சனி, 26 ஜூன், 2010

மனித உடலில் அதிகரிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள்

 ஐக்கிய அமெரிக்க நாடுகள் என்றழைக்கப்படும் யு எஸ் நாட்டில் வாழும் மக்களிடம் மிக அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்துகள் உடலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் பெண்கள் மெக்ஸிகோ வம்சாவளியினர் ஆகியோரிடம் மற்ற மக்களிடம் இருப்பதை விட அதிக வீதத்தில் இந்த பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.


பூச்சிக்கொல்லி தடுப்பு அமைப்பு என்ற Pesticide Action Network அமைப்பு பல அமெரிக்க மருத்துவமனைகளிடமிருந்து பெற்ற விவரங்களைக் கொண்டு சுமார் 2648 மக்களிடம் 34 வகை பூச்சிக்கொல்லிகளின் அளவை ஆராய்ந்து கண்டறிந்துள்ளது.




இந்த ஆராய்ச்சி ' ரசாயன ஆக்கிரமிப்பு : நம் உடலில் இருக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் பெரும் நிறுவனங்களின் பொறுப்பும் ' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. அரசாங்கமே வகுத்த பாதுகாப்பான அளவு என்ற அளவை மீறி இந்த மக்களிடம் பூச்சிக்கொல்லி மருந்து அளவு இருப்பதை இவர்களது ரத்தம் மற்றும் சிறுநீர் ஆகியவற்றை அளந்து கண்டறிந்துள்ளனர்.


'மக்களை பூச்சிக்கொல்லி மருந்துகளிடமிருந்து காப்பாற்றுவதில் நம்அணுகுமுறை தோல்வியடைந்ததையே இந்த ஆராய்ச்சி வெளிக்கொண்டுவந்து காட்டுகிறது ' என்று கிரிஸ்டின் ஷாபெர் கூறுகிறார். இவர் இந்த ஆராய்ச்சியின் ஒருங்கிணைப்பாளர். 'இந்த பூச்சிக்கொல்லிகளை விவசாயத்திலும் மற்ற பகுதிகளிலும் எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்பதைப் பற்றிய புதிய அணுகுமுறையை இந்த ஆராய்ச்சி தரும் என்று நம்புகிறோம். ' என்று இவர் கூறுகிறார்.




சான் பிரான்ஸிஸ்கோவை மையமாகக் கொண்ட இந்த அமைப்பு பூச்சிக்கொல்லிகளை நாம் எவ்வாறு உபயோகப்படுத்துகிறோம் என்பதையும், பூச்சிக்கொல்லிகளுக்கு மாற்றாக இருக்கும் பல பொருட்களை பிரபலப்படுத்துவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டது. இவர்கள் ஆராய்ச்சி செய்த 23 பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஒரு சராசரி ஆள் சுமார் 13 பூச்சிக்கொல்லி மருந்துகளை அளவுக்கு அதிகமாக உடலில் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த பூச்சிக்கொல்லிகளில் பல, மலட்டுத்தன்மை, பிறப்புக்கோளாறுகள், கான்ஸர் மற்றும் பல தீவிரமான ஆரோக்கியப்பிரச்னைகளுக்கு காரணம் என இந்த அமைப்பு தெளிவுபடுத்துகிறது.


'பல ஆராய்ச்சிகள் இப்படிப்பட்ட பூச்சிக்கொல்லிகளில் மிகக்குறைவான அளவுகூட தீய விளைவுகளை நம் உடலில் ஏற்படுத்த வல்லவை என்பதையே உறுதிசெய்கின்றன ' என்றும் இந்த அமைப்பு கூறுகிறது.

6 முதல் 11 வயதான குழந்தைகள் நரம்புகளைப் பாதிக்கும் குளோர்பைரிஃபோஸ் chlorpyrifos என்ற பூச்சிக்கொல்லியை அமெரிக்க அரசாங்கம் வகுத்திருக்கும் அதிக பட்ச அளவைவிட 4 மடங்கு அதிகமாக கொண்டிருக்கின்றன என்பதும் இந்த ஆராய்ச்சி தெரிவிக்கும் விஷயம். இந்த குளோர்பைரிஃபோஸ் chlorpyrifos மருந்து பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைப் பாதித்துஅவைகளை கொல்லும் வகையான பூச்சிக்கொல்லி.


சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு என்ற அமெரிக்க அரசுப் பிரிவு இந்த ஆய்வுகளில் உண்மை இருப்பதை ஒப்புக் கொள்கிறது. 'மேற்கொண்டு ஆய்வுகள் தேவை. இந்த ஆய்வின் மையக் கருத்தைப் பற்றி ஆய்வுகள் செய்ய வேண்டும் ' என்பதும் இந்த அமைப்பின் கருத்து.


டோ கெமிக்கல் கார்ப்பரேஷன் Dow Chemical Corp என்ற வேதி நிறுவனமே அமெரிக்காவில் இருக்கும் 80 சதவீத குளோர்பைரிஃபோஸ் உற்பத்திக்குக் காரணம். (இதுவே வால்ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற அமெரிக்க வியாபார பத்திரிக்கையை நடத்துகிறது. இந்த நிறுவனமே யூனியன் கார்பைட் நிறுவனத்தை வாங்கியது)


டோ கெமிக்கல் நிறுவனத்தின் வெளியுறவு பேச்சாளர் காரி ஹாம்லின் தன்னுடைய கம்பெனியே அமெரிக்காவின்மிகப்பெரிய பூச்சிக்கொல்லி உற்பத்தி நிறுவனம் என்று உறுதி செய்தார். இருப்பினும், இந்த பூச்சிக்கொல்லிகள் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாமல் வெகு விரைவிலேயே மனித உடலிலிருந்து வெளியேறிவிடும் என்றும் கூறினார். மனித உடலில் இருக்கும் ரத்தத்திலும் சிறுநீரிலும் இந்த வேதிப்பொருள் இருப்பதாலேயே இவை மனித உடலுக்கு பாதிப்பேற்படுத்தும் என்பதற்கான எந்த விதமான நிரூபணமும் இல்லை என்றும் கூறினார்.

குளோர்பைரிஃபோஸ் பரந்து உபயோகப்படுத்தப்படுகிறது. மனிதர்கள் மிகமிக குறைந்த அளவிலேயே இந்த பூச்சிக்கொல்லிக்கு வெளிப்படுத்தப்படுகின்றனர். பூச்சிக்கொல்லி மக்கள் உடலில் வரும்போது மிக வேகமாக இது உடைந்து உடலிலிருந்து சில நாட்களுக்குள் வெளியேற்றப்பட்டுவிடுகிறது ' என்றும் இவர் கூறுகிறார்.



ஆராய்ச்சி, பெண்கள் மிக அதிக அளவில் இந்த பூச்சிக்கொல்லியை உடலில் கொண்டிருக்கிறார்கள் என்றும், இந்த ஆர்கனோ குளோரின் எனப்படும் மூன்றுவகை பூச்சிக்கொல்லிகள் குழந்தைகளின் பிறக்கும்போது எடைக்குறைவாய்ப் பிறக்க காரணம் . குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிப்பவையாகவும் இருக்கின்றன என்றும் கூறுகிறார்.



மெக்ஸிகன் வம்சாவளியினர் மிக அதிக அளவில் லிண்டான் டிடிடி மற்றும் மெத்தில் பார்தியான் ஆகிய lindane, DDT and methyl parthion பூச்சிக்கொல்லிகளை உடலில் கொண்டிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

ஏன் சில பிரிவினர் அதிக அளவில் இந்தப் பூச்சிக் கொல்லிகளை உடலில் கொண்டிருக்கிறார்கள் என்று ஆய்வு செய்யப்படவில்லை. இவர்கள் எங்கே வசித்தார்கள் என்பது பற்றி தகவல்கள் சேகரிக்கப்படவில்லை. தண்ணீர், உணவு, மற்றும் சுவாசத்தினால் பூச்சிக் கொல்லிகள் உடலில் சேரலாம் என்று தெரிகிறது.



பூச்சிக் கொல்லிகள் தயாரிக்கும் கம்பெனிகள் இதற்குப் பொறுப்பேற்கவேண்டும் என்று இந்த அமைப்புக் கோருகிறது. பூச்சிக்கொல்லிகள் பரவுதல் பற்றி ஆய்வு இன்னமும் தீவிரப் படவேண்டும் என்றும் இந்த அமைப்புக் கோருகிறது. ஆபத்தான பூச்சிக் கொல்லிகளைத் தடை செய்யவேண்டும். பூச்சிக் கொல்லிகள் தயாரிப்பாளர்கள் மனித ஆரோக்கியம் கெடாது என்று நிரூபிக்க வேண்டும் என்று வற்புறுத்த வேண்டும்.




பூச்சிக்கொல்லி கலவை பார்க்கின்ஸன் வியாதிக்குக் காரணமா ?

மிக அதிகமாக சாதாரணமாக உபயோகிக்கப்படும் இரண்டு பூச்சிக்கொல்லி மருந்துகள், எலிகளின் உடலுக்குள் செலுத்தப்பட்டால், அவை பார்க்கின்ஸன் வியாதி உருவாக்குவது போலவே மூளையைச் சேதம் செய்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.


எலிகளுக்கு களை அழிக்கும் பாராக்வெட் paraquat உம், காளான் அழிக்கும் மானெப் maneb உம் சேர்த்துக் கொடுத்தால் பார்க்கின்ஸன் இந்த எலிகளில் உருவாவதையும் மூளை அழிவையும் ரோச்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் மருத்துவ, பல்மருத்துவப் பள்ளி ஆராய்ச்சியாளர்களான டெபோரா கோரி ஸ்லேச்டா அவர்களும் அவரது உதவியாளர்களும் தெரிவித்திருக்கிறார்கள்

இரண்டு வேதிப்பொருகளில் ஒன்று மட்டும் கொடுத்தால் இந்த தனிப்பட்ட அடையாளம் கொண்ட மூளை அழிவு தோன்றுவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.


இந்த கண்டுபிடிப்பும் இது போன்ற பல கண்டுபிடிப்புகளும், பூச்சிக்கொல்லிகள் போன்ற வேதிப்பொருள்களுடன் தொடர்ந்து மனித உடல் தொடர்பு கொள்வது, மூளை பாதிப்புக்கு வழிவகுக்கும் என்ற சாட்சியத்துக்கு வலிமை சேர்க்கிறது.

'இதுவரை யாரும் வேதிப்பொருள்களை சேர்த்து செலுத்தி பரிசோதனை நிகழ்த்தவில்லை, இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு ' என்று கோரி-ஸ்லேச்டா சொல்லியிருக்கிறார்.


'எனவே யாருக்கு பார்க்கின்ஸன் வரும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ' என்று இந்த ஆராய்ச்சியில் பங்கு வகித்த நரம்பியல் மூளையியல் வல்லுனர் டாக்டர் எரிக் ரிச்ஃபீல்ட் கூறுகிறார்.


யாருக்கு எந்த அளவில் இந்த வேதிப்பொருள்கள் உடலில் சேரும் என்றும், ஒரு தனிமனிதருக்கு இந்த வியாதி வர அவருக்கு எவ்வளவு வேதிப்பொருள் அவர் உடலில் சேரவேண்டும் என்றும் குறிப்பாகச் சொல்லமுடியாது. உலகத்தில் ஏராளமான வேதிப்பொருள்கள் பூச்சிக்கொல்லிகளாக உபயோகப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு அளவில் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டு மூன்று வேதிப்பொருள்கள் உடலில் சேர்வதை எப்படி அளவிடுவது ? ' என்றும் ரிச்ஃபீல்ட் கூறுகிறார்.

அமெரிக்காவில் மட்டும் சுமார் 500000 பேரை பாதிக்கும் பார்க்கின்ஸன் வியாதி, வளர்ந்து கொண்டே போகும், தீராத ஒரு வியாதி. இது மூளையில் டோபோமைன் என்ற ஒரு திரவத்தை உருவாக்கும் மூளைச்செல்களை பாதிக்கிறது, இந்த டோபோமைன் திரவமே மனிதர்கள் நடப்பதற்கும் அசைவதற்கும் செய்தி கொண்டு செல்லும் திரவம்.

இவ்வியாதியுற்றவர்கள் கை நடுங்க ஆரம்பிக்கும். பின்னர் உடல் முழுக்க பக்கவாதம் வந்து இறப்பர். இந்த வியாதிக்கு மருந்து இல்லை. இருக்கும் மருந்துகளும் இந்த வியாதியின் வளர்ச்சியை மெதுவாக்குமே தவிர தீர்வு ஒன்றுதான்.


இந்த வியாதி, போப்பாண்டவர் ஜான் பால் அவர்களுக்கும், நடிகர் மைக்கல் ஜே ஃபாக்ஸ் (Back to the future) குத்துச் சண்டை வீரர் முகமது அலிக்கும் இருக்கிறது,

ஆராய்ச்சியாளர்கள், தவறான ஜீன் காரணமாகவும் சுற்றுப்புற சூழ்நிலை காரணமாகவும் இது வருகிறது என்று சந்தேகித்து வந்திருக்கிறார்கள். முக்கியமான சந்தேகம் பாஸ்பேட் பூச்சிக்கொல்லிகள். இந்த பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளின் நரம்பு மண்டலத்தை பாதிக்க உருவாக்கப்பட்டவை.


நியூரோஸைன்ஸ் என்ற இதழில் கோரி ஸ்லேச்டாவின் குழு பாராக்குவெட், மானெப் என்ற இரண்டு பூச்சிக்கொல்லிகளைப் பற்றி ஆராய்ந்த கட்டுரை வெளியாகியிருக்கிறது. இந்த இரண்டும் உருளைக்கிழங்கு, தக்காளி, முட்டைக்கோஸ், சோளம், சோயா, பருத்தி, பழங்கள், இவைகளின் வளரும் செடிகள் மேல் தெளிக்கப்படுகின்றன கோடானுகோடி ஏக்கரில்.

இரண்டில் ஒன்று மட்டும் கொடுப்பது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. இரண்டையும் சேர்த்துக் கொடுத்தால், இந்த மூளை பாதிப்பின் தெளிவான அடையாளம் தெரிகிறது. எலிகள் மெதுவாக நடந்தன. டைரோஸின் ஹைட்ராக்ஸிலேஸ் என்ற திரவத்தின் அளவு மிகவும் குறைவாக எலிகளின் உடலில் உற்பத்தியானது. (இந்த திரவம் உடலில் டோபோமைன் ஆரோக்கியமாக இருப்பதை அளவிட உதவுகிறது)


எலிகளின் உடலில் நான்கு பங்கு அளவு reactive astrocytes பிற்போக்கு அஸ்ட்ரோசைட்டுகள் அதிகமாயின. இந்த பொருள்கள் மூளைபாதிப்பு எந்த அளவு இருக்கிறது என்பதை அளவிட உதவும். இந்த எலிகளுக்கு 15சதவீத அளவு குறைந்த டோபோமைன் நியூரான்களும், 15 சதவீத அளவு குறைந்த டோபோமைனும் இந்த எலிகள் உற்பத்தி செய்தன.


டாக்டர் ரிச்ஃபீல்ட் அவர்கள், ஒரு வேதிப்பொருள் மூளைப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் இன்னொரு வேதிப்பொருள் அதற்கு துணை செய்கிறது என்றும் கருதுகிறார். இதை ஆராய்ச்சி செய்தே அறியவேண்டும் என்றும் கருதுகிறார்.

**
பின் குறிப்பு:

1. இந்த செய்தி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தயாரித்தளித்த செய்தி. நன்றி
2. மீண்டும், வேப்பிலை, வேப்பம் புண்ணாக்கு மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்துவதை இந்திய விவசாயிகள் யோசிக்க வேண்டும். வேப்பம் புண்ணாக்கு ஏற்றுமதி மூலம் உலக மக்களை செயற்கை பூச்சிக்கொல்லிகளிலிருந்து காப்பாற்றவும் இயலும். அதற்குள் யாராவது வேப்பம்புண்ணாக்கை பாடண்ட் பண்ணிவிடாமல் பார்த்துக்கொண்டால் நல்லது.





கொத்து மல்லி, லவங்கம் போன்ற வாசனைப்பொருள்களைப் பயன்படுத்தி பூச்சிக்கொல்லி மருந்தினை முர்ரே இஸ்மான் (பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம்) என்பவர் தயாரித்திருக்கிறார்.

வாசனை திரவியங்களில் இருக்கும் எஸ்ஸென்சியல் ஆயில் எனப்படும் வாசனை எண்ணெய்கள் பூச்சிகளை, புழுக்களை, லார்வாக்களை அவற்றின் முட்டைகளை கொல்லக்கூடியன. இவற்றைப் பூச்சிக்கொல்லி மருந்துகளாகப் பயன்படுத்துவதில் புத்திசாலித்தனம் இருக்கிறது. முதலில் இவற்றைப் பயன்படுத்துவதற்கு சட்டபூர்வமான அனுமதி வாங்குவது சுலபம். ஏனெனில், இவை மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்காதவை என்பது ஏற்கனவே தெரிந்தது. இரண்டாவது து செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளைவிட இயற்கைக்குப் பாதுகாப்பானது. து இயற்கைக்குப் பாதுகாப்பானதோ அது மனிதனுக்கும் பாதுகாப்பானது என்பது உண்மை.
பூச்சிகள் சீக்கிரமே மருந்துகளுக்கு சமாளிப்புத்தன்மைகளைப் பெற்றுவிடுவதால், செயற்கை மருந்துகளை அடிக்கடி மாற்ற வேண்டியுள்ளது, அந்தப் பிரச்சனை இயற்கை மருந்துகளுக்குக் கிடையாது. இதில் சில சிக்கல்களும் இருக்கின்றன. செயற்கை மருந்துகளை ஒருதரம் தெளித்தால் ஒருமாதத்திற்கு கவலையில்லாமல் இருக்கலாம்; இயற்கை மருந்துகளை அடிக்கடிப் பயன்படுத்த வேண்டியிருக்கும். சீக்கிரமே ஆவியாகி இவை காற்றில் கரைந்துவிடுவதே காரணம். இதை ஏதாவது ஒரு முறையில் தடுக்க முடிந்தால் இயற்கை மருந்துகளுக்கு ஈடு இருக்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக