'வெட்டிவேர்.... வெற்றிவேர்!'
நிலம் வளமாகும்... பணம் வசமாகும்!
வீணான வேலையை, 'வெட்டிவேலை' என்பார்கள்...! ஆனால், அந்த வேருக்கு ஏன் 'வெட்டிவேர்' என்று பெயர் வைத்தார்கள்? ஒருவேளை, 'தேவையற்றதாக விளைந்து கிடக்கிறது' என்று பெயர் சூட்டியிருப் பார்களோ?
'அதுகிடக்கட்டும், இப்போது எதற்கு இந்த வெட்டி ஆராய்ச்சி என்கிறீர்களா....?'
காரணம் இருக்கிறது!
''விஷயம் தெரியாத வரை அதை 'வெட்டிவேர்' என்று சொல்லிக் கொண்டி ருந்ததில் தப்பில்லை.... ஆனால், இன்றைக்கு அது பணத்தை வெட்டி வரும் வேர்'' என்று சிலாகிக்கிறார்கள் உலகெங்கும் இருக்கும் 'வெட்டிவேர் நெட்வொர்க்' அமைப்பின் உறுப்பினர்கள்.
'சர்வதேச வெட்டிவேர் நெட்வொர்க்' மற்றும் 'இந்திய வெட்டிவேர் நெட்வொர்க்' ஆகிய அமைப்புகள் இணைந்து, பிப்ரவரி 21 முதல் 23-ம் தேதி வரை கேரள மாநிலம் கொச்சியில் ‘சர்வதேச வெட்டிவேர் கருத்தரங்கு’க்கு ஏற்பாடு செய்திருந்தன. அங்கு வந்திருந்த ஒவ்வொருவரும் வெட்டிவேர் பற்றிச் சொல்லச் சொல்ல நாம் ஆச்சர்யத்தின் உச்சிக்கே போய்விட்டோம்.
எந்தப் பக்கம் திரும்பினாலும் வெட்டிவேர் மயம்தான். பொம் மைகள், தொப்பிகள், படுக்கை விரிப்புகள், செருப்புகள் என முழுக்க வெட்டிவேர் கொண்டு தயாரிக் கப்பட்ட பொருட்களின் கண்காட்சி பிரமிக்க வைத்தது.
நிகழ்ச்சி நடந்த அரங்கத்தில் குடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் கூட வெட்டிவேர் வாசம்தான்! அதுமட்டுமல்ல... ''இந்த நீரைக் குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்'' என்று அருகில் நின்றபடி சொல்லிக் கொண்டி ருந்தனர் 'வெட்டிவேர் நெட்வொர்க் குழு' உறுப்பினர்கள்.
இதில் கலந்து கொள்வதற்காக உலகின் பல நாடுகளிலிருந்தும் கொச்சியில் குவிந்திருந்த விஞ்ஞானி களும், விவசாயிகளும் 'வெட்டிவேர், வெட்டிவேர்' என்றே எல்லா மொழிகளிலும் உச்சரித்துக் கொண்டி ருந்தனர். ஆம், ஆங்கிலத்திலும் கூட அதன் பெயர் வெட்டிவேர்! ஆனால், அதன் அருமை பெருமைகளை நாம் அவ்வளவாக உணரவில்லை... வெளிநாட்டுக் காரர்கள்தான் அதை புரிய வைத்துக் கொண்டிருக் கிறார்கள். அதேசமயம், புது விஷயங்கள் எதுவாக இருந்தாலும் முதல் ஆளாக ஒரு கை பார்த்துவிடும் ஆர்வம் கொண்ட அண்டை மாநிலமான கேரளா, வெட்டிவேர் விஷயத்திலும் முந்திக் கொண்டுவிட்டது. அதன் ஒரு கட்டம்தான் இந்தக் கருத்தரங்கம்!
கேரள மாநில ஆளுநர் பாட்டியா, கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசும்போது, ‘‘கேரளாவில் நூற்றாண்டு காலமாகவே வெட்டிவேர் பயன்படுத் தப்பட்டு வருகிறது. இது ஒரு அற்புதமான மருந்தும் கூட. ஆயுர்வேத மருத்துவத்தில் வெட்டிவேருக்கு தனியிடம் உண்டு. உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் இந்த வெட்டிவேர் கொண்டு செல்லப்பட வேண்டும்’’ என்று ஆர்வத்தைத் தூண்டி அமர்ந்தார்.
அற்புத மூலிகை!
'சர்வதேச வெட்டிவேர் நெட் வொர்க்' தலைவர் டிக் க்ரிம்ஸா, தன்னுடைய பேச்சால் கூட்டத் தைக் கட்டிப்போட்டார். ‘‘உலகில் இரண்டு வகையான தொழில் நுட்பங்கள் உள்ளன. ஒன்று, அதிக செலவு செய்து பொருட் களை உற்பத்தி செய்வது. மற்றொன்று குறைந்த செலவில் அதிக பொருட்களை உற்பத்தி செய்வது. இரண்டாவது முறை தான், உலகம் முழுவதுமுள்ள ஏழைகளை எழில் கொஞ்சும் வாழ்க்கைச் சூழலில் வாழவைக்கும். அதாவது, அவர்களின் பிழைப்புக்கு நல்ல வழிகாட்டும். அப்படியரு மந்திரச்செடி, இந்த வெட்டிவேர். இதை வணிகரீதியில் பயிரிட்டு, அதன் மூலம் நிறைய பலன் பெற முடியும் என்பதை உலகம் முழுவதும் உள்ள எங்கள் அமைப் பின் உறுப்பினர்கள் நிருபித்துக் கொண்டுள்ளனர். வெட்டிவேர் விவசாயத்தில் பூச்சி, நோய் தாக்குவதில்லை. ரசாயன உரம், களைக்கொல்லி தேவையில்லை. ஆனால், இதன்மூலம் கிடைக்கும் வருமானமோ மிக அதிகம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு உலக வங்கியின் விவசாயப் பிரிவில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது தமிழக-கர்நாடக எல்லையில் மைசூர் அருகே இருக்கும் குண்டல்பேட்டை பகுதியில்தான் வெட்டிவேரை முதல் முறையாகப் பார்த்தேன். அங்குள்ள விவசாயிகள்... மண்அரிப்பை தடுப்பதற்காகவும், தங்களின் நிலத்தை அடையாளப்படுத்திக் கொள்ளவும் வெட்டிவேரை பயன்படுத்திக் கொண்டிருந்தனர். அத்தோடு, வெட்டிவேர் மூலம் வாசனைத் திரவியம் மற்றும் மருந்து தயாரித்து பயன்படுத்தி வருவதாகவும் சொன்னார்கள்.
'எத்தனை ஆண்டுகளாக இதைப் பயன்படுத்தி வருகிறீர்கள்?' என்று கேட்டேன். 'பாரம்பரியமாக, பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம்' என்றார்கள். அந்த நாள்தான் என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய நாள். அதிலிருந்து வெட்டிவேர் பற்றிய ஆய்வில் இறங்கினேன். அதன் முழுப்பரிமாணத்தையும் தெரிந்து கொண்ட பிறகு, 'ஆகா, அற்புதமான ஒரு மூலிகை, பெரிதாகக் கண்டுகொள்ளப்படாமல் வெட்டியாகக் கிடக்கிறதே... அதைப் பற்றி ஓரளவுக்கு மேல் அந்த விவசாயிகளுக்கும் தெரியவில்லையே' என்றெல்லாம் கவலைப்பட்டேன்.
உலக வங்கிப் பணியை விட்டு வந்தபிறகு, 'வெட்டிவேரின் சிறப்புகளை உலகெங்கும் எடுத்துச் சொல்வதுதான் இனி நம்முடைய வேலை' என்று முடிவு செய்தேன். அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன்'' என்று பெருமையோடு சொன்னார் க்ரிம்ஸா.
அன்று, இவர் போட்ட பதியம்... அமெரிக்கா, சீனா, வியட்நாம், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா.. என்று உலகின் பல நாடுகளிலும் இன்று வேர்விட்டு, வெட்டிவேர் விவசாயத்தை பரப்பிக் கொண்டுள்ளது.
செலவில்லாத சுத்திகரிப்பு கருவி!
ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருந்த டாக்டர் பால் ட்ரவுங் பேசும்போது, அரங்கமே ஆச்சர்யத்தால் வாயடைத்துப் போனது.
‘‘அறிவியல் என்ற பெயரால் உயிருள்ள நிலத்தில் ரசாயன உப்பை கொட்டினோம். அதன் விளைவு நிலம் வளமிழந்து போய்விட்டது. அதை மீண்டும் சீர்திருத்தி, பழையபடி இயற்கை விவசாயத்துக்கு கொண்டு வருவதற்கு இன்றைக்கு நிறையவே கஷ்டப்பட வேண்டியுள்ளது. ஆனால், இனி கஷ்டப்பட தேவையிருக்காது. எங்கெல்லாம் ரசாயன உரத்தால் பாதிக்கப்பட்ட நிலம் உள்ளதோ, அங்கு வெட்டிவேரினைப் பயிரிட்டால் போதும்... மண் பழையபடி உயிர்த்தன்மை மிக்கதாக மாறிவிடும். காரணம், மண்ணிலிருக்கும் விஷத்தன்மையை முறிக்கும் வல்லமை வெட்டிவேரிடம் இருக்கிறது.
நாகரீகம் என்ற பெயரால் நகரங்கள் முழுக்கச் சாக்கடைகளை உருவாக்கி விட்டோம். தொழிற்சாலைக் கழிவுகளை, குடிநீருக்கும் விவசாயத்துக்கும் பயன்படும் ஆறுகளில் கலந்து ஓடச் செய்துவிட்டோம். இதனால் புற்றுநோய், நரம்புக் கோளாறு என்று அதிபயங்கர ஆபத்தை ஏற்படுத்தும் நோய்கள் நம்மைத் தாக்க ஆரம்பித்துவிட்டன.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில் இப்படிப்பட்ட கொடுமையான சூழ்நிலை நிலவுகிறது. அங்கு கழிவுநீர் வெளியே செல்லும் பகுதிகளில் வெட்டிவேர்களை வளர்த்தோம். கழிவுநீரில் இருந்த குரோமியம், காட்மியம் போன்ற உயர் உலோகங்கள் எல்லாம் பதினான்கு மாதங்களில் காணாமலே போய்விட்டன. கழிவுநீரானது நல்ல நீராக மாறிவிட்டது. இத்தகைய அற்புதத்தைச் செலவில்லாமல் செய்து கொடுத்துவிட்டது வெட்டிவேர்.
ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் சாக்கடைகள் அதிகம் ஒடும் இந்தியாவின் லூதியானா நகரில் உள்ள கழிவுநீர்க் கால்வாய் உலக பிரசித்தி பெற்றது. அங்குள்ள பனியன் கம்பெனிகளின் கழிவுநீர் அனைத்தும் வெட்டிவேர் மீது பட்டுச் செல்லும்படி வடிமைத்தோம். அடுத்த சில மாதங்களில் அந்த நீர், நல்ல நீராக மாறிப்போனது’’ என்று சொல்லி ஆச்சர்யப்படுத்தினார்.
வெட்டிவேர்... வீரவேர்!
'இந்திய வெட்டிவேர் நெட்வொர்க்' ஒருங்கிணைப்பாளர் பி.ஹரிதாஸ் (அலைபேசி: 094470-60057) பேசும் போது, ‘‘90-ம் ஆண்டுகளிலிருந்து கேரளத்திலிருக்கும் சில தேயிலை எஸ்டேட்களில் ஊடுபயிராக வெட்டிவேரைப் பயிரிட்டு வருகிறார்கள். ஈரப்பதத்தை ஐந்து மாதங்கள் வரை தக்க வைத்துக்கொள்ளும் தன்மை இந்த வேருக்கு இருப்பது, தேயிலை சாகுபடிக்கு சாதகமான ஒன்றாக இருப்பதால் இதை வளர்க்கிறார்கள்.
வெட்டிவேரில் பல ரகங்கள் உள்ளன. கேரளா மற்றும் தமிழக பகுதியில் பயிர்செய்ய ஓ.டி.வி-3 (ஓட்வ்-3) என்ற ரகம் ஏற்றது. இது வேகமாக வளரும் தன்மை கொண்டது. ஆனால், இதன் வேரில் வாசனை கொஞ்சம் குறைவுதான். இந்தியாவின் வடமாநிலங்களில் விளையும் வெட்டிவேர்தான் வாசனை மிக்கது.
வெட்டிவேரை பயிரிட்டு விவசாயிகள் நிச்சயமாக லாபம் பார்க்க முடியும் என்பதால், நாடு முழுவதும் வெட்டிவேரை பயிரிட ஊக்கப்படுத்தி வருகிறோம். வெற்றிகரமாக வாழ, விவசாயிகளை அழைக்கிறோம்'' என்று நெகிழ்ச்சியோடு குறிப் பிட்டார்.
வருமான வாய்ப்புகள் ஏராளம்!
கோவையிலிருக்கும் பாரதியர் பல்கலைக் கழகத்தின் 'வாழ்க்கை அறிவியல் துறை' இயக்குநர் பேராசியர் லட்சுமண பெருமாள்சாமியும் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டார்.
‘‘தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர், கரூர் போன்ற நகரங்களில் சாயப்பட்டறைகள் அதிகம். இதன் கழிவு நீர் நொய்யல் நதியிலும், காவிரி ஆற்றிலும்தான் கலக்கிறது. கடுமையான விஷத்தன்மை கொண்ட இந்தக் கழிவுநீர் கலந்தோடும் ஆறுகளிலிருந்துதான் தமிழகத்தின் பல நகரங்களுக்கும் குடிநீர் எடுக்கப்படுகிறது. கழிவுநீர் காரணமாக நீர்வளமும், நிலவளமும் பாதிப்படைந்துள்ளது. மாசுபட்டு கிடக்கும் இந்தப் பகுதியை பழையபடி மாற்ற, வெட்டிவேரால் மட்டும்தான் முடியும். இதைச் சாதிக்க வேண்டுமென்றால்... பொதுமக்களும், விவசாயிகளும் வெட்டிவேர் பயிரிடுவதை ஓர் இயக்கமாக மாற்ற முன்வரவேண்டும்'' என்று அழைப்பு வைத்தவர்,
''எங்கள் பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டு காலமாக வெட்டிவேர் பற்றிய ஆய்வு களை செய்து வருகின்றோம். கழிவுநீரை சுத்தி கரிக்க மட்டுமல்ல, வருமானத்துக்காகவும் இதை தாரளமாகப் பயிரிடலாம். அதற்கான வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன'' என்று ஆர்வத்தை தூண்டினார்.
பல நாட்டிலிருந்தும் வந்திருந்த விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளின் கருத்தாழமிக்க பேச் சுக்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்க....
''எல்லாம் சரி... வெட்டி வேரைப் பயிரிடுவது எப்படி...?''
-என்றபடியே கேரள மாநிலம், மலப்புரம் பகுதியிலிருந்து வந்திருந்த பாஸ்கரனிடம் (தொலைபேசி: 0494-2677274) கேட்டோம். இவர், மூன்று தலைமுறைகளாக வெட்டிவேர் சாகுபடி செய்து வருவதோடு, அதை வைத்து கைவினைப் பொருட்கள் தயாரித்து, விற்பனையும் செய்து வருகிறார். தமிழிலேயே நம்மிடம் உரையாடியவர், ‘‘தாத்தா காலத்திலிருந்து இதைப் பயிரிட்டு வந்தாலும், இப்போதுதான் நல்ல காலம் பிறந்திருக்கிறது. ஆரம்பத்தில் நல்ல விலை கிடைக்காமல் கஷ்டப்பட்டோம். இப்போது, வெட்டிவேரைப் பயன்படுத்தி தொப்பி, படுக்கை விரிப்பு, மாலை, பொம்மைகள் என்று பலவித கைவினைப் பொருட்களை செய்து விற்பனை செய்கின்றோம். ஆயுர்வேத மருத்துவத்தில் வெட்டிவேர் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
வெட்டிவேர் சாகுபடி செய்ய நல்ல வடிகால் வசதி உள்ள நிலம் வேண்டும். குறைந்தபட்சம் மாதம் ஒரு முறையாவது நீர் பாசனம் செய்ய வேண்டும். இதற்கென தனியான பருவம் கிடை யாது. வருடம் முழுக்க பயிரிடலாம். அதேபோல இப்படித்தான் பயிரிட வேண்டும் என்று கட்டுப் பாடுகள் எதுவும் இல்லை. உங்கள் தோட்டத்துக்கு ஏற்ப நீங்களே முடிவெடுத்து பயிரிடலாம். இதன் வயது, 12 மாதங்கள். ஒரு வெட்டிவேர் நாற்று 50 காசுக்கு விற்பனையாகிறது. ஏக்கருக்கு 50 ஆயிரம் நாற்றுகள் தேவைப்படும். இதற்கு 25 ஆயிரம் ரூபாய் ஆகும். முதல் ஆண்டு மட்டும்தான் இந்தச் செலவு. அடுத்தடுத்த தடவைகளுக்கு உங்கள் தோட்டத்திலேயே நாற்று கிடைத்துவிடும். பார் அமைத்து, நான்கு அங்குலத்துக்கு ஒன்று என்ற வீதத்தில் நாற்று நடவு செய்யவேண்டும். பெரிதாக பராமரிப்பு ஏதும் இல்லை. மக்கிய இயற்கை எருவைப் போடலாம். இதன் மூலம் வளர்ச்சியை கொஞ்சம் அதிகப்படுத்த முடியும். மற்றபடி ரசாயன உரம், பூச்சி மருந்து ஏதும் தேவையில்லை.
நடவு செய்த 12 மாதங்கள் கழித்து அறுவடை. ஏக்கருக்கு 5 டன் உலர்ந்த வேர் மகசூலாகக் கிடைக்கும். இன்றையச் சந்தை நிலவரப்படி கிலோ 35 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன்படி பார்த்தால் குறைந்தபட்சம் ஏக்கருக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் வருமானம் கிடைக்கும். செலவு போக, 1 லட்சத் துக்கும் அதிகமான ரூபாய் லாபமாகக் கிடைக்கும்.
அடிப்படையில் எங்கள் குடும்பம் விவசாயம் சார்ந்ததாக இருந்தாலும், வெட்டிவேர் தயாரிப்பு களுக்கு தேவை அதிகரித்துக் கொண்டே இருப்பதால், விவசாயத்தைக் குறைத்துக் கொண்டு, குடும்பத் துடன் வெட்டிவேர் கைவினைப் பொருட்கள் செய்வதில் ஈடுபட்டு வருகின்றோம். இதில் கூடுதல் லாபம் கிடைக்கிறது. அதேசமயம், வெட்டிவேர் விவசாயம் செய்யச் சொல்லி பலரையும் ஊக்கப் படுத்தி வருகிறோம்’’ என்று சொன்னவர்,
''யார் கேட்டாலும் வெட்டிவேர் விவசாயத்தைச் சொல்லித்தரத் தயார்'' என்று உற்சாகமாகச் சொன்னார்.
இந்தியாவைப் பொறுத்தவரை வெட்டிவேர் விவசாயம் என்பது இன்னமும் முறையானதாக யாராலும் செய்யப்படவில்லை. ஆங்காங்கே ஒரு சிலர் தங்களுக்குத் தெரிந்த வரையில் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே, சம்பந்தபட்ட வர்களிடம் பேசி முழுமையாக தெரிந்து கொண்டு, சந்தை வாய்ப்பையும் புரிந்து கொண்டு ஒரு கை பாருங்களேன்!
கூவத்துக்கும் வெட்டிவேர்!
‘வெட்டிவேர் மூலமாக கழிவுநீர்க் கால்வாய்களை எளிதாகச் சுத்தப்படுத்த முடியும்' என்ற விஷயத்தைக் காதில் வாங்கியதுமே நம்முன் நிழலாடியது சென்னையின் வற்றாத கூவம்தான்! 'கூவத்தைச் சுத்தப்படுத்துகிறேன் பேர்வழி' என்று அவ்வப்போது திட்டங்கள் தீட்டப்படுகின்றன. நிதியும் ஒதுக்கப்படுகிறது. வேலையும் நடக்கிறது. பணமும் கரைகிறது. ஆனால், கடைசி வரை கூவம்தான் சுத்தமாவதில்லை.
''எத்தனையோ முயற்சித்தாயிற்று ஏன் வெட்டிவேரையும் ஒரு தடவை பரிசோதிக்கக் கூடாது... செலவும் மிகமிகக் குறைவாயிற்றே?'' என்றபடி சென்னையின் மேயர் மா.சுப்பிரமணியன் (தி.மு.க.) கேட்டோம்.
‘‘நீங்கள் சொல்வதைக் கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. கூவத்தைச் சுத்தப்படுத்துவதற்கு வெட்டிவேர் தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்தலாம் என்று மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்து பேசுகிறேன். முதல் கட்டமாக பரிட்சார்த்த ரீதியில் குறைந்த அளவு இடத்தில் செய்துபார்ப்போம். முடிவு திருப்தியாக இருந்தால்... முழுவதுமாக அதை மேற்கொள்வோம்’’ என்று ஆக்கப்பூர்வமாகச் சொன்ன மேயர், வெட்டிவேர் குறித்த தகவல்களையும் தொடர்பு எண்களையும் நம்மிடம் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.
'பூச்சி விரட்டியும் நானே....நோய் துரத்தியும் நானே....
கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் வெட்டிவேர் குறித்து ஆராய்ச்சி செய்துவரும் ரத்னமாலா மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோரும் கருத்தரங்குக்கு வந்திருந்தனர். இருவரும் வெட்டிவேரின் பயன்கள் பற்றி நம்மிடம் பட்டியலிட்டார்கள்.
‘‘வெட்டிவேர் மட்டுமல்ல, அதன் இலையும் அருமையானது. இளம் இலைகளை மாடுகளுக்குக் கொடுத்தால் கூடுதல் பால் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் விவசாயிகளின் தூக்கத்தை கெடுக்கும் பூச்சி மற்றும் நோய்களை விரட்டும் சக்தியும் வெட்டிவேருக்கு உண்டு. காய்கறி, மலர் போன்ற பயிர்களுடன் ஊடுபயிராக வெட்டிவேரைப் பயிரிட்டால், பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல் தடுக்கப்படும். ஊடுபயிராக பயிரிட விரும்பாதவர்கள், என்ன விதமான பயிராக இருந்தாலும், நிலத்தைச் சுற்றி வரப்பு ஓரங்களில் வெட்டிவேர் பயிரிட்டால்கூட போதும்... உங்களின் காவல்காரனாக இருந்து பயிர்களை பாதுகாக்கும். இதை ஆராய்ச்சிப் பூர்வமாக கண்டுபிடித்துள்ளோம். இன்னும் பல விஷயங்கள் ஆராய்ச்சி நிலையில் இருக்கின்றன’’ என்றார்கள். தொடர்புக்கு: வாழ்க்கை அறிவியல் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை - 641046.
தொலைபேசி: 0422-2422222.
'இது தமிழ்வேர்!'
கருத்தரங்கின் இடைவேளையில் 'சர்வதேச வெட்டிவேர் நெட்வொர்க்' தலைவர் டிக் க்ரிம்ஸாவை தனியே சந்தித்துப் பேசினோம். அப்போது பல தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். ''வெட்டிவேர்... தன்னைப் பயிரிடுபவர்களை பணக்காரர் களாக மாற்றும் திறன்கொண்டது. தமிழ் மண்ணுக்கு சொந்தமான வேர் இது. ஆனால், இங்கே இதன் மகத்துவம் தெரியவில்லை. இப்போது நாங்கள் அதை நிரூபித்துவிட்டோம். எனவே, தமிழ்நாட்டில் தாராளமாக இதைப் பயிர் செய்யலாம்.
தமிழக வெட்டிவேருக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. இதைப் பயிரிட்டால் பூமியில் கீழ்நோக்கி மட்டுமே இதன் வேர்கள் செல்லும். அதனால்தான் உங்கள் விவசாயிகள் வரப்பு ஒரத்தில் பயிரிடுகிறார்கள். ஆனால், வடமாநிலங்களில் உள்ள வெட்டிவேர் நிலத்தில் பரவி வளரும் தன்மை கொண்டது. இது விதை மூலம் பரவும். ஒரு இடத்தில் பயிரிட்டால் வயல் முழுக்க நிறைந்துவிடும்.
எல்லோரும் இயற்கை விவசாயத்தைப் பற்றி பேசி வருகிறார்கள். அத்தகையோரைப் போல செயற்கை பொருட்களை மறுக்கும் அற்புத குணம் கொண்ட பயிர் வெட்டிவெர். இதன் சிறப்பம்சத்தை அமெரிக்காவில் இருந்து நான் வந்துதான் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. இது உங்கள் பயிர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’’ என்றவர்,
''உலகம் முழுக்க உள்ள வெட்டிவேர் விவசாயிகளை கொண்டு உருவாக்கப்பட்டதுதான் வெட்டிவேர் நெட்வெர்க். இதில் சாகுபடி, விற்பனை, ஏற்றுமதி என எல்லா தகவல்களையும் பரிமாறிக் கொள்ளலாம். கட்டணம் கிடையாது. பத்தாயிரம் பக்கங்களுடன் இந்த இணையதளம் விரிந்து கிடக்கிறது. இதில் இணைந்து கொள்ள தமிழக விவசாயிகளை வரவேற்கிறேன்'' என்று அழைப்பு வைத்தார்.
இணையதள முகவரி:www.vetiver.org
வெள்ளி, 16 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக