செவ்வாய், 13 ஏப்ரல், 2010

பசுமைப் புரட்சி இந்தியாவுக்குள் நுழைந்த கதை

1965-ல் இந்தியாவின் உணவு உற்பத்தி குறைந்து, PL-480இன் மூலம் தானிய இறக்குமதி அதிகரித்துக்கொண்டேபோன சமயம். 1966இல் உச்சக்கட்டமாக 100 கோடி டன் கோதுமை இறக்குமதியானது. அந்தச் சமயம் சி. சுப்பிரமணியம் இந்தியாவின் வேளாண் அமைச்சராகவும், எம்.எஸ். சுவாமிநாதன் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (IARI) இயக்குநராகவும் இருந்தனர். இவர்கள் இருவரும் கைகோத்துக்கொண்டு இந்திய வேளாண்மையை நவீனமயமாக்கும் பணியில் இறங்கினர். நார்மன் போர்லாக்கின் லெர்மா ரோஜோ, சொனோரா (Lerma Rojo 64A, Sonora 64A) ஆகிய இருரகங்களின் 18,000 டன் விதைகளை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்தனர். மண் வளத்தையும் துணிந்த உற்சாகமான விவசாயிகளையும், பக்ராநங்கல் அணையின் மூலம் நிறைய நீர்வளத்தையும் கொண்ட பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் அறிமுகமான பசுமைப் புரட்சி, பிரம்மாண்டமாக விளைச்சலைப் பெருக்கியது. அடுத்து, மனிலாவிலிருந்து ஐ.ஆர். 8 ரகம் இறக்குமதியாகி, நெல் விளைச்சலையும் அமோகமாக அதிகரித்தது. உணவு இறக்குமதி செய்துகொண்டிருந்த இந்தியா தற்சார்பு நிலையை அடைந்தது.
படித்த இந்தியர்களில் பெரும்பான்மையினர் படித்திருக்கும், பரப்பி வரும் இந்தக் கதைச் சுருக்கம் என்னவோ பெரும்பாலும் உண்மை தான். ஆனால் கதையையே வேறு திசையில் புரட்டிப்போடும் அளவுக்கு முக்கியமான பல தகவல்கள் நம் சரித்திரத்தில் ஒளிந்திருக்கின்றன. சி.சுப்பிரமணியம் (சி.எஸ்.), தமது சுயசரிதையின் மூன்றாம் பாகமான Hand of Destiny (விதியின் கை) எனும் நூலில் இந்தக் கடைசிக் கட்டக் கதையின் சில முக்கியமான நிகழ்வுகளை நன்றாகவே விவரித்திருக்கிறார்.
சி. எஸ்.ஸின் புதிய வேளாண் திட்டத்தின் அடிப்படை
1965இல் சி. எஸ். வேளாண் அமைச்சராகப் பொறுப்பேற்றதும், இந்திய வேளாண் துறையையும் வேளாண் ஆராய்ச்சியையும் அடிப்படையாக மாற்றியமைக்க வேண்டும் என்ற தனது கனவை நனவாக்கும் திட்டத்தை அரசாங்கத்திடம் முன்வைத்தார். “நம் விவசாயிகள் இரண்டாயிரம் ஆண்டுகளாக விவசாயம் செய்துவருகிறார்கள் என்றும், அதனால் அவர்களுக்குத் தெரியாதது இந்த உலகில் எதுவுமில்லை என்றும் விஞ்ஞானபூர்வமான வேளாண்மை விபரீதத்தில் முடியும் ஆர்வக்கோளாறு என்றும் சிலர் கூறுகின்றனர். நம் விவசாயிகள் பாரம்பரிய வேளாண்மையைப் பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் என்பதில் ஏதும் சந்தேகமில்லை. ஆனால் நவீன வேளாண்மையைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது . . . ஆகையால், நாம் பாரம்பரிய வேளாண்மையை மட்டும் நம்பிக்கொண்டு இருக்கப்போவதில்லை என்பதுதான் நமது கொள்கை அளவிலான முடிவு. நவீன விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, நவீன இடுபொருட்களையும் உபயோகித்து, நவீன வேளாண்மையை அறிமுகப்படுத்தப்போகிறோம்!” என்று சி.எஸ். அறிவித்தார்.1
இந்த வாக்கியங்கள், சி.எஸ்.ஸ¤க்கு நவீனத் தொழில்நுட்பத்தின் மேல் இருக்கும் ஒருவிதக் கண்மூடித்தனமான நம்பிக்கையைக் காட்டுகின்றன. இல்லையென்றால், பாரம்பரியத் தொழில்நுட்பம் நமது உணவுப் பிரச்சினையைத் தீர்க்க உதவும் என்கிற பரவலான கருத்தையும் நவீன வேளாண்மை விபரீதத்தில் முடியும் என்கிற எச்சரிக்கையையும் தீர விசாரித்துத் தனது சொந்த முடிவுகளைப் பற்றி எழுதியிருப்பார். அவ்வாறல்லாமல், பசுமைப் புரட்சியைப் பற்றிய அவரது 150 பக்க நூலில், ‘பாரம்பரிய இயற்கை வேளாண்மை நமக்கு ஏன் சோறு போடாது?’ என்கிற கேள்விக்கு ஒரு சில வரிகளில் பதிலளித்து அந்தத் தலைப்பை ஒரேயடியாக மூடிவைத்திருக்கமாட்டார்.
“இயற்கை உரங்களில் 1-3% நைட்ரஜன் மட்டுமே உள்ளது. ஒரு ஹெக்டேருக்கு 60 கிலோ நைட்ரஜன் தேவையென்றால், டன் கணக்கில் உரங்கள் தேவையாகுமே! அத்தனை உரம் நம்மிடம் இல்லை. இருந்தாலும், அத்தனை உரத்தைக் கொண்டு நிலத்தில் கொட்டினால் பயிரே மூழ்கி விடுமே! ஆகையால், . . . இரசாயன உரத்திற்கு மாற்றே கிடையாது!” என்பது அவருடைய வாதம். காற்று மண்டலத்தில் இருக்கும் 70% நைட்ரஜனைத் தாவரங்களுக்குத் தேவையான வடிவத்துக்கு மாற்றித் தரும் வேலைக்கு நுண்ணுயிர்களே பொறுப்பேற்றுக்கொள்ளும்போது, நாம் ஏன் இத்தனை கணக்குகளைப் போட்டு மண்டையைக் குழப்பிக்கொள்ள வேண்டும்? டன் கணக்கில் (நைட்ரஜன் கொண்ட) எருவை நிலத்தில் கொண்டு கொட்டுவதற்குப் பதிலாக, பயிர் சுழற்சி, மூடாக்கு, உயிர் உரங்கள் போன்றவற்றைப் பரவலாக உபயோகித்த நம் விவசாயியின் அருமை பெருமையைப் பற்றி, அறுபதே ஆண்டுகளுக்கு முன்னர் ஜான் அகஸ்டஸ் வோல்கர் விரிவாக எழுதிய அறிக்கையை அக்கறையுடன் படித்திருந்தால் புரிந்திருக்கும்.
இந்தக் கண்மூடித்தனமான நம்பிக்கை ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் அவர் மிகுந்த சிரத்தையுடன் உணவுப் பெருக்கத்திற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வந்தார் என்பதையும் நாம் குறித்துக்கொள்ள வேண்டும். மந்திரிகளை அவர்களின் வீட்டுத் தோட்டங்களில் காய்கறிகளைப் பயிரிட ஊக்குவித்தார். தன் வீட்டிலேயே ஒரு பெரிய காய்கறித் தோட்டம் அமைத்திருந்தார். பல கிணறுகளைத் தோண்டி நீர்வளம் பெருகுவதற்கான சில நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.
புதிய வேளாண் திட்டத்திற்கு எதிர்ப்பு
சி. எஸ். தீட்டிய திட்டம் பெரும்பான்மையினரின் நம்பிக்கையைப் பெறவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியினர், சி. எஸ். அமெரிக்கர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டு, அவர்கள் சொல்லுக்கெல்லாம் ஆடிக்கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டினர். “முதலில் நம் நாட்டின் உணவு இறக்குமதியைப் பற்றிச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். நமது 8.7 கோடி டன் உணவு தானியத் தேவையில் வெறும் 60-70 லட்சம் டன் (அதாவது 7%) மட்டுமே குறைவாக உள்ளது. அதைச் சரிக்கட்டக் கோதுமை விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கச் செய்து, உற்பத்தியைச் சிறிதளவு பெருக்கி, சரிசமமாக விநியோகம் செய்தாலே போதுமானது!” என்று திட்ட அமைச்சர் பகத் கூறினார்.
காங்கிரஸில் இருந்த இடதுசாரியினரும் பல சட்டமன்ற உறுப்பினர்களும் இத்திட்டத்தை எதிர்த்தனர். “நம் நாட்டின் உணவுப் பிரச்சினை மிகைப்படுத்தப்பட்டுள்ளது!” என்று கூறி அப்போதைய நிதி அமைச்சர் டி.டி. கிருஷ்ணமாச்சாரி, இரசாயன உரத்தின் இறக்குமதிக்கு நிதி கொடுக்க மறுத்துவிட்டார். “நம் நாட்டிற்குள் உணவு தானியங்களின் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டாலே, பற்றாக்குறையைச் சரிக்கட்டுவதற்குத் தேவையான உணவு நம்மிடமே உள்ளது என்கிற உண்மை தெரியும்!” என்று அடல் பிஹாரி வாஜ்பேயி கூறினார். அதிமுக்கியமாக, இந்திய அரசாங்கத்தின் திட்டக் கமிஷன் இந்தத் திட்டத்தை ஏற்க மறுத்தது. “நேருவின் கொள்கையின்படி, கிராமப் பஞ்சாயத்துகள், சமூக மேம்பாட்டு அமைப்புகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் மூல மாகத்தான் வேளாண்மையை மேம் படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும்” என்று ஆணித்தரமாக நம்பி அதன் உறுப்பினர்கள் வாதாடி வந்தனர்.
இத்தனை எதிர்ப்புகளையும் சமாளிப்பதற்காக, விஞ்ஞானிகள், வேளாண் பொருளாதார நிபுணர்கள், மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் ஆகியோர் கொண்ட மூன்று தனித்தனிக் குழுக்களை நியமித்து, அவர்களின் கருத்துகளையும் சேகரித்தார் சி. எஸ். இவர்களுள் பொருளியலாளர்களில் ஒரு தரப்பினர், இத்திட்டத்தை எதிர்த்துவந்தனர்; மறு தரப்பினர் இது நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லதா என்று தீர்மானிக்கச் சமயம் கேட்டு, தீர ஆராய்ந்த பின்னரே ஒரு முடிவுக்கு வர முடியும் என்றனர்; ஒரு சிலர் மட்டுமே ஆமோதித்தனர். சமூகவியலாளர்கள் நிலச் சீர்திருத்தம் சரியாகச் செய்யப்படாத நிலையில் இந்தத் தொழில்நுட்பத்தைப் புகுத்தினால், பணக்கார விவசாயிகள் மட்டுமே பயனடைந்து மேலும் பணக்காரர்களாக வழிவகுக்கும் என்று எச்சரித்தனர். அமைச்சரவையிலும் பலர் இதை எதிர்த்தார்கள். பத்திரிகைகள் விமர்சித்தன. ஏன், அதுவரை பிரதமராக இருந்த லால் பஹதூர் சாஸ்திரிகூட சி.எஸ்.ஐ எச்சரித்தார்.
மூத்த விஞ்ஞானிகள் சி.எஸ்.இன் புதிய வேளாண் திட்டத்தைத் தீவிரமாக எதிர்த்தனர். “புதிய வெளிநாட்டு ரகங்களை நாட்டிற்குள் கொண்டுவந்து விவசாய நிலங்களில் பரப்பினால், அதுவரை அறிந்திராத நோய்களும் பூச்சிகளும் சேர்ந்து வந்திறங்கும் மிகப் பெரிய அபாயம் உள்ளது” என்று எச்சரித்தனர். “இந்தியாவிலேயே குறுகிய கால அறுவடை, பூச்சி-நோய் எதிர்ப்பு மற்றும் அதிக விளைச்சல் போன்ற தன்மைகளைக் கொண்ட ரகங்களை நம்முடைய விஞ்ஞானிகள் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். சற்றுக் காத்திருந்தால், அவையே நமக்குக் கிடைக்கும்” என்றனர். 9 வெளிநாடு சென்று திரும்பியிருந்த இளைய தலைமுறை விஞ்ஞானிகள் மட்டுமே இத்திட்டத்தை வரவேற்றனர்.
விதைகளின் அறிமுகம்
1963ஆம் ஆண்டு, நார்மன் போர்லாக், தான் உருவாக்கியிருந்த புதிய குட்டை ரகக் கோதுமை விதைகளை இந்தியாவில் சோதித்துச் செய்து பார்ப்பதற்காக அனுப்பிவைத்தார். 1965இல் லெர்மா ரோஜோ மற்றும் சொனோரா 64 ஆகிய கோதுமை ரகங்கள் 200 டன் மெக்ஸிகோ நாட்டிலிருந்து இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டன. ஆனால் இந்த ரகங்கள் சிவப்பாகவும் எளிதில் வேகாதவையாகவும் இருந்தமையால், இந்திய உணவுக்கு ஏற்றாற்போல நிறம் மற்றும் வேகும் தன்மையையும் மாற்றியமைக்க முன்வந்தார் சுவாமிநாதன்.
மனிலாவில் அமைந்த மிஸிஸிமியிலிருந்து 12 ரக நெல் விதைகள் இந்திய விஞ்ஞானிகளுக்கு ஆராய்ச்சிக்காகக் கொடுக்கப்பட்டன. 1965இல் தாய்சுங் நேட்டிவ்-1 (Taichung Native-1/ TN-1) விதைகளைக் கொண்டுவந்து, 1966க்குள் 3 லட்சம் ஹெக்டேர்களுக்கான விதைகளை உற்பத்தி செய்தனர். “எனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் ஒரு பெரிய சர்ச்சை எழும்பியது. விஞ்ஞானிகள் ஏடி.டி-27 (ADT-27) என்கிற ஒரு புதிய மேம்படுத்தப்பட்ட ரக நெல்லை உருவாக்கியிருந்தனர். அது, ஜிழி-1 போன்ற அன்னிய ரகங்களைப் போன்று சிறப்பான விளைச்சலைக் கொடுத்தது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கிஞிஜி-27ஐ புதிய ரகங்களை உற்பத்தி செய்வதற்கான மூல ரகமாக ஏற்கத் தயாராக இருந்தேன். ஆனால் மற்ற இடங்களுக்கு, இறக்குமதியாகும் அந்நிய ரகங்களையே உபயோகிக்க வேண்டும் என்று நினைத்தேன்” என்று பதிவுசெய்துள்ளார் சி.எஸ்.10
10 கிலோ இரசாயன உரமிடும் வரை பாரம்பரிய ரகங்கள்தாம் அதிக விளைச்சலைக் கொடுத்தன. ஆனால் அதற்கும் அதிகமாக உரமிட்டதில் உயரமான ரகங்கள் கதிர்களின் எடை தாங்காமல் சாய்ந்து விளைச்சல் குறைந்தது. இங்குக் குட்டை ரகங்கள் நிமிர்ந்து நின்று விளைச்சலைக் கொடுத்தன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.11
கம்மிங்ஸின் அவசரம்
சி.எஸ். அமைச்சராகப் பொறுப்பேற்று ஓராண்டுக் காலமாக எல்லாத் தரப்பினரின் எதிர்ப்புகளையும் சந்தித்துக் களைத்துப்போனார். அதற்குள் ராக்கஃபெல்லரின் தலைவரான ரால்ஃப் கம்மிங்க்ஸ், “வீரிய விதைகளை உங்கள் சோதனைக்காக அனுப்பிவைத்து இரண்டாண்டுகள் ஆகப்போகிறது. இன்னும் விவசாயிகளுக்குக் கொண்டுசெல்லாமல் விஞ்ஞானிகளே வைத்துக்கொண்டிருக்கிறீர்களே!” என்று குடையத் தொடங்கினார். கம்மிங்ஸின் அவசரத்துக்கு சி. எஸ். பணிந்தார். “அலை ஓய்ந்த பிறகுதான் கடலில் குளிப்பேன் என்பதெல்லாம் வேலைக்கு ஆகாது! அலைகளை எதிர்த்து தான் இறங்க வேண்டும்” என்று சொன்ன அவர், எப்படியாவது இப்புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவது என்பதில் தீர்மானமாக இருந்தார்.
வறட்சியும் உணவுப் பற்றாக்குறையும்
இதற்கிடையில், உணவுப் பற்றாக் குறையின் காரணமாக PL480இன் மூலம் கோதுமை இறக்குமதியாகிக்கொண்டிருந்தது. 1965-66இல் வறட்சியின் காரணமாக இந்திய உணவு உற்பத்தி மேலும் சரிந்தது. அந்த ஆண்டு சி.எஸ். வாஷிங்டன் சென்று அமெரிக்க வேளாண் செயலாளர் ஓர்வில் ஃப்ரீமன்னைச் சந்தித்து உணவு உதவி கேட்டார். அப்போது ஜனாதிபதியாக இருந்த லிண்டன் ஜான்ஸன், அதுவரை நடைமுறையிலிருந்த ஓராண்டிற்கான உணவு உதவி ஒப்பந்தத்தை நிறுத்திவிட்டு, மாதாமாதம் அனுப்புமாறு மாற்றினார். ஒவ்வொரு மாதமும் அமெரிக்க நிர்ப்பந்தங்களுக்கு இணங்கினால்தான் உணவு தரப்படும் என்பதுதான் இந்தப் புது ஏற்பாடு. இந்தியா பசுமைப் புரட்சித் திட்டத்தை ஏற்க வேண்டும் என்பதுதான் அவரது நிபந்தனை! மேலும், நமது கரன்ஸியின் மதிப்பைக் குறைத்து, தனியார் முதலீட்டுக்கு இருந்த தடை களையும் நீக்குமாறு நிர்ப்பந்தங்கள் போடப்பட்டன.
இந்திரா காந்தியின் உற்சாகம்
ஜனவரி 1966இல் லால் பகதூர் சாஸ்திரியின் இறப்புக்குப் பின்னர், பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்ற இந்திரா காந்தி, சி. எஸ்.இன் திட்டத்தை முழுமையாக ஆதரித்து, அதை அறிமுகப்படுத்தத் தேவையானவற்றைச் செய்ய உற்சாகமாக முன்வந்தார். அவர் செய்த முதல் வேலை, சி.எஸ்.ஐத் திட்டக் கமிஷனுக்குள் புகுத்தியது. அதன் விளைவு: விரைவில், அதனுள் இருந்த எதிர்ப்பு அடங்கியது. பிறகு, சி.எஸ். வேளாண் அமைச்சரகத்தை மாற்றியமைத்தார். மூன்று செயலாளர் பதவிகளை நீக்கிவிட்டு, ஒரே பதவியாக மாற்றினார். அதில் ஒரிஸாவில் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி, நவீன வேளாண்மையைத் தீவிரமாகச் செயல்படுத்திக்கொண்டிருந்த பி. சிவராமன் என்பவரை அமர்த்தினார். “இப்படியாக, வேளாண் முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்தும் மொத்த அமைப்பும் ஒரே ஒரு அதிகாரியின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. இவை நிர்வாக அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட அடிப்படையான மாற்றங்கள். இவற்றைச் செய்திருக்காவிட்டால் பசுமைப் புரட்சியை அறிமுகப்படுத்தியிருக்கவே முடிந்திருக்காது!” என்று சி. எஸ். தனது சுய சரிதையில் ஒப்புக்கொண்டுள்ளார். ஆகஸ்டு 1996இல் புதிய வேளாண் கொள்கைக்கான முன்வரைவு தயாரிக்கப்பட்டது. அந்தச் சமயம், புதிய நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றவரும் இந்தத் திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.
தீவிரமான மேம்பாட்டுத் திட்டம் /ஐந்தாண்டுத் திட்டமும் நிதியுதவியும்
1952இல் ஃபோர்டு ஃபவுண்டேஷன், சமூகத் திட்டத்தை (community programme) 1,500 கிராமங்களில் தொடக்கிவைத்திருந்ததை இங்கு நினைவுகூர வேண்டும். இத்திட்டத்தின் மூலம் கிராமவாசிகளின் உழைப்பைக் கொண்டு உணவு உற்பத்தியைப் பெருக்கி, நிலச் சீர்திருத்தம் செய்து, கிராமக் கூட்டுறவுச் சங்கங்களைப் பலப்படுத்தி அவற்றின் மூலம் பல பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால் 1960-61இல் இந்தத் திட்டத்தை நிறுத்திவிட்டு, தீவிர வேளாண்மை மேம்பாட்டுத் திட்டத்தைத் (Intensive Agricultural Development Programme - IADP) தொடங்கியது இந்த நிறுவனம். பின்தங்கிய மாவட்டங்களுக்கு வள மூட்ட வேண்டும் என்னும் நேருவின் கனவுக்கு நேர் எதிராக, ஒவ்வொரு மாநிலத்திலும் ஏற்கனவே மிக வளமான மற்றும் நீர் வளம் அதிகம் பெற்ற மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்து, விதைகள், இரசாயன உரம், இரசாயனப் பூச்சிக்கொல்லிகள் ஆகியவை அடங்கிய பல சேவைகளை அங்கே கொண்டுசெல்லத் தொடங்கினர்.
இந்தத் தீவிர அணுகுமுறை ஐந்தே ஆண்டுகளில் மத்திய அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் நான்காம் ஐந்தாண்டுத் திட்டமாக (1966-71) உருவெடுத்தது. மண் மட்டும் நீர் வளங்களை அதிகமாகக் கொண்ட நிலங்களில், புதிய கலப்பின (hybrid) விதைகளை விதைத்து, இரசாயன இடுபொருட்களைப் பயன்படுத்திப் பெரிய மகசூலை அள்ள வேண்டுமென்பதே இந்தத் திட்டம். மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் மொத்த பட்ஜெட்டைவிட ஆறு மடங்கு அதிகமாக 1,114 கோடி ரூபாய் வேளாண்மைக்கு ஒதுக்கிவைக்கப்பட்டது. இந்தத் தொகை முக்கியமாக விதைகள், இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்காக ஒதுக்கப்பட்டது. உலக வங்கியும் அமெரிக்க உதவி அமைப்பும் (USAID) அதிகச் செலவாகும் பசுமைப் புரட்சியை அமல்படுத்துவதற்காகக் கடனுதவி வழங்கின. இந்திய உரத் தொழில் துறையில் அந்நிய முதலீடு வருவதற்கான சாதகமான சூழலை உருவாக்குவது, தாராளமாக இறக்குமதி செய்வது, உள்நாட்டில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது ஆகியவற்றை அமல்படுத்தவும் இந்த இரு அமைப்புகளும் நெருக்கடி கொடுத்தன. இவை அரசுக்கு நெருக்கடி கொடுத்து இந்தியக் கரன்ஸியின் மதிப்பை 37 சதவீதம் குறைக்கச் செய்தன.
டாக்டர் கம்மிங்க்ஸின் உதவியுடன் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களைப் போலவே இந்திய வேளாண் பல்கலைக்கழகங்களும் மாற்றியமைக்கப்பட்டன. இதற்கு மட்டுமே பல கோடிகள் செலவிடப்பட்டன. இளம் வேளாண் பட்டதாரிகள் பசுமைப் புரட்சியின் புகழ்பாட வைக்கப்பட்டனர். புதிய விதைகளையும் இடுபொருட்களையும் விவசாயி களுக்குக் கொண்டு செல்லும் பணியில் இறக்கப்பட்டனர். முதலில், மிகக் குறைந்த விலையிலேயே விதைகளையும் மற்ற இடுபொருட்களையும் விற்பதற்காக அரசாங்கம் பல மானியங்களை அளித்தது.
இப்படியாகத் தன் விருப்பப்படியே அலைகளையெல்லாம் எதிர்த்துக்கொண்டு கடலுக்குள் இறங்கினார் சி.எஸ். ஆனால் பசுமைப் புரட்சி இந்தியாவிற்குள் நுழைந்த கதை இதோடு முடிவடைந்துவிடவில்லை. பசுமைப் புரட்சியின் தந்தையாகக் கருதப்படும் எம்.எஸ். சுவாமிநாதன், நிதியை ஒதுக்கிய உலக வங்கி மற்றும் USAID, பசுமைப் புரட்சியில் பெரும் பங்கு பெற்ற பஞ்சாப்பின் பக்ராநங்கல் அணை, மிஸிஸிமின் இயக்குநர்கள் போன்ற பல முக்கிய நபர்கள், திட்டங்கள் மற்றும் நிகழ்வுகளைப் பற்றிய முக்கிய மான தகவல்களைக் கொண்டு உருவான கிளைக்கதைகள் இல்லாமல் இந்தக் கதை முழுமை பெறாது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக