டால் போதும்... மண் பழையபடி உயிர்த்தன்மை மிக்கதாக மாறிவிடும். காரணம், மண்ணிலிருக்கும் விஷத்தன்மையை முறிக்கும் வல்லமை வெட்டிவேரிடம் இருக்கிறது.

நாகரீகம் என்ற பெயரால் நகரங்கள் முழுக்கச் சாக்கடைகளை உருவாக்கி விட்டோம். தொழிற்சாலைக் கழிவுகளை, குடிநீருக்கும் விவசாயத்துக்கும் பயன்படும் ஆறுகளில் கலந்து ஓடச் செய்துவிட்டோம். இதனால் புற்றுநோய், நரம்புக் கோளாறு என்று அதிபயங்கர ஆபத்தை ஏற்படுத்தும் நோய்கள் நம்மைத் தாக்க ஆரம்பித்துவிட்டன.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில் இப்படிப்பட்ட கொடுமையான சூழ்நிலை நிலவுகிறது. அங்கு கழிவுநீர் வெளியே செல்லும் பகுதிகளில் வெட்டிவேர்களை வளர்த்தோம். கழிவுநீரில் இருந்த குரோமியம், காட்மியம் போன்ற உயர் உலோகங்கள் எல்லாம் பதினான்கு மாதங்களில் காணாமலே போய்விட்டன. கழிவுநீரானது நல்ல நீராக மாறிவிட்டது. இத்தகைய அற்புதத்தைச் செலவில்லாமல் செய்து கொடுத்துவிட்டது வெட்டிவேர்.

ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் சாக்கடைகள் அதிகம் ஒடும் இந்தியாவின் லூதியானா நகரில் உள்ள கழிவுநீர்க் கால்வாய் உலக பிரசித்தி பெற்றது. அங்குள்ள பனியன் கம்பெனிகளின் கழிவுநீர் அனைத்தும் வெட்டிவேர் மீது பட்டுச் செல்லும்படி வடிமைத்தோம். அடுத்த சில மாதங்களில் அந்த நீர், நல்ல நீராக மாறிப்போனது’’ என்று சொல்லி ஆச்சர்யப்படுத்தினார்.

வெட்டிவேர்... வீரவேர்!

'இந்திய வெட்டிவேர் நெட்வொர்க்' ஒருங்கிணைப்பாளர் பி.ஹரிதாஸ் (அலைபேசி: 094470-60057) பேசும் போது, ‘‘90-ம் ஆண்டுகளிலிருந்து கேரளத்திலிருக்கும் சில தேயிலை எஸ்டேட்களில் ஊடுபயிராக வெட்டிவேரைப் பயிரிட்டு வருகிறார்கள். ஈரப்பதத்தை ஐந்து மாதங்கள் வரை தக்க வைத்துக்கொள்ளும் தன்மை இந்த வேருக்கு இருப்பது, தேயிலை சாகுபடிக்கு சாதகமான ஒன்றாக இருப்பதால் இதை வளர்க்கிறார்கள்.

வெட்டிவேரில் பல ரகங்கள் உள்ளன. கேரளா மற்றும் தமிழக பகுதியில் பயிர்செய்ய ஓ.டி.வி-3 (ஓட்வ்-3) என்ற ரகம் ஏற்றது. இது வேகமாக வளரும் தன்மை கொண்டது. ஆனால், இதன் வேரில் வாசனை கொஞ்சம் குறைவுதான். இந்தியாவின் வடமாநிலங்களில் விளையும் வெட்டிவேர்தான் வாசனை மிக்கது.

வெட்டிவேரை பயிரிட்டு விவசாயிகள் நிச்சயமாக லாபம் பார்க்க முடியும் என்பதால், நாடு முழுவதும் வெட்டிவேரை பயிரிட ஊக்கப்படுத்தி வருகிறோம். வெற்றிகரமாக வாழ, விவசாயிகளை அழைக்கிறோம்'' என்று நெகிழ்ச்சியோடு குறிப் பிட்டார்.

வருமான வாய்ப்புகள் ஏராளம்!

கோவையிலிருக்கும் பாரதியர் பல்கலைக் கழகத்தின் 'வாழ்க்கை அறிவியல் துறை' இயக்குநர் பேராசியர் லட்சுமண பெருமாள்சாமியும் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டார்.

‘‘தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர், கரூர் போன்ற நகரங்களில் சாயப்பட்டறைகள் அதிகம். இதன் கழிவு நீர் நொய்யல் நதியிலும், காவிரி ஆற்றிலும்தான் கலக்கிறது. கடுமையான விஷத்தன்மை கொண்ட இந்தக் கழிவுநீர் கலந்தோடும் ஆறுகளிலிருந்துதான் தமிழகத்தின் பல நகரங்களுக்கும் குடிநீர் எடுக்கப்படுகிறது. கழிவுநீர் காரணமாக நீர்வளமும், நிலவளமும் பாதிப்படைந்துள்ளது. மாசுபட்டு கிடக்கும் இந்தப் பகுதியை பழையபடி மாற்ற, வெட்டிவேரால் மட்டும்தான் முடியும். இதைச் சாதிக்க வேண்டுமென்றால்... பொதுமக்களும், விவசாயிகளும் வெட்டிவேர் பயிரிடுவதை ஓர் இயக்கமாக மாற்ற முன்வரவேண்டும்'' என்று அழைப்பு வைத்தவர்,

''எங்கள் பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டு காலமாக வெட்டிவேர் பற்றிய ஆய்வு களை செய்து வருகின்றோம். கழிவுநீரை சுத்தி கரிக்க மட்டுமல்ல, வருமானத்துக்காகவும் இதை தாரளமாகப் பயிரிடலாம். அதற்கான வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன'' என்று ஆர்வத்தை தூண்டினார்.

பல நாட்டிலிருந்தும் வந்திருந்த விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளின் கருத்தாழமிக்க பேச் சுக்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்க....

''எல்லாம் சரி... வெட்டி வேரைப் பயிரிடுவது எப்படி...?''

-என்றபடியே கேரள மாநிலம், மலப்புரம் பகுதியிலிருந்து வந்திருந்த பாஸ்கரனிடம் (தொலைபேசி: 0494-2677274) கேட்டோம். இவர், மூன்று தலைமுறைகளாக வெட்டிவேர் சாகுபடி செய்து வருவதோடு, அதை வைத்து கைவினைப் பொருட்கள் தயாரித்து, விற்பனையும் செய்து வருகிறார். தமிழிலேயே நம்மிடம் உரையாடியவர், ‘‘தாத்தா காலத்திலிருந்து இதைப் பயிரிட்டு வந்தாலும், இப்போதுதான் நல்ல காலம் பிறந்திருக்கிறது. ஆரம்பத்தில் நல்ல விலை கிடைக்காமல் கஷ்டப்பட்டோம். இப்போது, வெட்டிவேரைப் பயன்படுத்தி தொப்பி, படுக்கை விரிப்பு, மாலை, பொம்மைகள் என்று பலவித கைவினைப் பொருட்களை செய்து விற்பனை செய்கின்றோம். ஆயுர்வேத மருத்துவத்தில் வெட்டிவேர் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

வெட்டிவேர் சாகுபடி செய்ய நல்ல வடிகால் வசதி உள்ள நிலம் வேண்டும். குறைந்தபட்சம் மாதம் ஒரு முறையாவது நீர் பாசனம் செய்ய வேண்டும். இதற்கென தனியான பருவம் கிடை யாது. வருடம் முழுக்க பயிரிடலாம். அதேபோல இப்படித்தான் பயிரிட வேண்டும் என்று கட்டுப் பாடுகள் எதுவும் இல்லை. உங்கள் தோட்டத்துக்கு ஏற்ப நீங்களே முடிவெடுத்து பயிரிடலாம். இதன் வயது, 12 மாதங்கள். ஒரு வெட்டிவேர் நாற்று 50 காசுக்கு விற்பனையாகிறது. ஏக்கருக்கு 50 ஆயிரம் நாற்றுகள் தேவைப்படும். இதற்கு 25 ஆயிரம் ரூபாய் ஆகும். முதல் ஆண்டு மட்டும்தான் இந்தச் செலவு. அடுத்தடுத்த தடவைகளுக்கு உங்கள் தோட்டத்திலேயே நாற்று கிடைத்துவிடும். பார் அமைத்து, நான்கு அங்குலத்துக்கு ஒன்று என்ற வீதத்தில் நாற்று நடவு செய்யவேண்டும். பெரிதாக பராமரிப்பு ஏதும் இல்லை. மக்கிய இயற்கை எருவைப் போடலாம். இதன் மூலம் வளர்ச்சியை கொஞ்சம் அதிகப்படுத்த முடியும். மற்றபடி ரசாயன உரம், பூச்சி மருந்து ஏதும் தேவையில்லை.

நடவு செய்த 12 மாதங்கள் கழித்து அறுவடை. ஏக்கருக்கு 5 டன் உலர்ந்த வேர் மகசூலாகக் கிடைக்கும். இன்றையச் சந்தை நிலவரப்படி கிலோ 35 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன்படி பார்த்தால் குறைந்தபட்சம் ஏக்கருக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் வருமானம் கிடைக்கும். செலவு போக, 1 லட்சத் துக்கும் அதிகமான ரூபாய் லாபமாகக் கிடைக்கும்.

அடிப்படையில் எங்கள் குடும்பம் விவசாயம் சார்ந்ததாக இருந்தாலும், வெட்டிவேர் தயாரிப்பு களுக்கு தேவை அதிகரித்துக் கொண்டே இருப்பதால், விவசாயத்தைக் குறைத்துக் கொண்டு, குடும்பத் துடன் வெட்டிவேர் கைவினைப் பொருட்கள் செய்வதில் ஈடுபட்டு வருகின்றோம். இதில் கூடுதல் லாபம் கிடைக்கிறது. அதேசமயம், வெட்டிவேர் விவசாயம் செய்யச் சொல்லி பலரையும் ஊக்கப் படுத்தி வருகிறோம்’’ என்று சொன்னவர்,

''யார் கேட்டாலும் வெட்டிவேர் விவசாயத்தைச் சொல்லித்தரத் தயார்'' என்று உற்சாகமாகச் சொன்னார்.

இந்தியாவைப் பொறுத்தவரை வெட்டிவேர் விவசாயம் என்பது இன்னமும் முறையானதாக யாராலும் செய்யப்படவில்லை. ஆங்காங்கே ஒரு சிலர் தங்களுக்குத் தெரிந்த வரையில் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே, சம்பந்தபட்ட வர்களிடம் பேசி முழுமையாக தெரிந்து கொண்டு, சந்தை வாய்ப்பையும் புரிந்து கொண்டு ஒரு கை பாருங்களேன்!

கூவத்துக்கும் வெட்டிவேர்!


‘வெட்டிவேர் மூலமாக கழிவுநீர்க் கால்வாய்களை எளிதாகச் சுத்தப்படுத்த முடியும்' என்ற விஷயத்தைக் காதில் வாங்கியதுமே நம்முன் நிழலாடியது சென்னையின் வற்றாத கூவம்தான்! 'கூவத்தைச் சுத்தப்படுத்துகிறேன் பேர்வழி' என்று அவ்வப்போது திட்டங்கள் தீட்டப்படுகின்றன. நிதியும் ஒதுக்கப்படுகிறது. வேலையும் நடக்கிறது. பணமும் கரைகிறது. ஆனால், கடைசி வரை கூவம்தான் சுத்தமாவதில்லை.

''எத்தனையோ முயற்சித்தாயிற்று ஏன் வெட்டிவேரையும் ஒரு தடவை பரிசோதிக்கக் கூடாது... செலவும் மிகமிகக் குறைவாயிற்றே?'' என்றபடி சென்னையின் மேயர் மா.சுப்பிரமணியன் (தி.மு.க.) கேட்டோம்.

‘‘நீங்கள் சொல்வதைக் கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. கூவத்தைச் சுத்தப்படுத்துவதற்கு வெட்டிவேர் தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்தலாம் என்று மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்து பேசுகிறேன். முதல் கட்டமாக பரிட்சார்த்த ரீதியில் குறைந்த அளவு இடத்தில் செய்துபார்ப்போம். முடிவு திருப்தியாக இருந்தால்... முழுவதுமாக அதை மேற்கொள்வோம்’’ என்று ஆக்கப்பூர்வமாகச் சொன்ன மேயர், வெட்டிவேர் குறித்த தகவல்களையும் தொடர்பு எண்களையும் நம்மிடம் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.


'பூச்சி விரட்டியும் நானே....நோய் துரத்தியும் நானே....

கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் வெட்டிவேர் குறித்து ஆராய்ச்சி செய்துவரும் ரத்னமாலா மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோரும் கருத்தரங்குக்கு வந்திருந்தனர். இருவரும் வெட்டிவேரின் பயன்கள் பற்றி நம்மிடம் பட்டியலிட்டார்கள்.

‘‘வெட்டிவேர் மட்டுமல்ல, அதன் இலையும் அருமையானது. இளம் இலைகளை மாடுகளுக்குக் கொடுத்தால் கூடுதல் பால் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் விவசாயிகளின் தூக்கத்தை கெடுக்கும் பூச்சி மற்றும் நோய்களை விரட்டும் சக்தியும் வெட்டிவேருக்கு உண்டு. காய்கறி, மலர் போன்ற பயிர்களுடன் ஊடுபயிராக வெட்டிவேரைப் பயிரிட்டால், பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல் தடுக்கப்படும். ஊடுபயிராக பயிரிட விரும்பாதவர்கள், என்ன விதமான பயிராக இருந்தாலும், நிலத்தைச் சுற்றி வரப்பு ஓரங்களில் வெட்டிவேர் பயிரிட்டால்கூட போதும்... உங்களின் காவல்காரனாக இருந்து பயிர்களை பாதுகாக்கும். இதை ஆராய்ச்சிப் பூர்வமாக கண்டுபிடித்துள்ளோம். இன்னும் பல விஷயங்கள் ஆராய்ச்சி நிலையில் இருக்கின்றன’’ என்றார்கள். தொடர்புக்கு: வாழ்க்கை அறிவியல் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை - 641046.

தொலைபேசி: 0422-2422222.

'இது தமிழ்வேர்!'

கருத்தரங்கின் இடைவேளையில் 'சர்வதேச வெட்டிவேர் நெட்வொர்க்' தலைவர் டிக் க்ரிம்ஸாவை தனியே சந்தித்துப் பேசினோம். அப்போது பல தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். ''வெட்டிவேர்... தன்னைப் பயிரிடுபவர்களை பணக்காரர் களாக மாற்றும் திறன்கொண்டது. தமிழ் மண்ணுக்கு சொந்தமான வேர் இது. ஆனால், இங்கே இதன் மகத்துவம் தெரியவில்லை. இப்போது நாங்கள் அதை நிரூபித்துவிட்டோம். எனவே, தமிழ்நாட்டில் தாராளமாக இதைப் பயிர் செய்யலாம்.

தமிழக வெட்டிவேருக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. இதைப் பயிரிட்டால் பூமியில் கீழ்நோக்கி மட்டுமே இதன் வேர்கள் செல்லும். அதனால்தான் உங்கள் விவசாயிகள் வரப்பு ஒரத்தில் பயிரிடுகிறார்கள். ஆனால், வடமாநிலங்களில் உள்ள வெட்டிவேர் நிலத்தில் பரவி வளரும் தன்மை கொண்டது. இது விதை மூலம் பரவும். ஒரு இடத்தில் பயிரிட்டால் வயல் முழுக்க நிறைந்துவிடும்.

எல்லோரும் இயற்கை விவசாயத்தைப் பற்றி பேசி வருகிறார்கள். அத்தகையோரைப் போல செயற்கை பொருட்களை மறுக்கும் அற்புத குணம் கொண்ட பயிர் வெட்டிவெர். இதன் சிறப்பம்சத்தை அமெரிக்காவில் இருந்து நான் வந்துதான் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. இது உங்கள் பயிர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’’ என்றவர்,

''உலகம் முழுக்க உள்ள வெட்டிவேர் விவசாயிகளை கொண்டு உருவாக்கப்பட்டதுதான் வெட்டிவேர் நெட்வெர்க். இதில் சாகுபடி, விற்பனை, ஏற்றுமதி என எல்லா தகவல்களையும் பரிமாறிக் கொள்ளலாம். கட்டணம் கிடையாது. பத்தாயிரம் பக்கங்களுடன் இந்த இணையதளம் விரிந்து கிடக்கிறது. இதில் இணைந்து கொள்ள தமிழக விவசாயிகளை வரவேற்கிறேன்'' என்று அழைப்பு வைத்தார்.

இணையதள முகவரி:www.vetiver.org

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

பசுமைப் புரட்சி இந்தியாவுக்குள் நுழைந்த கதை

1965-ல் இந்தியாவின் உணவு உற்பத்தி குறைந்து, PL-480இன் மூலம் தானிய இறக்குமதி அதிகரித்துக்கொண்டேபோன சமயம். 1966இல் உச்சக்கட்டமாக 100 கோடி டன் கோதுமை இறக்குமதியானது. அந்தச் சமயம் சி. சுப்பிரமணியம் இந்தியாவின் வேளாண் அமைச்சராகவும், எம்.எஸ். சுவாமிநாதன் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (IARI) இயக்குநராகவும் இருந்தனர். இவர்கள் இருவரும் கைகோத்துக்கொண்டு இந்திய வேளாண்மையை நவீனமயமாக்கும் பணியில் இறங்கினர். நார்மன் போர்லாக்கின் லெர்மா ரோஜோ, சொனோரா (Lerma Rojo 64A, Sonora 64A) ஆகிய இருரகங்களின் 18,000 டன் விதைகளை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்தனர். மண் வளத்தையும் துணிந்த உற்சாகமான விவசாயிகளையும், பக்ராநங்கல் அணையின் மூலம் நிறைய நீர்வளத்தையும் கொண்ட பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் அறிமுகமான பசுமைப் புரட்சி, பிரம்மாண்டமாக விளைச்சலைப் பெருக்கியது. அடுத்து, மனிலாவிலிருந்து ஐ.ஆர். 8 ரகம் இறக்குமதியாகி, நெல் விளைச்சலையும் அமோகமாக அதிகரித்தது. உணவு இறக்குமதி செய்துகொண்டிருந்த இந்தியா தற்சார்பு நிலையை அடைந்தது.
படித்த இந்தியர்களில் பெரும்பான்மையினர் படித்திருக்கும், பரப்பி வரும் இந்தக் கதைச் சுருக்கம் என்னவோ பெரும்பாலும் உண்மை தான். ஆனால் கதையையே வேறு திசையில் புரட்டிப்போடும் அளவுக்கு முக்கியமான பல தகவல்கள் நம் சரித்திரத்தில் ஒளிந்திருக்கின்றன. சி.சுப்பிரமணியம் (சி.எஸ்.), தமது சுயசரிதையின் மூன்றாம் பாகமான Hand of Destiny (விதியின் கை) எனும் நூலில் இந்தக் கடைசிக் கட்டக் கதையின் சில முக்கியமான நிகழ்வுகளை நன்றாகவே விவரித்திருக்கிறார்.
சி. எஸ்.ஸின் புதிய வேளாண் திட்டத்தின் அடிப்படை
1965இல் சி. எஸ். வேளாண் அமைச்சராகப் பொறுப்பேற்றதும், இந்திய வேளாண் துறையையும் வேளாண் ஆராய்ச்சியையும் அடிப்படையாக மாற்றியமைக்க வேண்டும் என்ற தனது கனவை நனவாக்கும் திட்டத்தை அரசாங்கத்திடம் முன்வைத்தார். “நம் விவசாயிகள் இரண்டாயிரம் ஆண்டுகளாக விவசாயம் செய்துவருகிறார்கள் என்றும், அதனால் அவர்களுக்குத் தெரியாதது இந்த உலகில் எதுவுமில்லை என்றும் விஞ்ஞானபூர்வமான வேளாண்மை விபரீதத்தில் முடியும் ஆர்வக்கோளாறு என்றும் சிலர் கூறுகின்றனர். நம் விவசாயிகள் பாரம்பரிய வேளாண்மையைப் பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் என்பதில் ஏதும் சந்தேகமில்லை. ஆனால் நவீன வேளாண்மையைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது . . . ஆகையால், நாம் பாரம்பரிய வேளாண்மையை மட்டும் நம்பிக்கொண்டு இருக்கப்போவதில்லை என்பதுதான் நமது கொள்கை அளவிலான முடிவு. நவீன விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, நவீன இடுபொருட்களையும் உபயோகித்து, நவீன வேளாண்மையை அறிமுகப்படுத்தப்போகிறோம்!” என்று சி.எஸ். அறிவித்தார்.1
இந்த வாக்கியங்கள், சி.எஸ்.ஸ¤க்கு நவீனத் தொழில்நுட்பத்தின் மேல் இருக்கும் ஒருவிதக் கண்மூடித்தனமான நம்பிக்கையைக் காட்டுகின்றன. இல்லையென்றால், பாரம்பரியத் தொழில்நுட்பம் நமது உணவுப் பிரச்சினையைத் தீர்க்க உதவும் என்கிற பரவலான கருத்தையும் நவீன வேளாண்மை விபரீதத்தில் முடியும் என்கிற எச்சரிக்கையையும் தீர விசாரித்துத் தனது சொந்த முடிவுகளைப் பற்றி எழுதியிருப்பார். அவ்வாறல்லாமல், பசுமைப் புரட்சியைப் பற்றிய அவரது 150 பக்க நூலில், ‘பாரம்பரிய இயற்கை வேளாண்மை நமக்கு ஏன் சோறு போடாது?’ என்கிற கேள்விக்கு ஒரு சில வரிகளில் பதிலளித்து அந்தத் தலைப்பை ஒரேயடியாக மூடிவைத்திருக்கமாட்டார்.
“இயற்கை உரங்களில் 1-3% நைட்ரஜன் மட்டுமே உள்ளது. ஒரு ஹெக்டேருக்கு 60 கிலோ நைட்ரஜன் தேவையென்றால், டன் கணக்கில் உரங்கள் தேவையாகுமே! அத்தனை உரம் நம்மிடம் இல்லை. இருந்தாலும், அத்தனை உரத்தைக் கொண்டு நிலத்தில் கொட்டினால் பயிரே மூழ்கி விடுமே! ஆகையால், . . . இரசாயன உரத்திற்கு மாற்றே கிடையாது!” என்பது அவருடைய வாதம். காற்று மண்டலத்தில் இருக்கும் 70% நைட்ரஜனைத் தாவரங்களுக்குத் தேவையான வடிவத்துக்கு மாற்றித் தரும் வேலைக்கு நுண்ணுயிர்களே பொறுப்பேற்றுக்கொள்ளும்போது, நாம் ஏன் இத்தனை கணக்குகளைப் போட்டு மண்டையைக் குழப்பிக்கொள்ள வேண்டும்? டன் கணக்கில் (நைட்ரஜன் கொண்ட) எருவை நிலத்தில் கொண்டு கொட்டுவதற்குப் பதிலாக, பயிர் சுழற்சி, மூடாக்கு, உயிர் உரங்கள் போன்றவற்றைப் பரவலாக உபயோகித்த நம் விவசாயியின் அருமை பெருமையைப் பற்றி, அறுபதே ஆண்டுகளுக்கு முன்னர் ஜான் அகஸ்டஸ் வோல்கர் விரிவாக எழுதிய அறிக்கையை அக்கறையுடன் படித்திருந்தால் புரிந்திருக்கும்.
இந்தக் கண்மூடித்தனமான நம்பிக்கை ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் அவர் மிகுந்த சிரத்தையுடன் உணவுப் பெருக்கத்திற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வந்தார் என்பதையும் நாம் குறித்துக்கொள்ள வேண்டும். மந்திரிகளை அவர்களின் வீட்டுத் தோட்டங்களில் காய்கறிகளைப் பயிரிட ஊக்குவித்தார். தன் வீட்டிலேயே ஒரு பெரிய காய்கறித் தோட்டம் அமைத்திருந்தார். பல கிணறுகளைத் தோண்டி நீர்வளம் பெருகுவதற்கான சில நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.
புதிய வேளாண் திட்டத்திற்கு எதிர்ப்பு
சி. எஸ். தீட்டிய திட்டம் பெரும்பான்மையினரின் நம்பிக்கையைப் பெறவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியினர், சி. எஸ். அமெரிக்கர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டு, அவர்கள் சொல்லுக்கெல்லாம் ஆடிக்கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டினர். “முதலில் நம் நாட்டின் உணவு இறக்குமதியைப் பற்றிச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். நமது 8.7 கோடி டன் உணவு தானியத் தேவையில் வெறும் 60-70 லட்சம் டன் (அதாவது 7%) மட்டுமே குறைவாக உள்ளது. அதைச் சரிக்கட்டக் கோதுமை விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கச் செய்து, உற்பத்தியைச் சிறிதளவு பெருக்கி, சரிசமமாக விநியோகம் செய்தாலே போதுமானது!” என்று திட்ட அமைச்சர் பகத் கூறினார்.
காங்கிரஸில் இருந்த இடதுசாரியினரும் பல சட்டமன்ற உறுப்பினர்களும் இத்திட்டத்தை எதிர்த்தனர். “நம் நாட்டின் உணவுப் பிரச்சினை மிகைப்படுத்தப்பட்டுள்ளது!” என்று கூறி அப்போதைய நிதி அமைச்சர் டி.டி. கிருஷ்ணமாச்சாரி, இரசாயன உரத்தின் இறக்குமதிக்கு நிதி கொடுக்க மறுத்துவிட்டார். “நம் நாட்டிற்குள் உணவு தானியங்களின் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டாலே, பற்றாக்குறையைச் சரிக்கட்டுவதற்குத் தேவையான உணவு நம்மிடமே உள்ளது என்கிற உண்மை தெரியும்!” என்று அடல் பிஹாரி வாஜ்பேயி கூறினார். அதிமுக்கியமாக, இந்திய அரசாங்கத்தின் திட்டக் கமிஷன் இந்தத் திட்டத்தை ஏற்க மறுத்தது. “நேருவின் கொள்கையின்படி, கிராமப் பஞ்சாயத்துகள், சமூக மேம்பாட்டு அமைப்புகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் மூல மாகத்தான் வேளாண்மையை மேம் படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும்” என்று ஆணித்தரமாக நம்பி அதன் உறுப்பினர்கள் வாதாடி வந்தனர்.
இத்தனை எதிர்ப்புகளையும் சமாளிப்பதற்காக, விஞ்ஞானிகள், வேளாண் பொருளாதார நிபுணர்கள், மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் ஆகியோர் கொண்ட மூன்று தனித்தனிக் குழுக்களை நியமித்து, அவர்களின் கருத்துகளையும் சேகரித்தார் சி. எஸ். இவர்களுள் பொருளியலாளர்களில் ஒரு தரப்பினர், இத்திட்டத்தை எதிர்த்துவந்தனர்; மறு தரப்பினர் இது நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லதா என்று தீர்மானிக்கச் சமயம் கேட்டு, தீர ஆராய்ந்த பின்னரே ஒரு முடிவுக்கு வர முடியும் என்றனர்; ஒரு சிலர் மட்டுமே ஆமோதித்தனர். சமூகவியலாளர்கள் நிலச் சீர்திருத்தம் சரியாகச் செய்யப்படாத நிலையில் இந்தத் தொழில்நுட்பத்தைப் புகுத்தினால், பணக்கார விவசாயிகள் மட்டுமே பயனடைந்து மேலும் பணக்காரர்களாக வழிவகுக்கும் என்று எச்சரித்தனர். அமைச்சரவையிலும் பலர் இதை எதிர்த்தார்கள். பத்திரிகைகள் விமர்சித்தன. ஏன், அதுவரை பிரதமராக இருந்த லால் பஹதூர் சாஸ்திரிகூட சி.எஸ்.ஐ எச்சரித்தார்.
மூத்த விஞ்ஞானிகள் சி.எஸ்.இன் புதிய வேளாண் திட்டத்தைத் தீவிரமாக எதிர்த்தனர். “புதிய வெளிநாட்டு ரகங்களை நாட்டிற்குள் கொண்டுவந்து விவசாய நிலங்களில் பரப்பினால், அதுவரை அறிந்திராத நோய்களும் பூச்சிகளும் சேர்ந்து வந்திறங்கும் மிகப் பெரிய அபாயம் உள்ளது” என்று எச்சரித்தனர். “இந்தியாவிலேயே குறுகிய கால அறுவடை, பூச்சி-நோய் எதிர்ப்பு மற்றும் அதிக விளைச்சல் போன்ற தன்மைகளைக் கொண்ட ரகங்களை நம்முடைய விஞ்ஞானிகள் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். சற்றுக் காத்திருந்தால், அவையே நமக்குக் கிடைக்கும்” என்றனர். 9 வெளிநாடு சென்று திரும்பியிருந்த இளைய தலைமுறை விஞ்ஞானிகள் மட்டுமே இத்திட்டத்தை வரவேற்றனர்.
விதைகளின் அறிமுகம்
1963ஆம் ஆண்டு, நார்மன் போர்லாக், தான் உருவாக்கியிருந்த புதிய குட்டை ரகக் கோதுமை விதைகளை இந்தியாவில் சோதித்துச் செய்து பார்ப்பதற்காக அனுப்பிவைத்தார். 1965இல் லெர்மா ரோஜோ மற்றும் சொனோரா 64 ஆகிய கோதுமை ரகங்கள் 200 டன் மெக்ஸிகோ நாட்டிலிருந்து இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டன. ஆனால் இந்த ரகங்கள் சிவப்பாகவும் எளிதில் வேகாதவையாகவும் இருந்தமையால், இந்திய உணவுக்கு ஏற்றாற்போல நிறம் மற்றும் வேகும் தன்மையையும் மாற்றியமைக்க முன்வந்தார் சுவாமிநாதன்.
மனிலாவில் அமைந்த மிஸிஸிமியிலிருந்து 12 ரக நெல் விதைகள் இந்திய விஞ்ஞானிகளுக்கு ஆராய்ச்சிக்காகக் கொடுக்கப்பட்டன. 1965இல் தாய்சுங் நேட்டிவ்-1 (Taichung Native-1/ TN-1) விதைகளைக் கொண்டுவந்து, 1966க்குள் 3 லட்சம் ஹெக்டேர்களுக்கான விதைகளை உற்பத்தி செய்தனர். “எனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் ஒரு பெரிய சர்ச்சை எழும்பியது. விஞ்ஞானிகள் ஏடி.டி-27 (ADT-27) என்கிற ஒரு புதிய மேம்படுத்தப்பட்ட ரக நெல்லை உருவாக்கியிருந்தனர். அது, ஜிழி-1 போன்ற அன்னிய ரகங்களைப் போன்று சிறப்பான விளைச்சலைக் கொடுத்தது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கிஞிஜி-27ஐ புதிய ரகங்களை உற்பத்தி செய்வதற்கான மூல ரகமாக ஏற்கத் தயாராக இருந்தேன். ஆனால் மற்ற இடங்களுக்கு, இறக்குமதியாகும் அந்நிய ரகங்களையே உபயோகிக்க வேண்டும் என்று நினைத்தேன்” என்று பதிவுசெய்துள்ளார் சி.எஸ்.10
10 கிலோ இரசாயன உரமிடும் வரை பாரம்பரிய ரகங்கள்தாம் அதிக விளைச்சலைக் கொடுத்தன. ஆனால் அதற்கும் அதிகமாக உரமிட்டதில் உயரமான ரகங்கள் கதிர்களின் எடை தாங்காமல் சாய்ந்து விளைச்சல் குறைந்தது. இங்குக் குட்டை ரகங்கள் நிமிர்ந்து நின்று விளைச்சலைக் கொடுத்தன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.11
கம்மிங்ஸின் அவசரம்
சி.எஸ். அமைச்சராகப் பொறுப்பேற்று ஓராண்டுக் காலமாக எல்லாத் தரப்பினரின் எதிர்ப்புகளையும் சந்தித்துக் களைத்துப்போனார். அதற்குள் ராக்கஃபெல்லரின் தலைவரான ரால்ஃப் கம்மிங்க்ஸ், “வீரிய விதைகளை உங்கள் சோதனைக்காக அனுப்பிவைத்து இரண்டாண்டுகள் ஆகப்போகிறது. இன்னும் விவசாயிகளுக்குக் கொண்டுசெல்லாமல் விஞ்ஞானிகளே வைத்துக்கொண்டிருக்கிறீர்களே!” என்று குடையத் தொடங்கினார். கம்மிங்ஸின் அவசரத்துக்கு சி. எஸ். பணிந்தார். “அலை ஓய்ந்த பிறகுதான் கடலில் குளிப்பேன் என்பதெல்லாம் வேலைக்கு ஆகாது! அலைகளை எதிர்த்து தான் இறங்க வேண்டும்” என்று சொன்ன அவர், எப்படியாவது இப்புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவது என்பதில் தீர்மானமாக இருந்தார்.
வறட்சியும் உணவுப் பற்றாக்குறையும்
இதற்கிடையில், உணவுப் பற்றாக் குறையின் காரணமாக PL480இன் மூலம் கோதுமை இறக்குமதியாகிக்கொண்டிருந்தது. 1965-66இல் வறட்சியின் காரணமாக இந்திய உணவு உற்பத்தி மேலும் சரிந்தது. அந்த ஆண்டு சி.எஸ். வாஷிங்டன் சென்று அமெரிக்க வேளாண் செயலாளர் ஓர்வில் ஃப்ரீமன்னைச் சந்தித்து உணவு உதவி கேட்டார். அப்போது ஜனாதிபதியாக இருந்த லிண்டன் ஜான்ஸன், அதுவரை நடைமுறையிலிருந்த ஓராண்டிற்கான உணவு உதவி ஒப்பந்தத்தை நிறுத்திவிட்டு, மாதாமாதம் அனுப்புமாறு மாற்றினார். ஒவ்வொரு மாதமும் அமெரிக்க நிர்ப்பந்தங்களுக்கு இணங்கினால்தான் உணவு தரப்படும் என்பதுதான் இந்தப் புது ஏற்பாடு. இந்தியா பசுமைப் புரட்சித் திட்டத்தை ஏற்க வேண்டும் என்பதுதான் அவரது நிபந்தனை! மேலும், நமது கரன்ஸியின் மதிப்பைக் குறைத்து, தனியார் முதலீட்டுக்கு இருந்த தடை களையும் நீக்குமாறு நிர்ப்பந்தங்கள் போடப்பட்டன.
இந்திரா காந்தியின் உற்சாகம்
ஜனவரி 1966இல் லால் பகதூர் சாஸ்திரியின் இறப்புக்குப் பின்னர், பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்ற இந்திரா காந்தி, சி. எஸ்.இன் திட்டத்தை முழுமையாக ஆதரித்து, அதை அறிமுகப்படுத்தத் தேவையானவற்றைச் செய்ய உற்சாகமாக முன்வந்தார். அவர் செய்த முதல் வேலை, சி.எஸ்.ஐத் திட்டக் கமிஷனுக்குள் புகுத்தியது. அதன் விளைவு: விரைவில், அதனுள் இருந்த எதிர்ப்பு அடங்கியது. பிறகு, சி.எஸ். வேளாண் அமைச்சரகத்தை மாற்றியமைத்தார். மூன்று செயலாளர் பதவிகளை நீக்கிவிட்டு, ஒரே பதவியாக மாற்றினார். அதில் ஒரிஸாவில் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி, நவீன வேளாண்மையைத் தீவிரமாகச் செயல்படுத்திக்கொண்டிருந்த பி. சிவராமன் என்பவரை அமர்த்தினார். “இப்படியாக, வேளாண் முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்தும் மொத்த அமைப்பும் ஒரே ஒரு அதிகாரியின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. இவை நிர்வாக அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட அடிப்படையான மாற்றங்கள். இவற்றைச் செய்திருக்காவிட்டால் பசுமைப் புரட்சியை அறிமுகப்படுத்தியிருக்கவே முடிந்திருக்காது!” என்று சி. எஸ். தனது சுய சரிதையில் ஒப்புக்கொண்டுள்ளார். ஆகஸ்டு 1996இல் புதிய வேளாண் கொள்கைக்கான முன்வரைவு தயாரிக்கப்பட்டது. அந்தச் சமயம், புதிய நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றவரும் இந்தத் திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.
தீவிரமான மேம்பாட்டுத் திட்டம் /ஐந்தாண்டுத் திட்டமும் நிதியுதவியும்
1952இல் ஃபோர்டு ஃபவுண்டேஷன், சமூகத் திட்டத்தை (community programme) 1,500 கிராமங்களில் தொடக்கிவைத்திருந்ததை இங்கு நினைவுகூர வேண்டும். இத்திட்டத்தின் மூலம் கிராமவாசிகளின் உழைப்பைக் கொண்டு உணவு உற்பத்தியைப் பெருக்கி, நிலச் சீர்திருத்தம் செய்து, கிராமக் கூட்டுறவுச் சங்கங்களைப் பலப்படுத்தி அவற்றின் மூலம் பல பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால் 1960-61இல் இந்தத் திட்டத்தை நிறுத்திவிட்டு, தீவிர வேளாண்மை மேம்பாட்டுத் திட்டத்தைத் (Intensive Agricultural Development Programme - IADP) தொடங்கியது இந்த நிறுவனம். பின்தங்கிய மாவட்டங்களுக்கு வள மூட்ட வேண்டும் என்னும் நேருவின் கனவுக்கு நேர் எதிராக, ஒவ்வொரு மாநிலத்திலும் ஏற்கனவே மிக வளமான மற்றும் நீர் வளம் அதிகம் பெற்ற மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்து, விதைகள், இரசாயன உரம், இரசாயனப் பூச்சிக்கொல்லிகள் ஆகியவை அடங்கிய பல சேவைகளை அங்கே கொண்டுசெல்லத் தொடங்கினர்.
இந்தத் தீவிர அணுகுமுறை ஐந்தே ஆண்டுகளில் மத்திய அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் நான்காம் ஐந்தாண்டுத் திட்டமாக (1966-71) உருவெடுத்தது. மண் மட்டும் நீர் வளங்களை அதிகமாகக் கொண்ட நிலங்களில், புதிய கலப்பின (hybrid) விதைகளை விதைத்து, இரசாயன இடுபொருட்களைப் பயன்படுத்திப் பெரிய மகசூலை அள்ள வேண்டுமென்பதே இந்தத் திட்டம். மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் மொத்த பட்ஜெட்டைவிட ஆறு மடங்கு அதிகமாக 1,114 கோடி ரூபாய் வேளாண்மைக்கு ஒதுக்கிவைக்கப்பட்டது. இந்தத் தொகை முக்கியமாக விதைகள், இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்காக ஒதுக்கப்பட்டது. உலக வங்கியும் அமெரிக்க உதவி அமைப்பும் (USAID) அதிகச் செலவாகும் பசுமைப் புரட்சியை அமல்படுத்துவதற்காகக் கடனுதவி வழங்கின. இந்திய உரத் தொழில் துறையில் அந்நிய முதலீடு வருவதற்கான சாதகமான சூழலை உருவாக்குவது, தாராளமாக இறக்குமதி செய்வது, உள்நாட்டில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது ஆகியவற்றை அமல்படுத்தவும் இந்த இரு அமைப்புகளும் நெருக்கடி கொடுத்தன. இவை அரசுக்கு நெருக்கடி கொடுத்து இந்தியக் கரன்ஸியின் மதிப்பை 37 சதவீதம் குறைக்கச் செய்தன.
டாக்டர் கம்மிங்க்ஸின் உதவியுடன் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களைப் போலவே இந்திய வேளாண் பல்கலைக்கழகங்களும் மாற்றியமைக்கப்பட்டன. இதற்கு மட்டுமே பல கோடிகள் செலவிடப்பட்டன. இளம் வேளாண் பட்டதாரிகள் பசுமைப் புரட்சியின் புகழ்பாட வைக்கப்பட்டனர். புதிய விதைகளையும் இடுபொருட்களையும் விவசாயி களுக்குக் கொண்டு செல்லும் பணியில் இறக்கப்பட்டனர். முதலில், மிகக் குறைந்த விலையிலேயே விதைகளையும் மற்ற இடுபொருட்களையும் விற்பதற்காக அரசாங்கம் பல மானியங்களை அளித்தது.
இப்படியாகத் தன் விருப்பப்படியே அலைகளையெல்லாம் எதிர்த்துக்கொண்டு கடலுக்குள் இறங்கினார் சி.எஸ். ஆனால் பசுமைப் புரட்சி இந்தியாவிற்குள் நுழைந்த கதை இதோடு முடிவடைந்துவிடவில்லை. பசுமைப் புரட்சியின் தந்தையாகக் கருதப்படும் எம்.எஸ். சுவாமிநாதன், நிதியை ஒதுக்கிய உலக வங்கி மற்றும் USAID, பசுமைப் புரட்சியில் பெரும் பங்கு பெற்ற பஞ்சாப்பின் பக்ராநங்கல் அணை, மிஸிஸிமின் இயக்குநர்கள் போன்ற பல முக்கிய நபர்கள், திட்டங்கள் மற்றும் நிகழ்வுகளைப் பற்றிய முக்கிய மான தகவல்களைக் கொண்டு உருவான கிளைக்கதைகள் இல்லாமல் இந்தக் கதை முழுமை பெறாது!

திங்கள், 12 ஏப்ரல், 2010

படிப்பு: எம்.பி.ஏ. தொழில்: விவசாயம்

தாவரங்களை உருவாக்கி, தானியங்களை உணவாக்கி, உலகத்தின் பசி தீர்க்கும் விவசாயம், மனித குலத்தின் ஆதித் தொழில். இன்று யாவராலும் கைவிடப்பட்டதுவும் அதுவே
"இந்த மண்ணும், பயிறும், சேறும், வெள்ளா மையும், விளைச்சலும், அறுப்பும், நடவும்தான் என் வாழ்க்கை. மண்ணில் கால்படாத எந்த வேலையும் மனசுக்குப் பிடிக்கிறதில்லை. படிச்சவங்க விவசாயம் செய்யக் கூடாதுன்னு சட்டம் எதுவும் இல்லையே!" - மென்மையான சொற்களால் பேசுகிறார் ஏங்கெல்ஸ் ராஜா. இளைய தலைமுறை விவசாயத்தைக் கைகழுவி விட்டு நகரங்கள் நோக்கி இடம்பெயர்ந்துகொண்டு இருக்க, எம்.பி.ஏ., படித்த இந்த 27 வயது இளைஞர் விவசாயத்துக்காகத் தன்னை அர்ப்பணித்திருக்கிறார். மாநிலம் முழுவதும் இயற்கை விவசாயம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டும் இவர், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரால் 'எனக்குப் பிறகு இவர்தான்' என்று அடையாளம் காட்டப் பட்டவர்!
"பட்டுக்கோட்டை பக்கம் பிச்சினிக்காடுதான் என் சொந்தக் கிராமம். தினந்தந்தியில் மேட்டூர் அணை நீர் மட்டம் பார்ப்பதையும், குறுவைக் கும் தாழடிக்கும் என்ன ரக நெல் போடலாம் என்று பேசுவதையும் தாண்டி, எங்கள் மக்க ளுக்கு வேறு ஒன்றும் தெரியாது. ஐந்து வயதில் பக்கத்து ஊரில் இருந்த தாத்தா-பாட்டி வீட்டுக்கு அனுப்பப்பட்ட நான், அங்கிருந்துதான் 5-ம் வகுப்பு வரை படித்தேன். பள்ளிக்கூடம் போவதே பிடிக்காது. தாத்தாவுடன் வயலுக்குப் போவதும், சேற்றில் இறங்கி விளையாடி வேலை பார்ப்பதும் மனதுக்கு நெருக்கமானதாக இருந்தது. அதிகாலைக் குளிர் வீசும் கருக்கலில் எழுந்து வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதும், அறுப்பு நேரத்தில் காண்டக்காய் விளக்குடன் களத்தில் நெற்கட்டுக்களுக்குக் காவல் இருப் பதுமாக தாத்தாதான் என் விவசாய குரு. ஏழு வயதிலேயே தன்னந்தனியாக ரெட்டை மாட்டு வண்டி ஓட்டுவேன்.
'பையன் இப்படியே இருந்தால் வீணாப்போவான்' என்று நினைத்த அப்பா, என்னைத் திரும்பவும் ஊருக்கு அழைத்துச் சென்று பட்டுக்கோட்டைப் பள்ளியில் சேர்த்துவிட்டார். அங்கு 9-ம் வகுப்பில் ஃபெயில். எங்கள் ஊர், கம்யூனிஸ்ட்டுகள் அதிகம் உள்ள ஊர். என் அப்பா லெனினும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில்தான் இருந்தார். அதனால்தான் எனக்கு ஏங்கெல்ஸ் ராஜா எனப் பெயர் வைத்தார். 9-ம் வகுப்பில் ஃபெயில் ஆனவுடன் 'பள்ளிக்கூடத் தொல்லைவிட்டது' என நினைத்து, ஊரில் நடந்த கம்யூனிஸ வகுப்புகளுக்குப் போகத் தொடங்கினேன். முதலாளிகள், தொழிலாளர்கள், உழைப்புச் சுரண்டல், உலகப் பொருளாதாரம் என ஏதோ ஒன்று எனக்கு மசமசப்பாகப்புரிய ஆரம்பித்தது.
வீட்டில் படிக்கச் சொல்லி தொந்தரவு செய்யவே, பத்தாம் வகுப்பை பிரைவேட்டாக எழுதினேன். மார்ச், அக்டோபர், மார்ச் என மாறிமாறி அட் டெம்ப்ட்டுகள், அத்தனையிலும் ஃபெயில். நான் காவது முறையாக எழுதி 187 மார்க் எடுத்து 10-ம் வகுப்பை பாஸ் செய்தேன். மறுபடியும் ப்ளஸ் டூ-வில் கணக்கில் ஃபெயில். அதையும் எழுதிப் பாஸ் ஆனபோது 'நான் காலேஜுக்கு எல்லாம் போக மாட்டேன்' என்றேன் முடிவாக. ஆனால், சொந்தக்காரர்களை எல்லாம் அழைத்து ஒருபஞ் சாயத்தே நடத்தி, என்னை கோயம்புத்தூர் கல்லூரி ஒன்றில் பிசினஸ் மேனேஜ்மென்ட் சேர்த்துவிட்டனர்.
முதல் நாளே ஒரு பேராசிரியை என்னை 10 நிமிடங்களுக்குத் திட்டினார். அவர் பேசிய இங்கிலீஷில் ஒரு வார்த்தையும் எனக்கு விளங்கவில்லை. திட்டி முடித்ததும், 'எனக்குப் புரியலை' என்றேன். நான் கிண்டல் பண்ணுவதாக நினைத்தவர், கோபமாக வெளியேறினார். அன்று முதல் கடைசி பெஞ்ச்தான் என் இருப்பிடம். கடைசி வருடம் கேம்பஸ் இன்டர்வியூவுக்காகப் பல நிறுவனங்கள் கல்லூரிக்கு வந்தன. 'நீ என்னவாகப் போறே?' என்று கேட்டார்கள் ஒவ்வொருவரிடமும். அமெரிக்கக் கனவு முதல் பெரிய நிறுவனங்களின் உயர் பதவிகள் வரை பலரும் பலவற்றைச் சொன்னார்கள்.
நான் கொஞ்சமும் தயங்காமல் 'விவசாயம் செய்யப்போறேன். விவசாயத்தோடு சேர்த்து ஆட்டுப் பண்ணையும், மீன் பண்ணையும் வைக்கப்போறேன்' என்றதும் அறை எங்கும் சிரிப்பு. நான் கொஞ்சம் தாழ்வுணர்ச்சிஅடைந்த போது, எனக்காக ஒரே ஒரு குரல் ஒலித்தது. ஹெச்.ஓ.டி. சந்தியா மேடம், 'அவன் சொன்னதில் என்ன தப்பு? அவன் தன் விருப்பத் தைச் சொல்றான். இதுக்கு ஏன் சிரிக்கிறீங்க?' என்று கறாராகக் கேட்டவர், 'ஒரு மாணவனை அவமானப்படுத்திவிட்டீர்கள்' என்று சொல்லி அந்த இன்டர்வியூ போர்டையே திருப்பி அனுப்பினார். நான் அவமானப்பட்டு கூனிக் குறுகி நின்ற சமயத்தில் எனக்காக ஒலித்த ஒரே குரல் சந்தியா மேடத்தினுடையது.
பிறகு, காரைக்குடி அழகப்பாவில் எம்.பி.ஏ., முடித்ததும் நேராக ஊருக்குப் போய் விவசாயம் செய்யத் தொடங்கினேன். என் அப்பா இயற்கை விவசாயம் செய்ய, அதைக் கிண்டல் அடித்துவிட்டு நான் ரசாயன உரங்களைக்கொண்டு வெள்ளாமை பார்த்தேன். இரண்டு பேருக்கும் முட்டலும் மோதலுமாகப் போய்க்கொண்டு இருந்த சமயத் தில்தான் தமிழகத்தை சுனாமி தாக்கியது. உயிரிழப்புகள், அதை ஒட்டிய நிவாரணப் பணிகள் எல்லாம் நடந்துகொண்டு இருக்க,கடற் கரையை ஒட்டிய விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டன.
சீறி வந்த சுனாமி, உப்புச் சகதியை வயலில் குவித்துச் சென்றுவிட, விவசாயமே செய்ய முடியாத நிலைமை. வயல்கள் மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான குளம், குட்டைகளும் முழுவதுமாகப் பாதிக்கப் பட்டன. இவற்றைச் சீர்செய்யும் நோக்கத்துடன் நம்மாழ்வார் வேலை பார்க்கத் தொடங்கினார். என் அப்பாவுக்கு நம்மாழ்வாருடன் பழக்கம் இருந்ததால், என்னை நாகப்பட்டினத்துக்கு அனுப்பிவைத்தார். நரை தாடியும், ஒல்லியான தேகமுமாக இருந்த நம்மாழ்வாருடன் பழக ஆரம்பித்தேன்.
வேதாரணயம் தொடங்கி சீர்காழி வரைக்கும் 28 கிராமங்களைச் சேர்ந்த 5,500 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டு இருந்தன. 10 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய விவசாயக் குட்டைகள் கடல் சகதியால் மூடப்பட்டு இருந்தன. ஒவ்வொரு கிராமமாகத் தங்கி, அத்தனை நிலங்களையும் விவசாயத்துக்கு உகந்ததாக மாற்றினோம். மறுபடியும் ஒரு கடல் சீற்றம் வந்தால்கூட பாதிப்பு ஏற்படாதவாறு பனை மரங்களை நட்டு தடுப்புகளை ஏற்படுத்தினோம். 2 வருடங்கள் 20 பேர் இந்த வேலையைச் செய்து முடித்தபோது, 'ஏங்கெல்ஸை என்கிட்ட தந்துடுங்க' என்று என் பெற்றோரிடம் கேட்டு வந்தார் நம்மாழ்வார். இப்போது அவர்தான் எனக்கு ஞானத் தந்தை.
கரூர் பக்கத்தில் கடவூரில் காலம் காலமாக விவசாயமே செய்யப் படாத 35 ஏக்கர் பாறை நிலத்தை வாங்கிச் செம்மைப்படுத்தி விவசாயம் செய்யத் தொடங்கி இருக்கிறோம். இதன் வெற்றி, அந்தப் பகுதியின் ஆயிரக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்களை விவசாயப் பூமியாக மாற்றும்!
தமிழர்களின் பாரம்பரிய நெல் வகைகள் பழங்காலத்தில் நூற்றுக்கும் மேல் இருந்து, அவை பெரும்பாலும் அழிந்து போய்விட்டன. அவற்றைச் சேகரித்துப் பயிரிட்டுப் பரவலாக்கும் பணியைச் செய்கிறோம்.
படித்தவர்கள் விவசாய வேலைகளுக்கு வருவது இல்லை என்பதை ஒரு குற்றச் சாட்டாகவே நாம் சொல்கிறோம். ஆனால், விவசாயத்தை விரும்பிச்செய்வ தற்குரிய சூழல் இங்கு இல்லை. செலவு குறைந்த பாரம்பரிய இயற்கை விவசா யத்தை ஊக்குவிக்க வேண்டிய அரசுகள், பன்னாட்டு உர நிறுவனங்களின் கமிஷன் களுக்காக ஒவ்வொரு வருடமும் உர இறக்குமதியை அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. நமது நிலம் ரசாயன உரங்களால் விஷமேற்றப்பட்டு இருக்கிறது. நம் பாட்டனும், முப்பாட்டனும் செய்த விவசாயத்தை இந்த சமீப காலஎதிரிகளுக்குப் பயந்து ஏன் கைவிட வேண்டும்? இந்த எதிரிகளை விரட்ட, படித்த இளைஞர்கள் பெருமளவுக்கு விவசாயத்தை நோக்கி வர வேண்டும். அவர்கள் அத்தனை பேருடனும் கை குலுக்க நான் என் இரு கரங்களையும் தயாராகவைத்திருக்கிறேன்!"
மூலம் : ஆனந்த விகடன்

தேவையா இந்த இயற்கை விவசாயம்?

இன்றைக்கு எந்தப் பக்கம் திரும்பினாலும் 'இயற்கை விவசாயம்' என்பதற்கு ஆதரவான
குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. தமிழகத்தின் வேளாண்துறை செயலாளாராக இருக்கும்
சுர்ஜித் கே. சௌத்ரி கூட, ''அறிவியலும் இயற்கையும் இணைந்த வேளாண்மையே
வெற்றிக்கான வழி'' என்று வழிமொழிகிறார்.

ஆனால், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் பல்கலைக்கழக தரப்பிலோ, ''பெருகிக்
கொண்டிருக்கும் மக்கள் தொகையின் உணவுத் தேவையை சமாளிக்க, இயற்கை விவசாயத்தால் முடியாது. ரசாயனம் மற்றும் பூச்சிக்கொல்லி ஆகியவற்றை பயன்படுத்தி அறிவியல் பூர்வமாக செய்துவரும் விவசாயத்தின் மூலமும், மரபணு மாற்றுப்பயிர்களை
பயிரிடுவதன் மூலமும்தான் அது சாத்தியம். இயற்கை விவசாயம் என்பதும் ஒரு
தொழில்நுட்பம். அதைத் தவிர பெரிதாக ஒன்றுமில்லை'' என்று அடித்துச்
சொல்கிறார்கள்.

இந்தச் சூழலில், 'உணவு உற்பத்தி என்பது போதுமான அளவுக்கு இருக்கிறது. ஆனால்,
அதை பங்கிட்டுக் கொடுப்பதற்கு மனதுதான் இல்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு,
செயற்கையான ரசாயன விவசாயத்துக்கு பலரும் வால் பிடிக்கிறார்கள்' என்று
விளாசுகிறார் கட்டுரையாளர். அவர் எடுத்து வைக்கும் வாதங்கள் நிச்சயமாக யோசிக்க
வேண்டியவை என்பதில் சந்தேகமில்லை!

*பெருகி வரும் மக்கள் தொகையைச் சமாளித்து, இத்தனை மக்களுக்கும் எப்படி
சோறிடுவது...?'*

-இன்று உலகெங்கும் உள்ள விவசாய அறிஞர்கள், ஆட்சியா ளர்கள், அதிகாரிகள்,
அரசியல்வாதிகள், பொதுநலவாதிகள் மற்றும் உணவுத்துறை நிபுணர்கள் முன்பாக
விஸ்வரூபமெடுத்து நிற்கும் ஒரு கேள்வி இது.

புதிதாக விளைநிலங்கள் உருவாக்க இனி வழியில்லை. காடுகள் அழித்து கழனிகள்
ஆக்குவது இனி முடியாது. மாற்றத்தக்க நிலம் அனைத்தையும் கிட்டத்தட்ட
விளைநிலமாக்கி விட்டோம். ரசாயன உர பயன்பாடு காரணமாக இப்போது, விளைச்சலின்
அளவும் படிப்படியாக குறைந்து வருகிறது. இருக்கிற விளைநிலங்களும் களர் மற்றும்
உவர் மண் பிரச்னைகளால் பாழ்பட்டு வருகின்றன. காடு அழித்தல், விளைநிலம்
கெடுத்தல் காரணமாக பாழ்நிலமாதலின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிக் கொண்டே
போகிறது. நமக்கு இருக்கும் ஒரே வழி, ஏற்கெனவே இருக்கின்ற விளைநிலத்தில் அதிகம்
விளைவிக்க வேண்டும் என்பதுதான்.

இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, ''உலகின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய
விவசாயத்தில் மேலும் புதிய தொழில்நுட் பங்களைப் பயன்படுத்த வேண்டும். மரபணு
மாற்றுத் தொழில்நுட் பம்தான் ஒரே வழி, இரண்டாவது பசுமைப் புரட்சி தான் ஒரே
தீர்வு'' என்கிறார்கள் 1960-களில் நிகழ்த்தப்பட்ட முதலாம் பசுமைப் புரட்சியின்
ஆதரவாளர்கள்.

ஆனால், இவர்களின் ஆதரவு, விதைக் கம்பெனிகளுக்கும் உரக் கம்பெனி களுக்கும்தான்
லாபத்தைக் கொடுக்கும் என்பதற்கு கடந்த நாற்பதாண்டு கால இந்திய விவசாயமே சான்று.
நிச்சயமாக விளைச்சல் அதிகரிக்கப் போவதில்லை. இப்போது இவர்கள் தூக்கிப் பிடிக்க
ஆரம்பித்திருக்கும் மரபணு மாற்றுப் பயிர்கள், விளைச்சலை அதிகரிக்க வந்தவையல்ல.
''புழு மற்றும் பூச்சிகளிடமிருந்து பயிர்களைக் காப்பாற்ற மட்டுமே மரபணு
மாற்றுப்பயிர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விளைச்சலை அதிகப் படுத்தும் தந்திரம்
எதையும் அதற்குள் புகுத்த வில்லை'' என்று இவ்விதைகளை உருவாக்கிய கம்பெனிகளே
சொல்கின்றன.

அப்படியிருக்கும்போது, ''உலகப்பசியைப் போக்க, மரபணு மாற்று தொழில்நுட்பம்
மட்டுமே தீர்வு என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும்?'' என்றொரு கேள்வி
எழுகிறது.

உடனே, ''பல்வேறு தொழில்நுட்பங்களைப் புகுத்தி உருவாக்கப்பட்ட ரசாயன விவசாயத்
தாலும், மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தாலும் கூட எல்லோருக்கும் சோறுபோட
முடியாது எனும்போது, அறிவியல் சார்ந்த ஆய்வுகளின்றி வழிவழியாக
பின்பற்றப்பட்டுவரும் இயற்கை விவசாயத்தால் எல்லோருக்கும் சோறு போட்டுவிட
முடியுமா?'' என்று எதிர்கேள்வி நிச்சயமாக எழும்.

*மண்ணைக் கெடுக்காதீர்கள்!*

எல்லோருக்கும் உணவு எனும்போது... நாட்டில் எவ்வளவு விளைநிலம் உள்ளது... அதன்
இன்றைய தரம் என்ன... எவ்வளவு விளைகிறது... எவ்வளவு அதிகம் விளைவிக்க முடியும்? என்று பல்வேறு துணைக்கேள்விகளுக்கான பதில்களை நாம் கண்டாகவேண்டும்.

விளைநிலத்தை அதிகரிக்க முடியாத நிலையில் தற்போதிருக்கும் ஒவ்வொரு சதுர அடி
நிலமும் மிக முக்கியமானதாகிறது. பூமிப்பரப்பில் சுமார் 2% மட்டுமே விளைநிலம்.
அதாவது, ஒரு ஆப்பிள் பழத்தை நமது பூமி உருண்டையாக நினைத்து அதை 100 சம
துண்டுகளாக்குவோம். அதில் 2 துண்டுப் பகுதிதான் விளைநிலம். விளைச்சலை முடிவு
செய்வது, அந்நிலத்தின் உயிரோட்டமுள்ள மேல்மண் பகுதியே. பொதுவாக இதன் அளவு அரை அடி முதல் 1 அடி ஆழம் வரையே. இதிலிருந்துதான் உலகில் தற்போது வாழ்ந்து
கொண்டிருக்கும்... நாளைக்கு பிறந்து வாழப்போகும் மக்களுக்கும் கால்நடைகளுக்கும்
தேவையான உணவை விளைவிக்கவேண்டும்.

இவ்வளவு முக்கியமான மேல்மண்ணை இப்போது நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம்? 10
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் விவசாயத்தில் சிதையாமல் இருந்த
விளைநிலத்தை, கடந்த 50 ஆண்டுகால பசுமைப் புரட்சியின் ரசாயன விவசாயம் பெருமளவு
பாதித்துவிட்டது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

கடந்த 35 ஆண்டு காலமாக 'உயர் விளைச்சல் உயிரியல் பண்ணை மாதிரி' என்பதை நடத்தி வரும் ஜான் ஜீவன்ஸ் என்ற பிரெஞ்சு விஞ்ஞானி, இந்த மண்ணிலிருந்து நமக்குக்
கிடைக்கும் ஒவ்வொரு கிலோ உணவும் எப்படி வருகிறது என்பதை விளக்குகிறார்.

'அமெரிக்காவில் இயந்திரமய ரசாயன விவசா யத்தின் மூலம் விளைவிக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவும் 6 கிலோ மண்ணின் உயிர்த் தன்மையை அழித்து விளைகிறது. அமெரிக்காவின் மாதிரியைப் பின்பற்றும் மூன்றாம் உலக நாடுகளிலோ 12 கிலோ மண்ணின் உயிர்த்தன் மையை அழித்து 1 கிலோ உணவு பெறப்படுகிறது. அமெரிக்காவின் விவசாய முறையை அப்படியே கடைப்பிடிக்கும் சீனத்தில் 18 கிலோ அழிக்கப்பட்டு 1 கிலோ விளைவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் இயந்திர வழி இயற்கை விவசாயத்தில் 3 முதல் 5.5 கிலோ மண்ணில் உள்ள உயிர்த்தன்மை அழிக்கப் பட்டு 1 கிலோ உணவு பெறப்படுகிறது' என்கிறார்.

பயிர்களை விளைவிப்பதற்காக மேல் மண்ணின் உயிர்த்தன்மையை அழித்திடும் இத்தகைய
தொழில்நுட்பங்களை இனியும் தொடர்ந்தால்... விளைநிலங்கள் எல்லாமே பாழ்நிலங்களாகி,
வெறும் தூசுக் குவியல் மட்டுமே மிஞ்சும். பாழ் பட்ட நிலத்தில் எருக்கும்,
ஊமத்தையும், பாதாள மூளியும்தான் வளருமே ஒழிய பயிர்கள் வளர்வது கடினம். மண்ணின் உயிர்த்தன்மையை அழிக்காத, மேல்மண்ணைத் தொடர்ந்து மேம்படுத்தும் பல வகை இயற்கை விவசாய முறைகள் மட்டுமே இப்பூமிப் பந்தையும் அதிலுள்ள ஜீவராசிகளையும் காப்பாற்றுவதற்கான ஒரே வழி. இத்தகைய முறைகள் இப்போது புழக்கத்தில் உள்ளன. *'தழைச்சத்துக்கு எங்கு செல்வது... மணிச்சத்து எங்கே கிடைக்கும்?'*

'இயற்கை வழி விவசாயம்' என்றதுமே ஒரு சிலர் பெருத்தக் குரலில் கூப்பாடு
போடுகிறார்கள். ''தேவைப்படும் தழைச்சத்துக்கு எங்கு செல்வது... மணிச்சத்து
எங்கே கிடைக்கும்'' என்பது போன்ற வாதங்களையும் சர்ச்சைகளையும்
எழுப்புகிறார்கள். ஆனால், கடந்த பல ஆண்டு காலமாக இயற்கை வழி விவசாயத்தின் மூலம்
உயர்விளைச்சல் கண்டோரின் பட்டியல் உயர்ந்து கொண்டே இருக்கிறது. ''இயற்கை வழி
விவசாயத்தில் அதிகம் விளைகிறது... தரமானதாக விளைகிறது'' என்று அந்த விவசாயிகள்
எல்லாம் உரக்கக் கூறுகிறார்கள். அதையெல்லாம் கண்கூடாகக் கண்ட பின்பும், இந்த
சர்ச்சையாளர்கள் உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

'உள்ளூர் சரக்கு சரியானதாக இருக்குமா?' என்ற ஒரு வகைத் தாழ்வுணர்வு எப்போதும்
இருந்து வருகிறது. அதுமட்டுமல்ல... எதுவாக இருந்தாலும் படித்தவர்கள்
சொன்னால்தான் நம்பவேண்டும் என்ற பிடிவாத குணமும் மேலோங்கி நிற்கிறது. மேலை
நாட்டினர், வெள்ளைத் தோலுடையவர்கள் சொன்னால் சரியாக இருக்கும் என்ற அபத்தமும்
அதிகமாக இருக்கிறது. அத்தகையோருக்காக... இதோ மேலும் சில உதாரணங்கள்....

*வெள்ளைத்தோலே விளக்குகிறது...!*

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், பலகாலமாக தீவிர இயற்கை விவசாயம் செய்பவர். ஐ.நா.
சபையின் உணவு மற்றும் உழவு அமைப்பின் ஆய்வை முன்னே வைக்கிறார். அவர் சொல்வது
இதுதான்-

* பொலிவியா நாட்டில் இயற்கை வழி விவசாயம் மூலம் ஹெக்டேருக்கு 15 டன்கள்
உருளைக்கிழங்கு விளைவித்துள்ளார்கள். அதற்கு முன்பு ஹெக்டருக்கு 4 டன்கள்
மட்டுமே கிடைத்து வந்தது.

* இயற்கை விவசாயத்தின் மூலம் கியூபாவில் காய்கறிகளின் விளைச்சல் இரு மடங்கானது.

* பஞ்சத்தில் சிக்கித் தவித்த எத்தியோப்பியாவில் சர்க்கரை வள்ளிக் கிழங்கின்
விளைச்சல் ஹெக்டருக்கு 6 டன்னிலிருந்து 30 டன் என்று உயர்ந்தது.

* கென்யாவில் மக்காச்சோள விளைச்சல் ஹெக்டருக்கு 2.25 டன்னிலிருந்து 9 டன் என்று
உயர்ந்தது.

* பாகிஸ்தானில் மாம்பழ விளைச்சல் 7.5 டன் என்பதில் இருந்து 22 டன் ஆக
உயர்ந்தது.

மேற்கண்ட எல்லா இடங்களிலும் ஏதோ 10%, 20% என விளைச்சல் உயரவில்லை 3 மடங்கு
முதல் 6 மடங்கு வரை உயர்ந்திருக்கிறது என்பது கவனிக்கப்படவேண்டிய அம்சமாகும்.

இவ்வளவு ஏன், நம்முடைய அண்டை மாநிலமான ஆந்திராவில் நாகரத்தின நாயுடு ஒற்றை
நாற்று, இயற்கை விவசாயம் மூலம் ஏக்கருக்கு 6,900 கிலோ நெல் விளைவித்துள்ளார்.
இந்தச் சாதனைகளெல்லாம் இயற்கை விவசாயத்தின் மூலம் நடந்தவைதான்.

*அடித்துச் சொல்லும் ஆய்வுகள்!*

எதைச் சொன்னாலும், 'இது பற்றி ஆய்வுகள் நடந்துள்ளனவா... அறிவியல் அடிப்படை
இருக்கிறதா... அதற்கு என்ன ஆதாரம்?' என்ற கேள்விகளை வீசி மடக்கப்
பார்க்கின்றனர் இயற்கை வேளாண் மைக்கு மறுப்பும் எதிர்ப்பும் சொல்லும் கூட்டத்
தினர். அவர்களுக்கென்றே பல்வேறு ஆய்வு முடிவுகளையும் நம்மால் முன்
வைக்கமுடியும்.

*100 கோடி பேர் பட்டினி... 170 கோடி பேருக்கு உடல் பருமன் நோய்! *

மிக்சிகன் பல்கலைக்கழகத்து விஞ்ஞானிகள் குழு, 'உலகம் முழுவதும் இன்றே இயற்கை
விவசாயத்துக்குத் திரும்பினால், விளைச்சல் எப்படியிருக்கும்' என்று ஆராய்ந்து
இரு வகையான விவரங்களைக் கொடுத்துள்ளது. 1. வளர்ந்த நாடுகளில் இயற்கை வழி
விவசாயத்தின் மூலம் இப்போது பெறும் விளைச்சலில் 80% பெற முடியும். 2. வளரும்
நாடுகளில் இந்தியா உள்பட விளைச்சலின் அளவு 2 மடங்கு முதல் 4 மடங்கு வரை உயரும்.
ஆனால், இயற்கை விவசாயத்துக்கு மாறுவதில் சிக்கல்கள் உள்ளன. போதுமான கால்நடைகள்,
ஆட்கள் என்று ஆரம்பக்கட்ட தேவைகளைப் பூர்த்திச் செய்வது முக்கியம் என்று
சொல்லியிருக்கிறது அந்தக் குழு.

சுவிட்சர்லாந்தில் உள்ள இயற்கை வழி விவசாய ஆய்வு நிலையம், கடந்த 21 ஆண்டுகளாக
வடஅமெரிக்கா, ஐரோப்பாவில் நடந்த இரண்டாயிரத்துக்கும் மேலான ஆய்வுகளை
ஆராய்ந்தது. 'உலக உணவு விருது' பெற்ற அமெரிக்கரான பெர் பின்ஸ்ட்ரப் ஆண்டர்சன்
தலைமையிலான குழு, தன்னுடைய ஆய்வின் முடிவில், ''ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில்
உள்ள அனைத்து உழவர் களும் இயற்கை வழி விவசாயத்துக்குத் திரும்பினால்,
விளைச்சலின் அளவு இப்போது விளைவதில் 80% இருக்கும்'' என்று சொன்னது.

இங்கிலாந்தில் உள்ள எஸ்செக்ஸ் பல்கலைக்கழகத்தின் ஜூலியஸ் பிரட்டி, ராச்சேல்
ஹின் ஆகியோர் வளரும் நாடுகளில் நடப்பில் இருக்கும் 200-க்கும் மேலான இயற்கை வழி
விவசாயத் திட்டங்களை அலசி ஆராய்ந்தனர். இத்திட்டங்கள் 90 இலட்சம் பண்ணைகளில்
7.2 கோடி ஏக்கரில் நடந்தவை. இவர்களது ஆய்வு, எல்லோரும் இயற்கை விவசாயத்துக்கு
மாறினால், இப்போது விளைவதில் 93% விளைச்சலை உலகம் உடனடியாகப் பெறும் என்கிறது.

மத்திய இந்தியாவில் 1,000 பண்ணைகளில் 7,750 ஏக்கரில் இயற்கை வழியில் பயிரிடப்
பட்ட பருத்தி, கோதுமை, மிளகாய், சோயா பீன்ஸ் பயிர்களின் விளைச்சல் ரசாயன
விவசாயத்தை விட 20% அதிகமிருந்ததாக அங்கு நடந்த 7 ஆண்டு ஆய்வுகளின் முடிவுகள்
தெரிவிக் கின்றன.

இந்த ஆய்வுகளின் முடிவுகளைத் தொகுத்து, 'வேர்ல்டு வாட்ச் இன்ஸ்ட்டிடியூட்'
2006-ம் ஆண்டில் சில ஆய்வுகளை வெளியிட்டது. இந்த ஆய்வுகளின் ஒட்டுமொத் தமான
முடிவுகள் - 'உலக உழவர்கள் இன்றே இயற்கை வழி விவசாயத்துக்கு மாறினால் வளர்ந்த
நாடுகளில் விளைச்சல் இப்போது பெறுவதில் 80% இருக்கும். வளரும் நாடுகளில் 2.4
மடங்கும் இருக்கும்' என்பதுதான்.

''வளரும் நாடுகள் பரவாயில்லை. ஆனால், வளர்ந்த நாடுகளில் 20% விளைச்சல் குறைவு
ஏற்படும் என்கிறதே ஆய்வு முடிவுகள். இது உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்துமே?''
என்ற ஐயம் உடனே எழும். உலக மக்கள் தொகையில் அதிக மக்கள் வாழ்வது வளரும்
நாடுகளான மூன்றாம் உலக நாடுகளில்தான். பசியால் வாடுவதும் மாய்வதும் இந்த
நாடுகளில்தான். எனவே, இங்கு அதிகம் மகசூல் காண வேண்டும் என்பதே எல்லோரின்
ஆசையாக இருக்கிறது-சர்வதேச உணவு தானிய வியாபாரிகள் தவிர! எனவே, வளரும்
நாடுகளில் மீதமாகும் விளைபொருட்கள் வளர்ந்த நாடுகளின் பற்றாக்குறையையும்
போக்கும். ஏழை நாடுகளின் அன்னியச் செலவாணி பெருகும்.

*இன்னொரு கோர முகம்!*

உணவு உற்பத்தி குறைந்துவிட்டது... உணவுப் பஞ்சம் வரும்... பட்டினிச் சாவுகள்
ஏற்படும்... என்றெல்லாம் எப்போது பார்த்தாலும் சொல்லப் படுகிறது. ஏற்கெனவே
பட்டினிச்சாவு களும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு உண்மையான
காரணம்... உணவு உற்பத்தி குறைவுதானா? என்றொரு கேள்வியை எழுப்பினால்,
பிரச்னையின் இன்னொரு கோரமுகம் உங்களைப் பார்த்து கோரைப் பற்களுடன் சிரிக்கும்
என்பதே உண்மை.

இந்தப் பூமியில் ஒவ்வொரு இரவும் ஏறத்தாழ 100 கோடி மக்கள் உணவின்றி பசித்த
வயிறுடன் உறங்குகின்றனர். இவர்களுக்கு வழங்கக்கூடிய அளவு உணவு இப்போது இங்கு
உண்மையில் விளையவில்லையா?

வறுமை மற்றும் பட்டினி ஆகியப் பிரச்னையை ஒட்டி, உலகை நம்ப வைப்பதற்காக பல்வேறு
கருத்துக்களை விஞ்ஞானிகளும் அரசியல்வாதி களும் எடுத்து வைக்கின்றனர்.
பெரும்பாலும் அவையெல்லாம் கட்டுக்கதைகள் என்பதே உண்மையாக இருக்கிறது. அவற்றில்
பன்னிரண்டு விஷயங்களைத் தொகுத்து '12 கட்டுக்கதைகள்' என்ற தலைப்பில் ஒரு
ஆய்வறிக்கையை 1998-ல் வெளியிட்டிருக்கிறது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரான்சஸ்
மோரே லேப்பி தலைமை யிலான குழு. ஒவ்வொரு அம்சத்தையும் அலசி ஆராய்ந்து அத்தனையும்
பொய் என்று சொல்லியி ருக்கிறது அந்தக் குழு. அந்தப் பன்னிரண்டு
'கட்டுக்கதை'களில் முக்கியமானது, 'மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப போதுமான
உணவு உற்பத்தி இல்லை' என்பதுதான்.

இதைப்பற்றி அந்தக் குழு சொல்வது இதுதான்-

''உலகில் எல்லோரின் தேவைக்கும் அதிகமான தானியங்கள், காய்கறிகள் எல்லாமே விளை
கின்றன. மொத்த விளைச்சலை அப்படியே தலைக்கு இவ்வளவு என்று பிரித்து வழங்கினால்,
ஒவ்வொருவருக்கும், தினசரி 1.25 கிலோ தானியங்கள் மற்றும் பயறு வகைகள், ஏறத்தாழ
அரை கிலோ காய்கறிகள், பழங்கள், கால் கிலோ மாமிசம், பால், முட்டை கிடைக்கும்.
இவற்றின் மூலம் ஒவ்வொருவரும் பெறக்கூடிய சக்தியின் அளவு 3,500 கலோரி. ஆனால்,
நன்கு வளர்ந் திருக்கும் ஒரு மனிதனின் தேவை 2,100 கலோரி முதல் 2,500
கலோரிகள்தான். தினசரி 3,500 கிலோ கலோரி அளவு உணவு உட்கொண்டால், உலகத்தில் உள்ள
அத்தனை பேருக்கும் உடல் பருமன் ஒட்டிய நோய்கள் வந்து சேரும்.''

*பயங்கரவாத ஃபாஸ்ட் புட்!*

'துரித உணவு' எனப்படும் 'ஃபாஸ்ட்ஃபுட்' இந்தப் பல்லாயிரமாண்டு பண்பாட்டை
அழிக்கிறது. தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு 'ஒரே சுவை, ஒரே மணம், ஒரே
மாதிரியான தரம்' என்ற முழக்கங்கள் புடைசூழ வருகிற பதப்படுத் தப்பட்ட உணவு. இதை
எதிர்த்து, மக்களுடைய உணவுப் பண்பாட்டைக் காக்க இத்தாலியைத் தலைமையிடமாகக்
கொண்டு சுமார் 100 நாடுகளில் இயங்குகிறது 'ஸ்லோ ஃபுட்' என்ற இயக்கம். இதன்
தலைவரான கார்லோ பெர்ட்டினி, ''630 கோடி மக்கள் உள்ள இந்த உலகில், தினமும் 80
கோடிக்கும் மேலான மக்கள் பசியால் வாடுகின்றனர். ஆனால், இதே உலகில் 170 கோடி
மக்கள் உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக உணவு உற்பத்தியோ...
இன்றைய மக்கள் தொகையைப் போல இரண்டு மடங்கு பேருக்கு, அதாவது சுமார் 1,200 கோடி பேருக்குத் தேவையான அளவு விளைவிக்கப்படுகிறது. என்ன பைத்தியக்கார உலகம் இது?'' என்று ஆதங்கப்படுகிறார்.

*ஒவ்வொரு நாளும்... ஒவ்வோர் ஆண்டும்! *

உலக அளவில் பட்டினியின் காரணமாக ஒவ்வொரு நாளும் 24,000 பேர் மடிகின்றனர்.
இவர்களில் 78% பேர் குழந்தைகளும், பெண்களும். 140 கோடிக்கும் அதிகமான மனிதர்கள்
நீண்ட காலம் பட்டினியில் உழல்பவர்கள். மொத்தத்தில் ஒவ்வொரு ஆண்டும் 1 கோடியே 30
லட்சம் சகோதர, சகோதரிகளை பட்டினி அரக்கனுக்குக் காவு கொடுத்துக்
கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொர் இரவும் பசித்த வயிற்றுடன் படுக்கைக்குச் செல்லும் இந்தியச் சகோதர,
சகோதரிகள் 34 கோடி பேர். பட்டினி என்ற அரக்கனின் பிடியில் சிக்கி ஒவ்வொரு
நாளும் சுமார் 10,000 இந்திய சகோதரர்கள் உயிரை விடுகின்றனர். இதுவே ஓராண்டுக்கு
சுமார் 40 லட்சம் பேர்.

தனக்கு ஒரு பிரச்னை என்றதும் மனிதாபிமானம், மண்ணாங்கட்டி என்றெல்லாம்
வாய்ச்சவடால் விடும் பேர்வழிகளே... இப்போது சொல்லுங்கள் ஆண்டுதோறும் 1 கோடியே
30 லட்சம் பேர் இறந்து போவதற்கு காரணம்... போதிய விளைச் சலின்மையா... போதுமான
மனது இல்லாமையா?

ஹிட்லரின் இனவெறி காரணமாக நடத்தப்பட்ட 2-ம் உலக (வணிகப்) போரில் உலகெங்கும்
இறந்தவர்களின் எண்ணிக்கை 60 லட்சம் பேர். இன்று பட்டினியால் மடிபவர்கள்
ஆண்டுதோறும் 130 லட்சம் பேர். அதாவது, ஒவ்வொர் ஆண்டும் இரண்டு உலகப் போர்களை
நிகழ்த்திக் கொண்டி ருக்கிறான் பட்டினி அரக்கன் -செயற்கையாக!

ஆக, உலகில் பசி, பட்டினிக் கொடுமைகளுக்குக் காரணம், தேவையான அளவு விளையாதது
அல்ல. பசியில் வாடுவோரிடம் போதுமான வாங்கும் சக்தி இல்லை என்பதே உண்மை. இது
விவசாயம், விளைச்சல் சார்ந்த பிரச்னையில்லை. அரசியல், பொருளியல் சார்ந்த
பிரச்னை. இதைத் தீர்த்து வைப்பதற்கு இன்றைக்கு நமக்குத் தேவைப்படுவது... மரபணு
மாற்றுப் பயிர்கள் அல்ல. தேவைப்படும் சமூகப் பொருளாதார மாற்றங்களை செய்யக்கூடிய
அரசியல் சக்தி.

அப்படி தீர்வு காணப்பட்டால், மண்வளம் காத்து, இயற்கை வளம் பேணி, தரமான
சத்துக்கள் மிகுந்ததை விளைவித்துத் தரும் இயற்கை வழி விவசாயத்தின் மூலம்
இன்றுள்ள மக்கள் தொகையைப் போல 3-4 மடங்கு மக்களுக்கு அமுத அன்னம் படைக்க
முடியும். விவசாயிகளின் பொருளாதார நிலைமையும் மேம்படும்.

இவ்வளவு உண்மைகள், ஆதாரங்கள் இருக்கின்றன என்று எடுத்துக்காட்டிய பிறகும்,
'இயற்கை வழி விவசாயம் மூலம் எல்லோருக்கும் சோறு போட முடியுமா?' என்று கேள்வி
எழுப்பினால், அவர்களெல் லாம் கண் முன் உள்ள உண்மையை அலசிப் பார்க்க
முடியாதவர்கள் அல்லது ரசாயன விவசாயத் துக்குத் தாலி கட்டிக்கொண்டு, மண்ணை
மலடாக்கும் கம்பெனிகள் தந்த போலி அறிவியலை, கம்பெனி களை வாழ வைப்பதற்காக
இருப்பவர்கள் என்றுதானே பொருள்.

*'வறுமையே உலகின் மிகப் பெரிய வன்முறை' என்று சொல்லியிருக்கிறார் காந்தி- *

சிந்தியுங்கள் நண்பர்களே!

*ஸ்லோ ஃபுட்!*

'ஃபாஸ்ட் ஃபுட்' என்பது ஒரு வகை உணவோ அல்லது உணவகங்கள் சம்பந்தப்பட்டது
மட்டுமல்ல. பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய புதுவித கலாச்சாரத்தின் முகம் அது.
அதாவது... விவசாயம், இயற்கைச்சூழல், இயற்கை ஆதாரங்கள் மீது உள்ளூர் மக்களுக்கு
உள்ள உரிமை, உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வணிகம், விதை, உணவுத்
தொழில்நுட்பங்கள் என்று பலவற்றின் மீதும் பகாசுர கம்பெனிகள் செலுத்த
ஆரம்பித்திருக்கும் ஏகபோகத் தின் வெளித்தோற்றம்தான் ஃபாஸ்ட்ஃபுட்.

இதன் மூலம் உலக மக்களை அடிமையாக்குவதைத் தடுத்து நிறுத்தி, உலக மக்களை உணவுக்
கலாச் சாரம் மூலம் ஒன்றிணைக்க முயலும் அமைப்பே ஸ்லோ ஃபுட். உணவு என்பது அந்தந்த
வட்டாரக் கலாச்சாரத்துடன், இயற்கைச் சூழலுடன் பின்னிப் பிணைந்த ஒன்று. இத்தகைய
உணர்வைப் பரப்பும் அமைப்பே ஸ்லோ ஃபுட். இந்த அமைப்பின் அடையாளச் சின்னம் நத்தை.
1986-ம் ஆண்டு இத்தாலியில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு இன்று 104 நாடுகளில்
பரவியுள்ளது.

சனி, 10 ஏப்ரல், 2010

தங்கமான தங்கசாமி

உங்களை ஒரு மா மரக் கன்றை நட்டு வளர்க்கச் சொன்னால் என்ன செய்வீர்கள்? நீங்கள் எப்படியோ தெரியாது; பெரும்பாலானவர்களின் சிந்தனை, “இந்த கன்னு எப்போது வளர்ந்து, எப்போது மரமாகி, எப்போது காய்த்து, எப்போது பழம் சாப்பிடுவது? அதற்குள் நம் காலமே முடிந்துவிடும்” என்றுதான் போகும். ஆனால், தனக்கு மாம்பழம் கிடைக்குமா என எதிர்பார்க்காமல், தொடர்ந்து மா மரங்களை நடுபவர்களால்தான் இந்த உலகம் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது என்பது காலம் உணர்த்தும் உண்மை. அப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த மனிதர்களுள் ஒருவர், மரம் தங்கசாமி!


தனது பெயருடன் மரத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கும் தங்கசாமி, காடு வளர்ப்பில் உலகு க்கே இன்று ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். உலகின் பல பகுதிகளில் இருந்தும் வேளாண் ஆராய் ச்சியாளர்கள் தங் கசாமியின் தோட்டத்துக்கு வந்து பார்வையிடுகிறார்க ள். தனி மனிதனாக அவர் செய்திருக்கும் சாதனைகள் பற்றி புத்தகம் எழுதுகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள், வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக இருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்த மங்கலத்துக்கு அருகே சேந்தன்குடி என்னும் கிராமத்தில், இருபத்தைந்து ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த காடு போல் இருக்கும் அவரது தோட்டத்துக்கு மாணவர்கள் பயிற்சிக்காக வருகிறார்கள். மரம் வளர்க்கும் தங்கசாமியின் பணி மற்றும் மக்களிடையே மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவரது சேவை ஆகியவற்றைப் பாராட்டி ஜனாதிபதி விருது தங்கசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.இன்று பலராலும் மலைப்பாக பார்க்கப்படும், கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் மரம் தங்கசாமி, ஒரு காலத்தில் கடன்காரராகி, கடனை அடைக்க சொத்தை விற்றுவிட்டு எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குப் போகலாமா என யோசித்துக் கொண்டிருந்தவர் என்பதுதான் உண்மை. அவர் வெற்றி பெற்றது எப்படி? அவரது கதையை அவரே சொல்கிறார்...“எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாத, உழைப்பில் நம்பிக்கை உள்ள விவசாயி நான். எனக்கு இரண்டு மனைவிகள், இரண்டு குழந்தைகள். எங்கள் குடும்பத்தார் அனைவரும் தினமும் பத்து முதல் பதினைந்து மணி நேரம் உழைத்தோம். ஆனாலும் நான் கடன்காரனானேன். 1975இல் வந்த கடுமையான வறட்சியின் போது, உற்பத்தி செய்த எந்த விவசாயப் பொருளுக்கும் கட்டுப்படியாகிற விலை இல்லை. இதனால் சாகுபடி செலவைக்கூட திரும்பி எடுக்கமுடியாத நிலை. விஞ்ஞான முறைப்படி விவசாயம் செய்ததால், ரசாயண உரங்களுக்குச் செய்த செலவே என்னைப் பெரிய கடன்காரனாக ஆக்கிவிட்டது. என்ன செய்வது என்று சிந்திக்கத் தொடங்கினேன். சொத்தை எல்லாம் விற்று கடன்களை அடைத்துவிட்டு, எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குச் சேர்ந்து குடும்பத்தையாவது காப்பாற்றுவோம் என்று தோன்றியது. வேறு வழி இல்லை.அப்போது பேராசிரியர் சீனிவாசன், 'மரப்பயிரும் பணப்பயிரே' என்னும் தலைப்பில் அகில இந்திய வானொலியில் பேசியதைக் கேட்டேன். அதுதான் என் வாழ்வின் திருப்புமுனை. அன்றே நான் செய்துவந்த விவசாய முறைகள் அனைத்தையும் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, மரம் வளர்ப்பது என்று முடிவு செய்தேன். அப்போது எனக்கு நாற்பத்தைந்து வயது. நூறு தேக்கு மரங்களை நட்டேன். இருபது வருடங்களுக்குப் பிறகு, ஒவ்வொன்றாக அவற்றை வெட்டி விற்று வயதான காலத்தை ஓட்டுவதுதான் அப்போதைய என் திட்டம். ஆனால், ஒரு வருடத்திலேயே இருபது அடி உயரம் அவைகள் வளர்ந்தன. அது தந்த உற்சாகத்தில் நூறு மாங்கன்றுகளை நட்டேன். அப்புறம் அது அப்படியே நூறு முந்திரி, நூறு புளி என்று வளர்ந்துக் கொண்டே போனது.மர வகைகளைத் தேடி பயணம் செய்த போது நம்மாழ்வார் பற்றி கேள்விப்பட்டு அவரைச் சந்தித்தேன். அவரைச் சந்தித்தது என் வாழ்வின் இரண்டாவது திருப்புமுனை. அன்றே அவரை என் குருவாக ஏற்றுக்கொண்டேன். தேசிய நிகழ்ச்சிகள், தேர்தல், தலைவர்களின் பிறந்த தினம் உட்பட எல்லா விஷேச நாட்களிலும் மரங்கள் நடுவேன். வீரப்பன் சுடப்பட்ட அன்று ஒரு சந்தன மரத்தை எங்கள் தோட்டத்தில் நட்டேன். எனக்கு மரம் நட ஒரு காரணம் தேவைப்படுகிறது. அதற்கு நான் சம்பவங்களையும் பண்டிகைகளையும் பயன்படுத்திக் கொள்கிறேன். அவ்வளவுதான். இப்போது என் தோட்டத்தில் நூற்றி தொன்னூறு சாதிகளைச் சேர்ந்த ஐயாயிரம் மரங்கள் இருக்கின்றன.ஏன் ஒரே வகை மரங்களை வைக்காமல் பல்வேறு மரங்களை கலந்து நடுகிறேன் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஒரு மரம் பூமியிலிருந்து ஒரு சத்தை எடுத்து, இன்னொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இந்த மரம் கொடுக்கும் சத்தை உண்டு செழிக்கும் இன்னொரு மரம் வேறொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இப்படியே இந்த சங்கிலி பலவேறு ஜாதி மரங்களுக்கும் தொடரும். காடு செழித்திருப்பதன் தத்துவம் இதுதான். எல்லா மர வகைகளும் ஒரே இடத்தில் இருக்கும் போது எல்லா மரங்களுக்கும் சரிசதமாக சத்து பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. இதனால், நானும் ஒரே வகையாக இல்லாமல், காடு போல் பல்வேறு வகை மரங்களை கலந்து வைத்திருக்கிறேன். வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், செஞ்சந்தனம், மகோகனி, நெல்லி, புளி என்று பல்வேறு மர வகைகளுடன் இப்போது என் பண்ணை ஒரு மாதிரி பண்ணையாக இருக்கிறது. கலப்பு பண்ணையின் மூலமே தன்னிறவு அடைய முடியும் என்பதுதான் என் அனுபவம். கடன் இல்லாத விவசாயம், நோய் இல்லாத வாழ்க்கை, நஞ்சில்லா உணவு இதன் மூலம்தான் சாத்தியம்.திருமண வைபவங்களுக்கு செல்லும் போது மணமக்களுக்கு மரக் கன்றுகளைப் பரிசாகத் தருவேன். தலைவர்களை அழைத்து என் தோட்டத்திலும் எங்கள் கிராமத்திலும் மரம் நடும் விழாக்களை நடத்துகிறேன். என் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு விருந்தினர்களுக்கும் மரக்கன்றுகளை பரிசாக கொடுத்து அனுப்புவேன். பள்ளிக்கூடங்களுக்குச் சென்று குழந்தைகள் மத்தியில் மரம் நடுவதன் தேவையை வலியுறுத்திப் பேசுவேன். பள்ளிக்கூட வளாகத்திலேயே மரங்கள் நடுவேன். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நான் மரம் நடாத பள்ளிக்கூடமே இல்லை எனலாம். மேலும் தமிழ்நாடு முழுக்கப் பயணம் செய்து பத்தாயிரம் வேப்பம் விதைகளை விதைத்திருக்கிறேன். அதில் ஆயிரமாவது மரமாகியிருக்கும். மரங்கள் என்னுடன் பேசுகின்றன, நான் அவைகளுடன் பேசுகிறேன். மரம் நடக்கும் என்பதையும் என் அனுபவத்தில் நான் கண்டிருக்கிறேன்.இதையெல்லாம் சொன்ன போதும், ஆரம்பத்தில் நான் ஊர் ஊராகச் சென்று மரம் நடுவதைப் பார்த்து விட்டும் எங்கள் கிராமத்தவர்களும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்தவர் களும் என்னைக் கிண்டலும் கேலியும் செய்தார்கள். “தங்க சாமிக்கு கிறுக்குப் பிடித்து விட்டது”, “கிறுக்குப் போகிறது பார்” என்று என் காது படவே பேசினார்கள். அப்போது, “யார் கிறுக்கன் என்பதை காலம் தீர்மானிக்கும்” என்று மட்டும் அவர்களுக்குப் பதில் சொன்னேன். இப்போது அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள், “உங்களைக் கிறுக்கன் என்று சொல்லி, கடைசியில் நாங்கள்தான் கிறுக்கன் ஆகிவிட்டோம்” என்று சொல்லுவதுடன், என்னைப் பின்பற்றவும் செய்கிறார்கள்.இப்போது நான் தினமும் ஆறு மணி நேரம் உழைக்கிறேன். ஒரு மனைவி வீட்டுச் சமையலைப் பார்த்துக் கொள்கிறாள். இன்னொரு மனைவி கால்நடைகளைப் பராமறிக்கிறாள். அவள் ஏ. எம். டி. பயிற்சி முடித்திருக்கிறாள். நாங்கள் இருவரும் கலந்து பேசி பயிர் முறையை அமைக்கிறோம்.எங்கள் தோட்டத்தில் இரண்டு கிணறுகள் உள்ளன. முதலில் கவலையைப் போட்டு இறைத்தோம். அப்புறம் தண்ணீர் மட்டம் கிழே போய்விட்டது. அப்போது ஸ்லோஸ்பீட் மோட்டார் இஞ்சினை உபயோகித்து நூற்றைம்பது அடி ஆழத்தில் இருந்து தண்ணீர் எடுத்தோம். அதன்பிறகு தண்ணீர் மட்டம் அதற்கும் கிழே போய்விட்டது. இப்போது, எழுபது ஆயிரம் ரூபாய் செலவு செய்து முன்னூறு அடி ஆழ்குழாய் கிணறு போட்டு, நீர் மூழ்கி பம்புசெட்டை உபயோகித்துத் தண்ணீர் எடுக்கிறேன்.நான் ரசாயண உரங்களை உபயோகிப்பதில்லை. விவசாயிகளுக்குத் தங்கம் குப்பைதான். “எருக்குழி இல்லாம ஏர் கட்டாதே. குப்பை உயர்ந்தால் குடி உயரம்” என்று அந்த காலத்திலேயே சொல்லியிருக்கிறார்கள். என் தோட்டத்தில் நூறுக்கும் மேற்பட்ட கம்போஸ்ட் குழிகளைப் பராமரித்து வருகிறேன். பண்ணைக் கழிவுகளை அதில் நிரப்பி விடுவேன். என் தோட்டத்தில் நிறைய ஆடு, மாடுகள் இருக்கின்றன. சூபா புல், என்.பி.21 கொழுக்கட்டைப் புல், கிளேரி செரியா போன்றவற்றைப் பண்ணையில் பயிரிட்டிருக்கிறேன். எனவே ஆடு, மாடுகளுக்குத் தீவன பிரச்னை இல்லை. ஆடு, மாடுகள் போடும் சாணத்தை கம்போஸ்ட் குழிகளில் போட்டு நிரப்புவேன். மரங்களுக்கு இடையே வரிசை வரிசையாக குழிகளை வெட்டி, பண்ணைக் கழிவுகளை அதில் போடுகிறேன். மரங்களுக்கும் பயிர்களுக்கும் அடியுரமாக வேப்பம் புண்ணாக்கைப் போடுகிறேன். மண் வளம் பிரசினையே இல்லை.எங்கள் தோட்டத்தில் களை எடுப்பதில்லை, உழுவதில்லை. கழிவுகளை அப்படியே விட்டுவிடுவோம். அவைகள் மக்கி உரமாகிவிடுகின்றன. மேலும் இந்தக் கழிவுகள் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உதவுகின்றன. இப்படி கழிவுகளை அப்படியே விடும்போது, அதில் பல நுண்ணியிர்கள் உருவாகும். இந்த நுண்ணியிர்கள் மண்வளத்தைப் பாதுகாப்பதுடன், மண்ணைக் கிளறி உழ வேண்டிய தேவை இல்லாமல் செய்கின்றன. இப்போது என் தோட்டத்துக்கு மயில்கள் உட்பட பல்வேறு வகை பறவைகள் வருகின்றன. அவற்றில் பல நமது ஊர்களுக்கு முற்றிலும் புதியவை என்பது குறிப்பிடத்தக்கது.பூச்சிகளுக்கு வேப்பம் புண்ணாக்கு, வேப்பம் எண்ணெய், பீஞ்சுருவி இலை எல்லாம் போட்டு இடிச்சி ஊறவைச்சு தெளிக்கிறேன். பூச்சி கட்டுப்படுகிறது.விதைகளைப் பொறுத்தவரைக்கும் உயர் விளைச்சல் தரும் சில விதைகளைத் தவிர வேறந்த வெளியிடு பொருள்களையும் நான் வாங்குவதில்லை. என்னைக் கேட்டால் விவசாயிகள், விஞ்ஞானிகளிடமும் ஆராய்ச்சியாளர்களிடமும் முனைவர்களிடமும் கொஞ்சம் எச்சரிக் கையாக இருக்க வேண்டும் என்றுதான் சொல்வேன். அவங்க ஆராய்ச்சியில் நல்லதும் வரலாம், கெட்டதும் வரலாம். சில வருடங்களுக்கு முன்னால் “ராஜ ராஜ”ன்னு ஒரு நெல் ரகத்தை ஆராய்ச்சியாளர்கள் அறிமுகம் செய்தார்கள். அதனைப் பயிரிட்ட எங்கள் கிராமம் மொத்தமும் நஷ்டமடைந்தது.மரங்களுக்கு இடையே காய்கறிச் செடிகளைப் பயிரிட்டிருக்கிறேன். இதிலிருந்து வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் கிடைக்கின்றன. அன் றாட பால் தேவைக்கு வீட்டிலுள்ள மாடு கறக்கிறது. திடீரென்று பணம் தேவைப்பட்டால், நாலைந்து ஆட் டை பிடித்து விற்றுவிடுவேன். என் னிடமுள்ள ஆடுகளையெல்லாம் நடமாடும் வங்கி என்றுதான் நான் சொல்வது.நான் பத்தாம் வகுப்பு வரை மட்டும்தான் படித்திருக்கிறேன். ஆனால், இப்போது என்னால் ஆங்கிலத்தில் வாசிக்க முடியும். அறிவியல் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் படிப்பது எனக்குப் பிடிக்கும். இப்பொழும் தொடர்ந்து வாசிக்கிறேன்.உலகில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக தேவைகளும் பெருகிவிட்டன. இதற்காக எந்த வரைமுறையும் இல்லாமல் இயற்கை ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. இப்படியேத் தொடர்ந்தால் வரும் நமது சந்ததிகளுக்கு நாம் எதை விட்டுவிட்டுப் போகப் போகிறோம் என்னும் கேள்வி எழுகிறது. நமது சந்ததியினர், “ஏன் சுவாசிக்கும் காற்று நஞ்சாக இருக்கிறது, ஏன் குடிக்கத் தண்ணீர் இல்லை, ஏன் மழை இல்லை” என்று நிச்சயம் கேட்பார்கள். இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இப்போதே நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் உட்பட அனைத்தும் மாசுபட்டுள்ளன. மாசுபட்டுவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரங்கள் வளர்ப்பதுதான் இன்றைக்கு நம் முன்னுள்ள ஒரே வழி.செஞ்சந்தன மரத்துக்கு அணு உலை கதிர் வீச்சைத் தடுக்கும் சக்தி இருக்கிறது. எனவே, ஜப்பானில் செஞ்சந்தனத்துக்கு தனி மவுசு. ஒரு டன் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புக்குப் போகிறது. எந்த வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது செஞ்சந்தனம். எனவே எல்லோரும் செஞ்சந்தனம் வளர்க்கலாம். முக்கியமாக கதிர் வீச்சு பாதிப்பு உள்ள பகுதிகளில் செஞ்சந்தனம் வளர்ப்பது மிக நல்லது.”விடைபெறும் போது தங்கசாமி சொன்னார். “நான் எதுவும் புதியதாக செய்யவில்லை. நமது முன்னோர்களின் வழிமுறைக்கு, நமது பாரியம்பரியத்தை நோக்கித் திரும்பியிருக்கிறேன், அவ்வளவுதான். நாடெங்கும் மரம் வளர்ப்போம். சுற்றுச் சூழலை அழகுபடுத்துவோம். அதை விடாது பாதுகாப்போம்.”

அபாரமானப் பலன்களைத் தந்த முன்னுதாரண விவசாய நடவடிக்கைகள்

விவசாயி, திரு. அருணாசலம் அவருடைய வாழை விளைச்சலில் பெற்ற அனுபவங்கள்


இயற்கை மற்றும் நீடித்த நிலைத்த விவசாயம் மிகக்குறைந்த செலவு, தயாரிப்பது எளிது, நோய் மற்றும் பூச்சிகளுக்கு எதிர்ப்புச் சக்தி கொண்டது. இவற்றைத் தவிர மிக முக்கியமான ஒன்று, இது மிக பாதுகாப்பானது என்பது கோபிசெட்டிபாளையம், ஈரோடு மாவட்டம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இயற்கை விவசாயி திரு. அருணாசலம் அவர்களின் கருத்து.
சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பு திரு. அருணாசலமும் அவருடைய குடும்பத்தினரும் மூன்று ஏக்கரா நிலத்தை வாங்கினர்.  அது உப்பு நிலமாக இருந்ததால் அது ஒன்றுக்கும் பயனற்றது என்று கருதப்பட்டது.  எனவே, அதன் விலையும் மிக மிகக் குறைவானதாகவே இருந்தது.  இப்படிப்பட்ட மண்ணில் எந்தப் பயிரையும் விளைவிக்க முடியாது என்று அனைவரும் கூறினர்.

அபாரமானப் பலன்களைத் தந்த அனுபவ பூர்வ நடவடிக்கைகள்  • பல்வேறு வகை விதைகளை விதைத்தல்:
திரு அருணாசலம் தன் நிலத்தில் பலதரப்பட்ட விதைகளை முதலில் விதைத்தார். இம்முறையில், பல வகையான பயறு மற்றும் சிறு தானியங்களின் விதைகளை கலந்து விதைக்கபடுகிறது. விதைத்த ஒரு மாதத்திற்குப் பிறகு, வளர்ந்த பயிர்கள் மீண்டும் மண்ணிலேயே மடக்கி விடப்படுகிறது.    • நெற்பயிரில் கிடைத்த வருமானம்:
இவர் சில பாரம்பரிய நெல் வகைகளை இதே நிலத்தில் விதைத்து, அறுவடை செய்து விற்றதன் மூலம் சுமார் ஒரு லட்சத்து தொண்ணுறாயிரம் ரூபாயை சம்பாதித்தார்.  • வாழை விளைச்சலில் பெற்ற வருமானம்: 
பின்னர் சுமார் 1800 வாழைக்கன்றுகளை இதே நிலத்தில் நட்டார். வாழைப்பழங்கள் எட்டு மாதங்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யப்பட்டன. இது தற்போது அதன் பதினொன்றாவது சுற்றில் உள்ளது. ஒவ்வொரு குலையும் சுமார் 100 ரூபாயிலிருந்து 190 ரூபாய் வரை விற்கப்பட்டன. இப்படி விற்றதில் கிடைத்த லாபம் சுமார் 1 80 000 ரூபாய்.  • வாழை மர கழிவுகளால் மூடாக்கு
ஒவ்வொரு முறை அறுவடைக்குப் பின்பும் கிடைக்கும் வாழை மர கழிவுகள், பூமியிலிருந்து ஒரு அடி உயரத்திற்கு மூடாக்கு போன்று குவிந்துள்ளது. களை எடுப்பது, விதைப்பது, உரமிடுதல் போன்ற செலவு என்று எதுவுமே கிடையாது. தானாகவே நிலத்தில் சத்துக்கள் மேளாண்மை நடப்பதால், வெறும் அறுவடை மட்டுமே செய்தால் போதுமானது என்று திரு அருணாசலம் கூறுகிறார்.  • ஊடு பயிர்கள்:
வெண்டை, கத்தரி, மிளகாய், சுரைக்காய், பூசணிக்காய், பப்பாளி, பச்சைப் பயிறு, காராமணி போன்ற தாவர வகைகளை வாழை மரங்களிடையே ஊடு பயிர்களாக வளர்த்து அந்த வகையில் அவர் ஈட்டிய வருமானம் சுமார் 10,000 ரூபாய்.  • வேலி மற்றும் வரப்பு பயிர்கள்:
மரம் மற்றும் தீவனப்பயிர்கள் வேலி மற்றும் வரப்புப் பகுதிகளில் வளர்க்கப்படுகின்றன.  • கால்நடை வளர்ப்பு  
ஒரு வயதே ஆன, இரண்டு காங்கேயம் காளைகள் ரூபாய் 8,500 வீதம் வாங்கப்பட்டன. ஆறு மாதங்களுக்குள் அவை 50,000 ரூபாய்க்கு அருகிலுள்ள வருடாந்திர மாட்டு சந்தையில் விற்கபபட்டன. இரண்டும் விற்கப்பட்ட சமயத்தில் அவை இரண்டுமே பாரம் சுமப்பதில் நல்ல பயிற்சி பெற்றவையாக விளங்கின. காளைகள் மற்றும் தலைச்சேரி ஆடுகளின் சாணம் நீரில் கரைக்கப்பட்டு வயல்களில் நீர்ப்பாசனத்திற்காக உபயோகிக்கப்பட்டது. இது மண்ணுக்கு அருமையான உரமாக செயல்படுகிறது. ஆடுகளின் விற்பனை மூலம் கூடுதல் வருமானமாக ரூபாய் 60,000 கிடைத்தது. அவருடைய 10 சேவல்களுக்கு பப்பாளிப் பழங்கள் மற்றும் விதைகள் உணவாகப் பயன்பட்டன. இந்த சேவல்கள் சண்டைக்கோழிகளாகப் பயிற்சி அளிக்கப்பட்டு ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டன. இந்தப் சேவல்களை விற்பதன் மூலம் அவருக்கு ஒரு வருடத்திற்ககு பத்தாயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இந்தப் பாரம்பரிய இரக விலங்குகள் (அவை மாடுகளோ ஆடுகளோ அல்லது கோழிகளோ) நோய்வாய் படுவதற்கான வாய்ப்பு இல்லை. மேலும், அவற்றை விற்பதற்காக வளர்ப்பதும் எளிது.    
" 365 நாட்களில்  பெரிதாக செலவு எதுவும் செய்யாமல், முதலீடு செய்யாமல் என்னுடையஇந்த மூன்று ஏக்கரா நிலத்தில் என்னால் ஆறு லட்சம் ரூபாய் சம்பாதிக்க முடிகிறது என்றால் மற்றவர்களால் ஏன்முடியாது?" என்று திரு அருணாசம் கேட்கிறார்.
  மேலும்தகவல்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
     திரு அருணாசம், குலவைகாரடு
     பி. வெள்ளாளபாளையம் (தபால்)
     கோபிசெட்டிப்பாளையம், ஈரோடு, தமிழ்நாடு,
     தபால் பெட்டி எண்: 638476,
     கைபேசி எண்: 944336323
     இ-மெயில் :
elunkathir@gmail.com
ஆதாரம் : தி இந்து, ஜனவரி 1, 2009

பாரம்பரிய மற்றும் நவீன வேளாண் அறிவியல் வித்தியாசங்களும் விபரீதங்களும்

 பசுமைப் புரட்சியை நோக்கி நம் சமுதாயம் சென்ற பாதையைப் புரிந்துகொள்ள, சரித்திரத்தை மட்டுமின்றி அறிவியலிலும் கவனம்செலுத்துவது அவசியமாகிறது.
'அறிவியல்' என்றாலே கடந்த ஓரிரு நூற்றாண்டுகளில், மேற்கத்திய நாடுகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள், மற்றும் வளர்ச்சிகளாலான 'நவீன அறிவியல்' என்றுதான் பலர் பொருள்கொள்கிறார்கள். நமது பாரம்பரிய அறிவியல் முறைகள் பற்றிய விழிப்புணர்வோ கவனமோ இன்று அதிகம் காணப்படுவதில்லை. பஞ்சகவ்யம், குணபசலம், டாக்டர் ரிச்சாரியா (பசுமைப் புரட்சிக்கு முன்பு மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றியவர்) சேகரித்த பல்லாயிரக்கணக்கான நெல் ரகங்கள் ஆகியவை இன்று விவசாயப் பல்கலைக்கழகங்களில் ஆராயப்பட்டுவருகின்றன. இவை தவிர, நாட்டின் ஒவ்வொரு பகுதியின் நிலைகளுக்கேற்ப விவசாயக் கருவிகளும் வடிவமைக்கப்பட்டிருந்தன. இவையெல்லாம் நம் பாரம்பரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவுக்குச் சான்றாக விளங்குவதை ஏற்கனவே பார்த்தோம். நமது இந்தப் பாரம்பரிய அறிவியல், முக்கியமாக விவசாயத்தைப் பொறுத்தவரையில், நவீன அறிவியலிலிருந்து அடிப்படையிலேயே வேறுபடுகிறது. இதை அறிந்துகொண்டால் மேலும் பல விஷயங்களை எளிதில் புரிந்துகொள்ளலாம். பசுமைப் புரட்சி பற்றிய சில கேள்விகளுக்குத் தானாகவே விடைகள் கிடைத்துவிடும்.
இயற்கையின் விவசாயம்
யாருமே விதைகள் விதைக்காமல், எரு சேர்க்காமல், பூச்சிக்கொல்லி விஷங்கள் தெளிக்காமல், நீர் பாய்ச்சாமல் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தப் பூமியில் வாழ்ந்து, மண் வளத்தைக் குறைக்காமல் தழைத்து நிற்கின்றன காடுகள். நம் முன்னோர்கள் இந்தக் காடுகளிடம் பாடம் பயின்றவர்கள். அவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரையில் உயர்ந்த வேளாண் அறிவியல் அறிவை வளர்த்துக்கொண்டு, அதன் அடிப்படையில் நிலைத்து நிற்கும் வேளாண்மையை வளர்த்தெடுத்துவந்தனர். இவற்றை விருட்சாயுர்வேதம் போன்ற நூல்களில் எழுதியும்வைத்தனர். இப்படிப்பட்ட அறிவுபெற்ற பாரம்பரிய விவசாயிகளைத் தன் பேராசிரியர்களாக ஏற்றுக்கொண்டு பாடங்கள் பயின்றவர், ஆல்பர்ட் ஹோவார்ட் என்ற ஆங்கிலேய வேளாண் விஞ்ஞானி.

பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியல் பயின்று, இங்கிலாந்திலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஆராய்ச்சிப் பணிகளில் இருந்துவிட்டு, நம் நாட்டு விவசாயிகளுக்கு நவீன வேளாண் அறிவியலைப் புகட்டுவதற்காக 1905இல் இந்தியாவில் வந்திறங்கினார் ஹோவார்ட். ஆனால், அவருடைய உண்மையான, அகங்காரமற்ற தேடல், அவருக்குப் பல விஷயங்களை உணர்த்தியது. தன்னுடைய நவீன வேளாண் அறிவியல் பயிற்சியிலிருந்து விலகி, இந்திய விவசாயிகளிடமிருந்து வேளாண்மையைப் பற்றிய சில அடிப்படை விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தனது ஆராய்ச்சியின் அடிப்படையில் முடிவுசெய்தார்.

வனங்களையும் நமது பாரம்பரிய வேளாண் முறைகளையும் கூர்ந்து கவனித்துத் தான் கற்றதை 'இயற்கையின் விவசாயம்' என்றழைத்தார்; இந்தத் தலைமுறையினர் அதைப் புரிந்துகொள்ளும் வகையில் "An Agricultural Testament" 1 எனும் புத்தகமாக எழுதினார். இவர் காடுகளில் கவனித்த நான்கு முக்கியமான அடிப்படைக் கோட்பாடுகள்:

1. பலவகையான தாவரங்கள் ஒன்றாக வளர்கின்றன.
காடுகள் அதிகபட்சப் பல்லுயிர்த் தன்மை அல்லது உயிரினப் பன்மை (Bio-diversity) கொண்டவை. ஒவ்வொரு வகைத் தாவரமும் ஒருவகை ஊட்டச்சத்தை மண்ணிலிருந்து எடுத்துக்கொண்டு, மண்ணுக்குத் திரும்பத் தருகிறது என்பதால், மண்வளம் குறையாமல் பாதுகாக்கப்படும். ஒவ்வொரு வகையையும் வெவ்வேறு பூச்சிகளும் நோய்களும் தாக்கும் என்பதால், பலவகையான தாவரங்கள் கலந்திருப்பதால், அவை எளிதில் பரவமாட்டா. இப்படி, உயிரினப் பன்மைகொண்ட உயிர்ச்சூழல் அமைப்பு, சரிவிலிருந்து மீண்டெழும் தன்மையை அதிகமாகக் கொண்டிருக்கும்.

2. சூரியன், காற்று மற்றும் மழை ஆகிய மூன்றின் நேரடித் தாக்கத்திலிருந்து மண் எப்போதுமே பாதுகாக்கப்படுகின்றது. மண் எப்போதுமே உதிர்ந்த இலைதழைகளைக்கொண்டு மூடப்பட்டிருக்கும். இதனால், மண்ணில் இருக்கும் ஈரப்பதம் பாதுகாக்கப்படுகின்றது. மண் சூடாகாமல், அதில் உயிர்வாழும் நுண்ணுயிர்களுக்கேற்றபடி குளிர்ந்திருக்கும். மண்ணில் உள்ள கனிப்பொருள்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேறாமலும் வளமான மேல்மண் அரித்துப்போகாமலும் உதிரியாக இருக்கும் மண் கெட்டியாகாமலும் பாதுகாக்கப்படும்.

3. காட்டு மரங்கள், தங்கள் கழிவுகளைக் கொண்டே தங்களுக்குத் தேவையான உரத்தைத் தயாரித்துக் கொள்கின்றன. காட்டின் உயிர்ச்சூழல் (ecosystem) அமைப்பினுள் இருக்கும் சக்தியும் கனிப்பொருட்களும் இடைவிடாத சுழற்சி முறையில் இயங்கியபடி இருக்கும். இலை உதிர்ந்து, மண்ணில் வாழும் கோடிக்கணக்கான நுண்ணுயிர்களுக்கு உணவாக மாறி, சிதைந்து, ஊட்டச்சத்துகளாக மரங்களைச் சென்றடைந்து, புதிய இலைகளாக மாறுகின்றன. இப்படித்தான் பல்லாயிரம் ஆண்டுகாலமாக வெளியிலிருந்து சூரிய சக்தியை மட்டுமே எடுத்துக் கொண்டு, தமக்குத் தேவையான உணவை யாருடைய உதவியும் இல்லாமல், தாமாகவே தயாரித்துக் கொண்டுள்ளன.
4. தாவரங்களும் விலங்கினங்களும் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்கின்றன.
அந்தந்தச் சூழலுக்குத் தகுந்த தாவர வகைகள் வளர்ந்து, அதிகபட்ச மற்றும் நீடித்த வகையில் (bio-mass) தழைப் பொருள்களை உற்பத்தி செய்கின்றன. ஓர் உயிர்ச்சூழல் அமைப்பில் வளரும் தாவர வகைகளை உண்ணும் சைவப் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் அசைவப் பூச்சிகளும் கூடவே இருக்கும். பூச்சிகளை உட்கொள்ளும் தவளை இனங்களும் மீண்டும் அவற்றைத் தின்னும் பாம்புகளும் பாம்பை உண்ணும் பறவையும் இறந்த பறவையின் இறைச்சியைச் சிதைத்து ஊட்டச்சத்தாக மாற்றும் நுண்ணியிர்களும் அங்கு வசிக்கும் எல்லா உயிரினங்களையும் உயிர்ச் சூழலையும் சமநிலையில் வைத்துக்கொள்ளும் (பாடப் புத்தகத்தில் நாம் படித்திருக்கும் உணவுச் சங்கிலிதான் இது).
இந்த நான்கு கோட்பாடுகளையும் அடிப்படையாகக்கொண்டு, நம் விவசாயிகள் கீழ்க்காணும் முறைகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்தார்கள்.

அ) ஒரே தோட்டத்தில் பலவகையான பயிர்களைச் சேர்த்தே பயிரிட்டனர். பயிர்ச் சுழற்சி முறையைப் பின்பற்றினர்.

ஆ) மண்ணின் மேல் மூடாக்குப் போட்டு, மண்ணைப் பாதுகாத்து விவசாயம் செய்தனர்.

இ) கால்நடைகளைக் காட்டில் மேயவிட்டு, விவசாயக் கழிவுகளை உணவாகக் கொடுத்து, மாட்டுச் சாணத்தை மண்ணில் சேர்த்து, ஊட்டச்சத்துகளை ஓயாமல் சுழற்சிசெய்து வந்தனர். 'அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு' எனும் பழமொழி இதற்கு ஆதாரம்.

ஈ) ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்ற பயிர்வகைகளைக் கண்டறிந்து அவற்றைப் பயிரிட்டனர்.

இந்த நான்கு முக்கியமான கோட்பாடுகளையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்த்தால், நமக்கு ஓர் உயிர்ச்சூழல் பற்றிய புரிதல் கிடைத்துவிடும். பாரம்பரிய அறிவியல் ஓர் அமைப்பை முழுமையாகப் (லீஷீறீவீstவீநீ ) பார்க்கிறது. ஓர் உயிர்ச்சூழல் அமைப்பை எடுத்துக்கொண்டால், அதற்குள் இருக்கும் ஒவ்வொரு அம்சத்தையும் இயங்கு முறையையும் தனித்தனியாகப் பார்க்காமல், அது முழுமையில் அங்கம் வகிக்கும் அமைப்பின் அடிப்படையிலேயே பார்க்கிறது. உதாரணத்திற்கு, ஒரு தாவர வகையின் செயல்முறை, அது இருக்கும் தோட்ட அமைப்பைச் சார்ந்தது. தோட்ட அமைப்பு, அந்தக் கிராமத்தின் அமைப்பைச் சார்ந்தது. அதாவது, அந்தப் பகுதியின் மண் வகை, தட்பவெப்ப நிலை, அங்கு வாழும் உயிரினங்கள், மழை அளவு, நிலத்தடி நீரின் தன்மை ஆகியவற்றைச் சார்ந்தது. பிறகு அந்தப் பகுதி அமைந்திருக்கும் கண்டத்தில் மற்றும் உலக அளவில் ஏற்படும் தட்பவெப்ப மாற்றங்கள்கூட, அந்தத் தோட்டத்தில் நடைபெறும் விவசாயத்தைப் பாதிக்கும். இப்படி எல்லா அம்சங்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன.

உயிர்ச்சூழல் அமைப்பு ஆரோக்கியமாக இருந்தால், அதன் அங்கங்களும் ஆரோக்கியமாக இருக்கும். அதன் அங்கங்கள் ஏதேனும் ஒன்றில் பிரச்சினை தென்பட்டாலும் அதை அந்த உயிர்ச்சூழல் அமைப்பின் ஆரோக்கிய மின்மைக்கும் இயற்கையின் கோட்பாடு(கள்) ஏதேனும் மீறப்பட்டிருபதற்கும் அறிகுறியாகப் பார்ப்பது பாரம்பரிய அறிவியல். பிறகு, அந்தப் பிரச்சினையின் அடிப்படையை ஆராய்ந்து, அந்த அமைப்பின் சமநிலையை மீட்க அது வழிவகைகளைக் கண்டறியும்.

1913இல் ஜப்பானில் பிறந்த மசானோபு ஃபுகுவோகா என்பவர், நவீன வேளாண் அறிவியலில் அவர் காலத்தில் புதிதாக அறிமுகமாகியிருந்த நுண்ணுயிர் வேதியியலில் தேர்ச்சிபெற்று, விவசாயச் சுங்க ஆய்வாளராகப் (கிரீக்ஷீவீநீuறீtuக்ஷீணீறீ நீustஷீனீs வீஸீsஜீமீநீtஷீக்ஷீ) பணியாற்றினார். இருபத்தைந்து வயதாகும்போதே, நவீன அறிவியலின் அடிப்படை குறித்த ஐயங்கள் அவர் மனத்தில் எழுந்தன. சிக்கலான உயிர் வலையை நாம் புரிந்துகொண்டு, அதற்கான தரப்படுத் தப்பட்ட உலகளாவிய செயல்முறைகளை வடிவமைக்க முடியும் என்று எண்ணுவது அகங்காரம் கொண்ட, முட்டாள்தனமான எண்ணம் என்று ஃபுகுவோகா முடிவுசெய்தார். அவர் தன் வேலையை விட்டுவிட்டு, இயற்கையிடம் சரணடைந்தார். இருபதாண்டுகள் தன் பண்ணையில் இயற்கை விவசாயக் கோட்பாடுகளைப் பின்பற்றி, உலகே பார்த்து அசந்துபோகிற அளவுக்கு உற்பத்தியைக் கொடுக்கும் ஓர் உயிர்ச்சூழல் பண்ணையை வெற்றிகரமாக உருவாக்கித் தான் கூறியதை நிரூபித்துக்காட்டினார்.

2. நவீன வேளாண் அறிவியலின் ஆரம்பம் உயிர்ச்சூழல் அமைப்பை ழுமையாக அணுகும் பாரம்பரிய அறிவியலுக்கு முரணாக, ஓர் அமைப்பின் ஒவ்வொரு அம்சத்தையும் இயங்கு முறையையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்த்து, பிரச்சினை தென்பட்டால், அதைத் தனியாகத் தீர்ப்பதுதான் நவீன அறிவியலின் அணுகுமுறை. இதைப் பகுதிகள் சார்ந்த எளிய, அல்லது பிளவுண்ட அணுகுமுறை  எனலாம். நவீன வேளாண் அறிவியலின் வித்து, 19ஆம் நூற்றாண்டில் நவீன இரசாயனவியலில்தான் முதலில் முளைத்தது. 1800இல் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, பருப்பொருள் குறித்த அணுக்கொள்கை  என்னும் விளக்கத்தின் எளிமை எல்லா விஞ்ஞானிகளையும் கவர்ந்தது. இனி, எல்லாப் பொருள்களையும் அணுவைக் கொண்டே விளக்கிவிடலாம் என்று கொண்டாடினர். 1813இல் ஹம்ஃப்ரே டேவி எனும் விஞ்ஞானி, மண்ணின் வளத்தை வேதியியல் சோதனையின் மூலம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என்றார்.
1840இல் ஜஸ்டஸ் வான் லீபிக் எனும் விஞ்ஞானி, தாவரங்கள் தமக்குத் தேவையான கனிப்பொருள்களை மண்ணிலிருந்து எடுத்துக்கொள்கின்றன என்கிற 'தாவர ஊட்டச்சத்துக் கோட்பாட்'டினை விளக்கினார். ஒரு செடியை எரித்து, அதன் சாம்பலைப் பரிசோதித்தார். நைட்ரஜன் (N), பாஸ்பரஸ் (P), பொட்டாசியம் (K) ஆகிய மூன்று முக்கியமான சத்துகள் போதிய அளவில் மண்ணில் இருந்துவிட்டால், செடிகள் நன்றாக வளர்ந்துவிடும் என்று முடிவுசெய்தார். இதைத்தான் 'NPK உரம்' என்கின்றனர். லீபிக்கைப் பொறுத்தவரையில், மண்ணின் மேல் இருக்கும் மக்கிய தழைப்பொருள், தாவர வளர்ச்சிக்கு உதவாத ஒன்று. சில ஆண்டுகளுக்குப் பிறகு, தாவர வளர்ச்சிக்குத் தேவையான மற்ற கனிமங்களையும் கண்டுபிடித்துக் காட்டியது நவீன விஞ்ஞானம். ". . . நீரையும் கனிப்பொருள்களையும் கொண்ட கல் துகள்கள் அடங்கிய சேமிப்புத் தொட்டிகளாகவே மண் பார்க்கப்படும். இதனை விவசாயிகள் உழுது கிளறிவிடுவார்கள்" என்று விஞ்ஞானிகள் அறிவித்தனர். அன்றிலி ருந்து இன்றுவரை, இந்த 'சேமிப்புத் தொட்டி மாதிரி'தான், நவீன வேளாண் அறிவியலுக்கும் ஆராய்ச்சிக்கும் அடிப்படையாக இருந்துவருகிறது.

3. மண் என்பது என்ன?
லீபிக்கின் கோட்பாட்டைச் சோதித்துப் பார்க்க ஓர் உதாரணம்: உத்தரப் பிரதேசம் மற்றும் பீஹார் மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அடர்த்தியான காடுகள் இருந்து வந்திருக்கின்றன. உலகிலேயே மிகவும் அதிக உற்பத்தி ஆற்றலுள்ள உயிர்ச்சூழல் அமைப்பு வெப்ப மண்டலக் காடுகள் என்பது அறிவியல் உண்மை. ஆனால், இந்தக் காடுகள் வளர்ந்து நிற்கும் ணீறீறீuஸ்வீணீறீ மண் வகையில் ஃபாஸ்பரஸ் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாக, நவீன அறிவியல் ஆராய்ச்சி கூறுகின்றது. அந்த மண்ணுக்கு ஊட்டச் சத்துகளைப் பிடித்துவைத்துக்கொள்ளும் திறன்கூட இல்லாமல், மிக மோசமான தரத்தில் உள்ளது என்பதென்னவோ உண்மைதான். ஆனால், உயிருள்ள தாவரத் திசுக்களும் மண்ணில் விழுந்து மக்கிக்கொண்டிருக்கும் காய்ந்த இலை தழைகளும் ஒரு ஹெக்டேருக்கு 600 கிலோ ஃபாஸ்பரஸ் சத்துக் கொண்டவை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு வாழும் மரங்கள் ஆயிரக்கணக்கான சிறு வேர்களை மேற்பகுதியிலேயே ஒரு பாயைப் போலப் படரவிட்டு, இந்தக் கழிவுகளிலிருந்தே நேரடியாகச் சத்துகளை எடுத்துக்கொள்கின்றன. அதாவது, இந்தத் தாவரங்கள் சூழலுக்கேற்பத் தங்களைத் தகவமைத்துக்கொண்டிருக்கின்றன. அந்தச் சூழலுக்கு ஏற்ற தாவர வகைகள் உருவாகி வளர்ந்துவருகின்றன.

4. தாவரங்களுக்குத் தேவையான கனிமங்கள் பலவும் மண்ணிலிருந்து கிடைப்பது உண்மைதான். ஆனால், அவை எவ்வாறு கிடைக்கின்றன என்பதைப் பார்க்க வேண்டும். கார்பன், ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் ஆகிய மூன்று கனிமங்களும் ஒளிச்சேர்க்கையின் மூலம் செடிகளுக்குக் கிடைக்கின்றன. காற்று மண்டலத்தில் ஏராளமாக இருக்கும் (75%) நைட்ரஜன் வாயுவைத் தாவரங்கள் உட்கொள்ளும் வடிவத்துக்கு நுண்ணுயிர்கள் மாற்றிக்கொடுக்கின்றன. பொட்டாசியம் மற்றும் குளோரினைத் தாவரங்கள் மண் கரைசலிலிருந்து கடன் வாங்கிக்கொண்டு, இறந்ததும் திரும்பத் தந்துவிடுகின்றனவாம். ஏனைய சுண்ணாம்புச் சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், சல்பர், இரும்புச் சத்து, சிங்க் போன்றவை நுண்ணுயிர் களின் உதவியால், தாய்ப் பாறைகளில் ஏற்படும் ஒருவித இரசாயன மாற்றத்தின் பலனால் வெளியாகின்றன. இந்தப் புரிதலின் அடிப்படையில் பார்த்தால், மண்ணின் வளத்தை நிர்ணயிப்பதில் அதி முக்கியமான பங்கை நுண்ணுயிர்கள்தான் வகிக்கின்றன. ஒரு கிராம் மண்ணில் 100 கோடி நுண்ணுயிர்கள்வரை இருக்கின்றனவாம். அப்படியென்றால், உயிருள்ள மண், சத்தமில்லாமல் இயங்கிவரும் ஒரு பிரம்மாண்டமான உரத் தொழிற்சாலை என்றுகூடச் சொல்லலாம். ஆனால், அதனை இயக்கி வரும் நுண்ணுயிர்த் தொழிலாளர்களை ஆரோக்கியமாகப் பாதுகாத்துவந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

5. பாரம்பரிய இந்திய விவசாயிக்கு இருந்த மண்ணைப் பற்றிய அறிவை, ஏ.ஓ. ஹ்யூம் தனது நூலில் கூறுவதை இங்கே காண்போம். "பூர்வீக விவசாயிகள், மண் வகைகளுக்கு வைத்திருக்கும் ஏராளமான பெயர்களைவிட அதிகச் சிக்கலானது வேறெதுவும் இருக்க முடியாது. ஒவ்வொரு மாவட்டமும் வேறெங்கும் அறியாத, தனக்கே உரிய ஒரு டசன் பெயர்களையாவது கூறி மகிழ்கிறது. இதில் அவர்களுக்கு எந்தக் குழப்பமும் இருப்பதாகத் தெரியவில்லை. சிறந்த ஐரோப்பிய விவசாயிகளுக்கு இணையாக, மண் வகைகளின் நுணுக்கமான வித்தியாசங்களைப் பற்றிய கூர்மையான அறிவு படைத்தவர்களாக உள்ளனர். மண் வகைகளின் பிரத்யேகமான பெயர்கள் ஒருபுறம் இருக்க, அவர்கள் தங்கள் நிலங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது சில பெயர்களை உபயோகிக்கின்றனர். அவை, சமீபத்தில் பயிர்செய்த காலம், எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை பயிர்செய்திருக்கிறார்கள் என்கிற விவரம், மக்கள் வசிக்கும் இடங்களுக்கு எவ்வளவு அருகில் உள்ளது எனும் விவரம், பழங்காலத்தில் உருவான மண்ணா அல்லது சமீபகாலத்தில் உருவான வண்டல் மண்ணா எனும் தகவல், மேய்ச்சல் நிலம், வயல்நிலம், அல்லது தோட்டமாக உள்ளதா போன்ற அத்தனை வெளிப்புற நிலைகளையும் விளக்குவதாக உள்ளன. மண்ணின் இயல்பைவிட இந்த வெளிப்புற நிலைகள்தான் விவசாய நிலத்தின் மதிப்பீட்டுக்கு உதவும்."6
பிரச்சினையைத் தீர்க்கும் அணுகுமுறையிலும் வேறுபாடு
லீபிக்குக்குப் பிறகு வந்த விஞ்ஞானிகள், தாவர வளர்ச்சிக்குத் தேவையான பற்பல அம்சங்களைக் கவனித்துவந்தனர். ஒவ்வொன்றாகத் தென்பட்ட மண்ணின் பௌதிகம், அதில் வாழும் நுண்ணுயிர்கள், ஆகியவற்றைத் தனித்தனியாக ஆராய்வதற்காக, மண் இயற்பியல், மண் நுண்ணியிரியியல் போன்ற தனித்தனித் துறைகள் உருவாக்கப்பட்டன. ஆனால், இயற்கை நிகழ்வுகளை இப்படிப் பகுத்துப் புரிந்துகொள்ள முடியுமா? ஒரு நெல் வயலில் இருக்கும் பல முக்கியமான குணாம் சங்களை மட்டும் பட்டியலிட்டு, ஃபுகுவோகா வரைந்த வரைபடத்தைப் பாருங்கள். காண்க படம்7.
இவற்றைத் தவிர, அந்த வயல் அமைந்திருக்கும் கண்டத்தில் மற்றும் நம் உலக அளவில் ஏற்படும் தட்பவெப்ப நிலை மாற்றங்கள் போன்றவைகூட, அந்த வயலின் நெல் விளைச்சலைப் பாதிக்கும். மேலும், இந்த ஒவ்வொரு குணாம்சமும் ஓயாமல் மாறிக்கொண்டே இருக்கும். இவற்றை எப்படித் தனித்தனியாகப் புரிந்துகொள்ள முடியும்?

விவசாய நிலத்தில் பிரச்சினை தென்பட்டால், நவீன மற்றும் பாரம்பரிய அறிவியலின் அணுகுமுறை எவ்வாறு வேறுபடும்? இதற்கு இரண்டு உதாரணங்களைப் பார்ப்போம்.
1. ஒரு தோட்டத்தில் தாவரங்களைத் தாக்கும் பூச்சிகள் அதிகமாகிவிட்டால், அதை ஒரு தனிப்பட்ட பிரச்சினையாகக் கருதி, பூச்சிக்கொல்லிகளைக் கொண்டு அவற்றை நேரடியாகத் தாக்கிக் கொல்லும் வழியை நவீன அறிவியல் கடைபிடிக்கிறது. இந்தப் பூச்சிக்கொல்லிகளால் மண்புழுக்கள் மற்றும் சிலந்தி போன்ற நன்மைசெய்யும் பூச்சிகளும் கூடவே அழிந்துவிடுகின்றன. மேலும், பின்வரும் தலைமுறைகளைச் சேர்ந்த சைவப் பூச்சிகள் விஷத்துக்கான எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக்கொண்டு சாக மறுக்கின்றன.
பாரம்பரிய அறிவியல், பூச்சிப் பிரச்சினையை அந்த உயிர்ச்சூழல் அமைப்பின் ஆரோக்கியமின்மையின் அறிகுறியாகப் பார்க்கும். உதாரணத்திற்கு, அந்தச் சூழலுக்குத் தகாத பயிர்கள் அங்கே பலவந்தமாகப் புகுத்தப்பட்டிருந்தாலோ ஓரினப் பயிர்முறை பின் பற்றப்பட்டிருந்தாலோ அல்லது மண்ணும் தாவரங்களும் வலுவிழந்திருந்து பூச்சி எதிர்ப்புச் சக்தி குறைந்திருந்தாலோ இத்தகைய விளைவுகள் ஏற்படக்கூடும் என்று பாரம்பரிய வேளாண் அறிவியல் கணிக்கிறது. இவற்றை அடிப்படையில் சரிசெய்யத் தேவையானவற்றை அது மேற்கொள்ளும்.
2. ஒரு மண் சத்திழந்து, தாவரங்கள் பசுமையாக வளராவிட்டால் நவீன அறிவியல், நைட்ரஜன் சத்தை மண்ணுக்கு ஊட்ட, யூரியாவை மண்ணில் சேர்க்கச் சொல்லும். இந்த உப்பின் சேர்க்கையால், மண்ணில் வாழும் நுண்ணுயிர்கள் அழிந்து, இயற்கையாகக் கிடைத்துக்கொண்டிருந்த ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் போய், மண் மலட்டுத்தன்மை அடைகிறது. மேலும், இதனால் செடியின் தண்டு உப்பிக்கொண்டு, தண்டு துளைப்பான் (stem borer) போன்ற பூச்சிகளைக் கவர்கின்றன. பாரம்பரிய அறிவியல், வளமிழந்த மண்ணைச் சரிசெய்ய, கிடைக்கும் தழைப்பொருள்களைக் கொண்டு மண்ணை மூடிவைத்து, ஈரப்பதத்தைப் பாதுகாத்து நுண்ணுயிர்களின் பெருக்கத்திற்கான சூழலை அமைத்துக்கொடுத்து, வளப்படுத்தும் பொறுப்பை அந்த நுண்ணுயிர்களின் கைகளில் ஒப்படைக்கும். இயற்கையின் மர்மம் இயற்கையை ஓர் ஆய்வுக்கூடத்தில் அடைத்து, அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள முடியாது என்பதை ஃபுகுவோகா மட்டுமல்ல, வான் லீபிக்கூடத் தன் இறுதிக் காலத்தில் தாழ்மையுடன் ஒப்புக்கொண்டார்: "நம்மை உருவாக்கிய படைப்பாளியின் பேரறிவுக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன். அதற்கான தண்டனையையும் பெற்றுவிட்டேன். அவனுடைய வேலைப்பாட்டை மேம்படுத்த விரும்பினேன். இந்தப் பூமியையும் அதிலுள்ள உயிர்களையும் பிணைத்து இந்தப் பூமியை எப்போதும் புத்துயிருடன் விளங்கச்செய்யும் இயற்கை நியதிகளின் அற்புதமான சங்கிலியில் எதோ ஒரு வளையம் விட்டுப் போய்விட்டது என்று என்னுடைய குருட்டுத்தனத்தினால் நம்பினேன். பலவீனமான, சக்தியற்ற நான், விடுபட்டுப்போன அந்த வளையத்தை உருவாக்கிப் பொருத்த முயன்றேன் . . . மழை நீரைக்கொண்டு உருவாகும் ஒருவகை மண் கரைசலிலிருந்துதான் செடிகள் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை எடுத்துக் கொள்கின்றன என்பது எல்லாருடைய நம்பிக்கையாக இருந்தது. என் மனத்தினுள்ளும் இது ஆழமாகப் பதிந்தது. இந்தத் தவறான கருத்துதான் என்னுடைய முட்டாள் தனமான செயல்களுக்கெல்லாம் ஆரம்பம்."

8. பாரம்பரிய அறிவியல், இயற்கையை முழுமையாகப் புரிந்துகொள்ளும் சக்தி மனிதனுக்கு இல்லை என்றும் ஒவ்வோர் உயிரினத்தினுள்ளும் இருக்கும் ஒரு வகையான நுண்ணறிவுதான், அதன் வாழ்க்கையை இயக்குகிறது என்றும் நம்புகிறது.

NPK பற்றிய அறிவும் வேளாண்மையும்

"இவையெல்லாம் உண்மையாகவே இருந்தாலும்கூட, சென்ற நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டுப் பெயரிடப்பட்ட ழிறிரி போன்ற கனிமப் பொருள்கள் பற்றிய அறிவு, இயற்கை விவசாயத்துக்கும் தேவையான ஒன்றாகத்தானே இருக்கிறது?" என்ற கேள்வி எழலாம். பயறு வகைகளைக் கொண்டு பயிர்ச் சுழற்சிசெய்வதன் மூலம், நைட்ரஜன் சத்தை நிலத்தில் பொருத்தும் நுண்ணுயிர்கள் பெருகுகின்றன என்று நவீன அறிவியல் பயிர்ச் சுழற்சிக்கான விளக்கத்தை அளிக்கிறது. ஆனால், நமது பாரம்பரிய விவசாயி நைட்ரஜன் பற்றிய அறிவு இல்லாமலே, பல நூற்றாண்டுகளாகப் பயிர்ச் சுழற்சி செய்துவந்திருக்கிறார். இது எப்படிச் சாத்தியமானது? உள்ளுணர்வு மற்றும் அனுபவபூர்வமாக இந்த அறிவைச் சேகரித்து வந்திருக்கக்கூடும்.
இயற்கையுடனான உறவைத் துண்டித்துக்கொண்டுவிட்ட மக்களுக்கும் இயற்கையோடு ஒன்றி வாழும் மக்களுக்கும் அறிவைப் பெறும் முறைகளில் வித்தியாசங்கள் இருக்கின்றன. மலைவாழ் மக்கள், செடிகளுடன் 'பேசும்' திறன் படைத்தவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு. அதாவது அவர்கள் செடிகளோடு ஒருவிதமான தகவல் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த, 800 புதிய ரகக் காய்கறி, பழங்கள் மற்றும் பூக்களை இயற்கையோடு கைகோர்த்துக்கொண்டு உருவாக்கிய, அமெரிக்கத் தாவரவியலாளர் லூதர் பர்பாங்க், தன் செடிகளுடன் தனக்கு இருந்த தகவல் பரிமாற்றங்களைப் பற்றிக் கூறியுள்ளார். இவர் பண்ணையில் பயிரிடப்பட்ட பல்லாயிரக்கணக்கான உருளைக்கிழங்கு செடிகளுடன் 'உரையாடி', அவற்றுள் மிக எளிதாக 8 செடிகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அவற்றிலிருந்து இன்று உலகெங்கும் புழக்கத்தில் இருக்கும் பர்பாங்க் உருளையை உருவாக்கியதாகக் கூறியுள்ளார்.9
இவ்வாறு, நவீன மனம் நினைத்துப் பார்க்கவோ புரிந்துகொள்ளவோ முடியாத விதங்களில் அறிவைச் சேகரித்தது பாரம்பரிய மனம். நைட்ரஜன் பற்றிய அறிவு இல்லாமலேயே, பயிர்ச் சுழற்சியைப் பின்பற்றியது. ஆனால், நம்முடைய நவீன மனத்தின் புரிதலுக்காகப் பாரம்பரிய அறிவியலைப் பற்றிய விளக்கங்களில்கூட நவீன அறிவியலின் கோட்பாடுகளையும் மொழியையும் கடன்வாங்க வேண்டியுள்ளது!

நன்றி: சங்கீதா ஸ்ரீராம்