சனி, 10 ஏப்ரல், 2010

வேளாண்மை உயில்: ருஷியாவில் மண்ணுயிர் ஆய்வு

ஆல்பர்ட் ஹாவொர்டின் (Albert Howard) ”வேளாண்மை உயில்” 1940-இல் லண்டனில் அச்சேறியது. பின்னர் ஏழு மறுபதிப்புகள் வெளிவந்து அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் விற்பனையானது. நூல் விற்பனையுடன், ஏராளமான அளவில் மேலைநாட்டு விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளவும் தூண்டியது. எனினும் இந்தியாவில் இப்புத்தகம் கிடைக்கவில்லை. எனினும் இந்தியாவில் பெரும்பாலான வாசகர்களுக்கு 1996 வரையில் ஜெராக்ஸ் பிரதிகளே வினியோகமாயின. 1996-ம் ஆண்டில், க்ளோட் ஆல்வாரிஸ் (Claude Alvarez) தனது அதர் இண்டியா பிரஸ் மூலம், மாபுசா, கோவாவிலிருந்து அச்சிட்டு இந்தியப் பதிப்பாக வெளியிட்டார். பின்னர் நான்காண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவில் மறுபதிப்புகள் அச்சிட்டு வெளியாயின. பென்சில்வேனியாவில் ஜே.ஐ. ரோடேல் எவ்வாறு சோவியத் ருஷிய மண்ணுயிர் ஆய்வுகள், ஹாவொர்ட், ஷாட்ஸ், ஜப்பானிய காந்தி ஃபூகோகா ஆகியொரின் நூல்களை ஆங்கிலத்தில் அன்று வெளியிட்டாரோ அவ்வாறே பல இயற்கை விவசாய இலக்கியங்களை (ஆய்வுக் கட்டுரைகளை) இப்போது க்ளோட் ஆல்வாரிஸ் இந்தியாவில் வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

Albert Howard's An Agricultural Testament

லீபெக் உருவாக்கிய என்.பி.கே ரசாயன உரப்பயன்பாட்டால் மண்ணில் நுண்ணுயிரிகள், மண்புழுக்கள் அழிந்து மண்வளம் கெடும் என்றும் ரசாயன உரத்திற்கு ஈடாக மண்ணில் கரிம மக்குகளை அறுவடைக்கழிவும், குணபக்கழிவும் கொண்டு உருவாக்க வேண்டும் என்ற போர்க்குரல் இந்தியாவில் எழும்பி, இந்த எதிர்ப்பு இயக்கமே எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு விசுவரூபத்தை எடுத்துவிட்டது.

லீபெக் 19-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இறக்கும் சமயம், தன் தவறை உணர்ந்து மரணவாக்கு மூலம் வழங்கினார். அம்மரணவாக்கு மூலத்தை 1899 -ஆம் ஆண்டு பதிப்பில் ‘என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா’ வெளியிட்டாலும், மறுபதிப்புகளில் இடம் பெறவில்லை. அவர் வாக்கு மூலம் இதுவே: ”இறைவனின் படைப்புகளுக்கு எதிராக, இறைவனை எதிர்த்து மண்ணுயிரிகளைக் கொன்ற பாவியாக மாறியதால் எனக்கு தண்டனை கிடைத்துவிட்டது. மண்ணில் நுண்ணுயிரிகளைக் கொன்று ரசாயன ஊட்டமே நன்று என்று நான் நவின்றது பாவம். மண்ணுக்கு மண்புழுக்களும், நுண்ணுயிரிகளும் கொண்ட மக்குதான் இயல்பானது. மண்ணை நோயின்றிக் காப்பாற்றும்….”

விவசாயத்தில் அதிகபட்ச கண்டுமுதல் இயற்கை வழியில் எடுக்க முடியும் என்று அன்றே எடுத்துக்காட்டிய ஹாவொர்ட், எப்படியெல்லாம் சாதனைபுரிந்தார் என்ற நுட்ப விவரங்களை நாம் பின்னர் கவனிக்கும் முன்னர் ஹாவொர்ட் எந்த நோக்கத்தில் தான் படைத்த வேளாண்மைக் காவியத்திற்கு ”வேளாண்மை உயில்” (THE AGRICULTURAL TESTAMENT) என்று பெயரிட்டாரென்ற் விவரத்தை அவர் வாயிலாகவே அறிவது நன்று.

”அன்னை பூமிக்குப் பாஸ் புத்தகம் இல்லை. மண் என்ற மூலதனத்திலிருந்து வெளியேற்றப்படும் வளத்திற்கு வரம்பே இல்லை. தொழில் புரட்சிக்குப் பின் வளர்ச்சியின் வேகம் தீவிரமாயுள்ளது. மக்களுக்கு உணவும் தொழில்களுக்குரிய கச்சாப்பொருள்களும் உற்பத்தி செய்வதில் வேகம் பிறந்துள்ளது. என்.பி.கே பேரூட்டங்களுக்கு உப்பு வடிவில் ரசாயனங்களை வழங்கும் போது இவ்வாறு மண்வளம் சுரண்டப்படுகிறது. இவ்வாறு இழக்கப்பட்ட மண்வளத்திற்கு ஈடு செய்ய எதுவுமே செய்யப்படவில்லை. பயிர்களின் மீது உயிர்க்கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன. மண்ணில் வளம் கெடுவதுடன் மண் மேலும் நச்சாகிறது. விதைகளின் கருப்பை விஷமானால் விளைவும் விஷந்தானே?

பூச்சிகளையும் நோய்களையும் கட்டுப்படுத்த தெளிப்பானைக் கொண்டு நாம் காடுகளில் ‘மருந்து’ அடிப்பதில்லை. காடுகளில் உள்ள விலங்குகளும் தாவரங்களுக்கும் நோய் வருவதுண்டு. ஆனால் மருத்துவ உதவியின்றி அவை குணமாகின்றன. விலங்குகளும் தாவரங்களும் பூச்சி பூசணங்களிலிருந்து தாமாகவே காப்பாற்றிக் கொள்கின்றனவே. எவ்வாறு? இழந்துவரும் மண்வளம் மீட்கப்படவேண்டும். நவீன விவசாயத்தில் மண்வளம் இழப்பது மட்டுமல்ல. மண்ணில் மக்குப் பொருள் இல்லாததால் மண்ணே அரிப்புகளுக்கு பலியாகிப் பாலையாகிவிடுகிறது. அன்னை பூமியின் கருப்பை பழுதடைந்து வருவதால் இழந்த வளத்தை மீட்பது எப்படி? மண்ணில் உள்ள இயற்கை வளத்தை நிர்வாகம் செய்வது எப்படி? இக்கேள்விகளுக்குரிய விடைகளாக எனது 40 ஆண்டு கால ஆராய்ச்சிகளையும் அனுபவங்களையும் கொண்டு இந்த நூலில் (வேளாண்மை உயில்) உகந்த அறிவுரைகளை வழங்கியுள்ளன. இந்த அனுபவங்கள் இந்தியாவிலும் (பாகிஸ்தான் அடங்கிய பகுதியும் சேர்த்து) மேற்கிந்தியத் தீவுகளிலும், இங்கிலாந்திலும் திரட்டப்பட்டவை”

1905-31 காலகட்டத்தில் இந்திய விவசாயம் பற்றி இவர் கூறியவை பொன்னெழுத்துக்களாகும்:

“பூச்சி பூசாண நோய்களுக்கு, இந்திய விவசாயிகள் விஷமான பூச்சி மருந்துகளைப் பயிர்கள் மீது தெளிக்காமல் பயிர்களைக் காப்பாற்றும் விதம் மிக வியப்பாக இருந்தது. பூச்சிகள் பொருந்தாத பயிர்களை எடுத்துக்காட்டுகின்றன. மாற்றுப் பயிர்களைச்செய்து விடுகிறார்கள். நோயியல் நிபுணர், பூச்சியியல் நிபுணர், பாக்டீரியா நிபுணர், வேதியியல் நிபுணர், புள்ளியியல் நிபுணர், விவசாய நிபுணர், உதவிகள் இல்லாமல் உயர்ந்தபட்ச மகசூலைப் பெறுவதும் வியப்பாகவும் மலைப்பாகவும் இருந்தது. மேற்படி நிபுணத்துவ உதவி இல்லாமலும், ரசாயனஉரம், பூச்சி பூசணக்கொல்லி, கிருமிநாசினி, தெளிப்பான் ஆகியவற்றைப் பயன்படுத்தாமலும் ஆரோக்கியமாகப் பயிர் செய்வது எப்படி? இந்த நுட்பங்களை இந்திய விவசாயிகளிடம் கற்க விரும்பினேன். உழவியல் நுட்பம் இந்திய விவசாயிகளின் ரத்தத்தில் ஊறிப்போயிருந்தது. இந்திய விவசாயிகளுக்கு ரசாயன போதகராக அனுப்பப்பட்ட நான் இங்குள்ள இயற்கை விவசாயத் தொழில் நுட்பங்களை இங்கிலாந்துக்கு கொண்டு செல்ல விரும்பினேன்.”

இந்திய விவசாயத்தில் ரசாயன அறிமுகத்தை மிகவும் தாமதப்படுத்தியதில் ஹாவொர்டின் பங்குபோற்றக்கூடியது. இந்தியாவில் ரசாயன உர இறக்குமதிக்கும், பூச்சி மருந்து இறக்கு மதிக்கும் பெரும் தடைக்கல்லாயிருந்த ஹாவொர்ட் ஐரோப்பிய உர நிறுவனர்களின் எதிர்ப்புக்கும், கண்டனத்திற்கும் ஆளானதில் வியப்பில்லை. இவர் கவனிப்பில் இருந்த மத்திய இந்தியாவிலும், வட இந்திய மாநிலங்களிலும் உரத்தொழிற்சாலை தொடங்க யாரும் முன்வரவில்லை. எனினும், இந்தியாவில் முதல் ரசாயன உரத்தொழிற்சாலை நிறுவப்பட்ட இடம் ராணிப்பேட்டை. இந்திய வேளாண்மை வரலாற்றில் இப்படி ஒரு கெட்ட புகழைத் தமிழ்நாட்டுக்கு வழங்கிய நிறுவனம் பாரி அண்ட் கோ. 1906-ஆம் ஆண்டு பாரி அண்ட் கோ, சூப்பர் பாஸ்பேட் உர உற்பத்தியைத் தொடங்கியது. 1941ஆம் ஆண்டு மைசூர் கெமிக்கல் நிறுவனம் அமோனியா உற்பத்தியைத் தொடங்கியது. அதன்பின்னர் கேரள மாநிலத்தில் 1947இல் பொட்டிலைசர் அண்ட கெமிக்கல்ஸ் திருவாங்கூர் (FACT) என்ற உரநிறுவனம் உருவானது. இதில் ஒரு சோகமான நகைச்சுவை எதுவெனில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் அடங்கிய ”திராவிட நாட்டில்தான்” (பழைய சென்னை மாகாணம்) அந்நிய ரசாயனம் அறிமுகமானது. (”திராவிடம்” என்ற சமஸ்கிருத மொழிச்சொல் உண்மையில் துளுவையும் சேர்த்து ஐந்து தென்னாட்டு மொழிகளின் ஒற்றுமையைக் குறிக்கும். மொழி இலக்கணம் வகுத்த பாணியால் இந்தச் சொல் உருவானது.) ஒருக்கால் திராவிடத்திருநாட்டில் வேளாண்மைப்பணிபுரிய ஹாவொர்டுக்கு வாய்ப்பு கிட்டியிருந்தால் இந்த ரசாயன உர நிறுவனங்களை அனுமதித்திருக்கவே மாட்டார்.

இன்றும்கூட, நம்ம ஊர் வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில் மண்ணை வளப்படுத்தும் வழிகள் பற்றியோ, வளமான மண்ணின் இலக்கணம் பற்றியோ, மண்ணுக்குள் நிகழும் ரசாயனமாற்றம் பற்றியோ, மக்குப்பொருள் முக்கியம் பற்றியோ கற்பிக்கப்படுவதில்லை. ஏனெனில் மண்ணுக்குள் ஏற்படக்கூடிய ரசாயனமாற்றம் செயற்கை ரசாயனங்களால் மட்டுமே நிகழ்வதாக எண்ணப்படுகிறது. இது தவறான கண்ணோட்டம். மண்ணுக்குள் ஏற்படும் ரசாயனமாற்றம் இயற்கை இடுபொருள்களால் குறிப்பாக இயற்கை இடுபொருள் மக்காக மாறியபின் எப்போதுமே நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இதை முதலில் கண்டறிந்தவர்கள் ருஷிய நாட்டு விஞ்ஞானிகளே. மிச்சம் தொல் சிறப்புள்ள இந்திய வேளாண்மையில் மண்ணில் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் பற்றிய குறிப்புகள் ரிக்வேதம், அதர்வணவேதம், சதபதபிராமணம் போன்ற வைதீக இலக்கியங்களில் உண்டு. இதில் உள்ள குறிப்புகளைக் கொண்டு குணபஜலம் என்ற பயிர் ஊக்கி பற்றி 10-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட விருட்சாயுர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மண்ணுக்கும் வேரூக்கும் உள்ள ஊட்ட உறவுகளில் தோன்றும் இயல்பான ரசாயன மாற்றம் பற்றிய அறிவியல் நுட்பங்களை ஆராய்ந்து எழுதியவர்கள் ருஷிய விஞ்ஞானிகளே ஆவர்.

பிரிட்டிஷ் இந்தியாவில் முக்கியப் பதவியை வகித்த ஆல்பர்ட் ஹாவொர்டுக்கும், ருஷ்ய-அமெரிக்கரும், ஆராய்ச்சி மாணவராகவும், பின் விஞ்ஞானியாகவுமான ஆல்பர்ட் ஷாட்சுக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. இன்றைய இந்தியாவில் இயற்கை விவசாயத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டு ஐரோப்பிய நாடுகளிலும் இயற்கை விவசாயத்திற்கு ஹாவொர்டு அடிக்கல் நாட்டியது போலவே
ஆல்பர்ட் ஸ்கேட்ஸ்

ஆல்பர்ட் ஷாட்ஸ்

அமெரிக்காவில் இயற்கை விவசாயத்தை நிலை நாட்டியதில் ஷாட்ஸுக்குப் பெரும்பங்கு உள்ளது. ஹாவொர்டுக்கும் ஷாட்சுக்கும் பாலமாகத் திகழ்ந்தவர் ஜே.ஐ.ரோடேல். இவர் ருஷியாவிலிருந்து அமெரிக்கா சென்று குடியேறியவர். இவருடைய தந்தை ரோடேல் மண்ணுக்குள் நுண்ணுயிர்களின் இயக்கம் பற்றிய ருஷிய விஞ்ஞானிகளின் ஆய்வுகளையெல்லாம் ஆங்கிலத்தில் வெளியிட்டுப் பல விஞ்ஞானிகளுக்கு அறிமுகம் வழங்கியவர். ஜார் ருஷியாவிலிருந்து முதல் உலகப்போருக்கு முன்னர் வெளியேறிய ருஷிய-யூத விஞ்ஞானிகளில் பலர் அமெரிக்காவிலும், சிலர் ஆஸ்திரேலியாவிலும் குடியேறினர். அவர்களில் ரொடேல் குடும்பம் ஒன்று. ஷாட்ஸின் தாத்தா அமெரிக்காவில் குடியேறிய ரஷ்ய யூதர். ஆனால் யார் இந்த ஷாட்ஸ்?

டாக்டர் ஆல்பெர்ட் ஷாட்ஸ் (Albert Schatz) தனது 23 ஆவது வயதிலேயே, ’ஸ்ட்ரெப்டோமைசின்” என்னும் ஆன்டிபயாடிக் மருந்தைக் கண்டுபிடித்துக் கோடானுகோடி (பாட்டாளி) மக்களை டி.பி என்ற காசநோயிலிருந்து, நிச்சய் மரணத்திலிருந்து காப்பாற்றியவர். இக்கண்டுபிடிப்புக்குப்பின் காசநோய் வந்து யாரும் எளிதில் மரணமடைவதில்லை. இம்மருந்தை இவர் கண்டுபிடித்தபோது இவர் ஒரு மாணவர் என்று கூறி ஆராய்ச்சியை மேற்பார்வை செய்த இவருடைய பேராசிரியருக்கு நோபல் பரிசுத் தொகை சென்றது. பல மாதங்கள் இரவும் பகலும் சோதனைக் கூடத்தில் உழைத்து அம்மருந்தைக் கண்டது இவர்தான். அதை இவருடைய பேராசிரியரே துவக்கத்தில் ஒத்துக் கொண்டிருந்தார். ஆனால் அதை பெரும் மருந்து நிறுவனங்களிடம் கொடுத்து மக்கள் திரளுக்கென ஒரு மருந்தாக்குவதில் இவரது பேராசிரியர் கவனம் செலுத்தியது உண்மை. அதில் இவருக்கு ப்ங்கு கொடுக்காமல் இவரை ஓரம் கட்டியட்ஹு அப்பேராசிரியரும், பல்கலையின் நிர்வாகமும். அதற்குப் பல காரணங்களிருந்தன. அன்றைய சூழ்நிலையில் ரஷ்யராகவும் யூதராகவும் பார்க்கப் பட்ட ஷாட்ஸுக்கு பல்கலை நிறுவனத்திட்ம் போராட் அதிகம் வலு இல்லை. பிற்பாடு இந்த் மருந்துக்கு நோபல் பரிசு கொடுக்கப் பட்ட் போது இவர் தான் இவ்வாறு வஞ்சிக்கப்பட்டதை எதிர்த்துக் குரல் கொடுத்து வெகு காலம் கழித்தே இவருக்கு உரிய உரிமம் கொடுக்கப்பட்டது. மாண்வராய் இருந்து முடித்துப் பட்டம் வாங்கிய இவர் அன்று தன் கண்டுபிடிப்பு இப்படி யாருக்கோ பெயர் வாங்கிக் கொடுத்ததைக் கண்டு மனம் தளரவில்லை. பல வருடம் போராடிய வண்ணம் இருந்தார். இறுதியில் இவர் பெய்ர் அறிவியல் பதிவேடுகளில் ஸ்ட்ரெப்டோமைசின் என்ற ஆண்டிபயாடிக் மருந்தைக் கண்டுபிடித்தவர்களில் இவரும் ஒருவர் என்று ஒத்துக் கொள்ளப் பட்டு விட்டது. ஸ்ட்ரெப்டோமைசின் மனித நோய்களை மட்டும் தீர்க்கவில்லை. தாவரங்களின் நோய்களையும் தடுக்க, அவற்றைப் பாக்டீரியா, காளான், அல்கே போன்றவை தாக்காமல் தடுக்க ஒரு கொல்லி மருந்தாகத் தெளிக்கப் படுகிறது. ஆப்பிள், சீமைபேரி போன்ற பழமரங்களில் சில நோய்களைத் தடுக்கப் பெரிதும் பயன்படுத்தப் படுகிறது.

இவர் தாத்தா ஒரு யூதர் என்பதால் அன்றைய ஜார் மன்னரின் சட்டப்படி ஒரு சென்டு நிலம் கூட வாங்க அனுமதி கிட்டவில்லை. ஷாட்ஸின் தாத்தாவுக்கு மண்மீதும், விவசாயத்தின் மீதும் கொள்ள ஆசை. ருஷியாவை விட்டு அமெரிக்காவில் குடியேறி, வடகிழக்குப் பகுதியில் கனெக்டிகட் (Connecticut) மாநில்த்தில், போஸ்ரா என்ற சிற்றூரில் (Bozrah, Connecticu), 140 ஏக்கரில் ஒரு சிறு பண்ணையை உருவாக்கினார். அமெரிக்க அகராதியில் 100 ஏக்கர், 200 ஏக்கர் என்பது ”சிறுபண்ணை”. பிற்காலத்தில் தனது குழந்தைப் பருவத்தை நினைவு கூர்ந்த ஷாட்ஸ் அச்சிறு பண்ணையில் தான் கவனித்த விஷயங்களே தன்னை ஒரு ஆய்வாளராகவும், பின்னர் ஒரு முனைவராகவும், முக்கியமான விஞ்ஞானியாகவும் மாறக் காரணமானவை என்கிறார். அவர் கண்டுபிடித்த காளான்கள் எல்லாம் மண்ணில் பெற்றவைதானே! ஷாட்ஸ் அமெரிக்காவில் பிறந்து ஆங்கில வழியே படித்தவராயினும் தாய்மொழி அறிவு அவருக்கு உதவியது. ஏனெனில் மண்ணுயியல்-நுண்ணுயிரியல் பற்றிய பல அன்றைய ஆய்வுக் கட்டுரைகள் ருஷிய மொழியில் எழுதப்பட்டவை. அவற்றை ஷாட்ஸ் ஆழ்ந்து படித்து விரிந்தஅறிவு பெற்றவராக விளங்கினார். அவர் எழுதிய குறிப்புகளை வெளியிட்ட ரோடேலுமே, ருஷிய அறிவியல் நூல் களஞ்சியமாகவும் திகழ்ந்தார்.

கோதுமை அறுவடை செய்யும் ரஷ்ய விவசாயிகள்

கோதுமை அறுவடை செய்யும் ரஷ்ய விவசாயிகள்

ஷாட்ஸ் துவக்கத்தில் பெடாலஜி (Pedology-soil) என்ற துறையில் துவங்கிப் பின் மண்ணுயிரியல் (Pelology) என்ற துறைக்கு நகர்ந்தார். இப்படி ஒரு அறிவியல் துறை இந்தியாவில் எந்தப் பல்கலைக்கழகத்திலும் இல்லை. ருஷ்யாவிலிருந்து இத்துறை அமெரிக்கா சென்றது. இத்துறை இன்றும் கிழக்கைரோப்பியப் பல்கலைகளில் பரவலாகக் கற்பிக்கப் படுகிறது. அங்கு பெலாலஜியை ஜியாலஜியின் பங்காகவே (paleo-pedology) பலரும் எண்ணுகின்றனர். அமெரிக்க அறிவியலில் பெலாலஜி அறியப்படுமுன், மண் என்பது பாறையின் துகள்கள் எனவும் ,தாவரங்களின் வேர்களுக்கு மண் ஒரு பாத்திரம் என்ற அளவில் புரிதல் இருந்தது. இதை மாற்றிய வாஸ்ஸிலி வாஸ்ஸிலியெவிச் டொகுசெயெவ் (Vasily Vasilyevich Dokuchaev) என்னும் 19ஆம் நூற்றாண்டின் ம்ண் அறிவியலாளர்- (இவர்தான் ரஷ்யாவின் முதல் மண் அறிவியலாளர் என அறியப்படுகிறார், ஏனெனில் அந்தத் துறையையே இவர்தான் உருவாக்கினார், இவர் முதலில் ஒரு புவியியலாளர்), அமெரிக்க வேளாண்மைத் துறையில் அன்று மண்ணுயிரியல் தலைவராகப் பணிபுரிந்த மார்பட், ”மண்ணியல் துறைக்கு (Geology) சார்லஸ் லையல் எவ்வாறோ, தாவர இயலுக்கு லின்னீயெஸ் (Linnaeus) எவ்வாறோ, அவ்வாறு மண்ணை (உயிர்) நிரம்பியதாகவும், மாறும் தன்மையுடையதாகவும் நிரூபித்துள்ளார்.

டொகுசாயேவ் வாழ்ந்த காலம் 1846-1903. மண்ணைப் பற்றிய முதல் ஆய்வு நூலைப் படைத்தவர். அந்த நூல் ’உலகின் முக்கிய மண் வகைகளும், அவற்றின் வளர்ச்சியும் ’ (’The Great Soil Groups of the World and their Development). இரண்டாவது நூல், ”ருஷியாவின் கரிசல்.” பயிருக்கேற்ற புவிச்சூழல் (The Geographical zones) என்ற கருத்தையும் புனைந்தவர். இந்த நூல்களுடன் இத்துறைக்குரிய காணிக்கையாக ருஷியமொழி பயின்ற ஜூஃபே (Jacob Samuel Joffe), பல்வேறு ருஷிய மண்ணியல் மண்ணியுரியல் விஞ்ஞானிகளின் ஆய்வுக்கட்டுரைகளிலிருந்து ஒரு மண் அகராதியை (The ABC of the Soil) எழுதியுள்ளார். அதை வெளியிடக் காரணமானவர் மார்பட். எனினும் ஷாட்ஸ் இத்துறையில் மேற்படி மூலநூல்களைக் கரைத்துக்குடித்தவர். ஷாட்ஸுக்கு நியூஜெர்சியில் உள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழம் மண்வேதியியல் துறையியல் பட்டம் வழங்கியது. அதன் பின்னர் மண்நுண்ணியிர்கள் (Soil Microbioloy) துறையில் முனைவர் பட்டமும் வழங்கியது. ஷாட்ஸை ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் ஊக்கப்படுத்தியவர் ஜேக்கப் லிபமேன் ஆவார். ஜேக்கப் லிப்மேன் அங்கு வேளாண்மைத் துறைத் தலைவராயிருந்தவர். லிப்மேனும் ருஷியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர். ருஷிய மொழிப்பற்று இவர்களை ஒன்று சேர்ந்தது. மண்ணுக்குள் இயங்கும் நுண்ணுயிரிகள் பற்றிய ஆராய்ச்சியில் ஷாட்ஸ் கவனம் செலுத்திவந்தார். மண் வெறும் ஜடப்பொருள் அல்ல. உயர்மண், மண்ணுயிர் இயக்கம் என்பது பொய்யல்ல என்று கூறியவர். டொகுசாயேவும் லீபெக்கும் சமகாலத்தவர்கள். மண்ணில் உயிர் உண்டு என்று உண்மையைக் கூறியவர் வெளியேற்றப்பட்டதும், மண்ணில் உயிர் இல்லை என்று பொய்யைச் சொன்ன ஜெர்மன் விஞ்ஞானி உள்ளே வந்ததும் வரலாற்றின் சோகம்.

ஷாட்ஸ் தனது 22வது வயதில் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தார். அவரது ஆராய்ச்சிப் பணி புளோரிடா ராணுவ மருத்துவமனையில் உள்ள ஒரு பரிசோதனைக்கூடத்தில் வாரம் 40 டாலர் சம்பளத்தில் நிகழந்து வந்தது. இவர் தன்னுடைய சம்பளத்தை வைத்துக் கொண்டுதான் பல்கலைக்கழக ஆராய்ச்சியையும் தொடர வேண்டியிருந்தது. இவர் புளோரிடா ருட்லேண்ட பகுதியில் உள்ள ஆற்றுமண், சேற்றுமண், ஏரிமண், கடல்மண் போன்ற பலவற்றின் மாதிரிகளைச் சோதனைக் கூடத்தில் கொண்டுவந்து அவற்றில் உள்ள நுண்ணியிரிகளைக் கண்டுபிடித்துக் கணக்கிட்டுவந்தார். இப்படிப்பட்ட இளம் வயதில் இவர் ஒருவர் மட்டுமே ரூபர்குனோசிஸ் என்ற காசநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை ஆராய அனுமதிபெற்றார். மருத்துவமனைக் கட்டுப்பாட்டுக்கு இணங்க இவருக்குக் கட்டிடத்தின் அடித்தள அறை ஒன்று வழங்கப்பட்டது. ரூபர குளோசிஸ் பாக்டீரியாவைக் கொல்லக்கூடிய எதிர் உயிரியைக் கண்டுபிடித்து அதை ஸ்ட்ரெப்டோமைசின் என்று பெயரிட்டார். ”ஸ்ட்ரப்டோ” என்றால் ”பின்னிப் படர்ந்துள்ள” என்று பொருள். மைசீன் என்றால் காளான். மண்ணில் உள்ள ஒரு காளான் உயிரியும், கோழிக் கொண்டையிலிருந்து எடுக்க்கப்பட்ட ஒரு பாக்டீரியாவும் சேர்ந்து ஸ்ட்ரெப்டோமைசின் உருவாகி அது ரூபர்குளோசிஸ் பாக்டீரியாவை அழிக்கும் உண்மையை இவர் கண்டுபிடிக்க ஓராண்டு உழைத்தார். அந்நிலையில் அவர் ஒரு ஆராய்ச்சி மாணவரே என்று சுட்டிக்காட்டி, இவர் பரிசோதனைக்குக் கூட இருந்து ஒத்துழைத்த ஒரு பேராசிரியருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு இவர் வஞ்சிக்ப்பட்டதைப் பற்றி இவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அச்சமயத்தில் ஒரு கொடையாளியாக வாழ்ந்த ஜே.ஜ ரோடேல் ஷாட்சுக்கு ”கம்போஸ்ட் அறிவியல்” என்ற தலைப்பில் வேளாண்மைக்குத் தொடர்பான நுண்ணியிரிகளைப் பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரையை வழங்கக்கோரி அதற்கான நிதி உதவியையும் வழங்கினார். சொல்லப்போனால் ஷாட்ஸ், Soil Microbilogy என்ற மண்ணுயிரிகளுடன் மக்கு உருவாக்கம் பற்றி ஆய்வுகளை நிகழ்த்தும் துறையில் ஆர்வத்துடன் இருந்தார்.

ஷாட்ஸ் தன்னுடைய ஆராய்ச்சிக்கு கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நிகழ்ந்த மண்நுண்ணுயிர் ஆய்வுகளையும் திரட்டினார். ருஷியா, ஐரோப்பா, அமெரிக்கா போலவே கிழக்கு ஐரோப்பிய முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளில் மண்ணில் செயற்கை உரம் ஆதிக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் தொகுசாயேவை முற்றிலும் புறக்கணிக்கவில்லை. குறிப்பாக செக்கோஸ்லேவியாவில் உள்ள தொகுசாயேவ் மண்ணாராய்ச்சி நிறுவனம், இயற்கை வழி நுண்ணுயிரிகள், மக்கு உரம் பற்றியும் கவனம் செலுத்தியது.

M.M. கோனோநோவா, சோவியத் ரஷ்ய அறிவியல் கழகத்தின் உறுப்பினர் என்ற முறையிலும் தொகுசாயேவ் மண்ணாராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர் என்ற முறையிலும், ”மண்ணில் குணபப்பொருள்- மண் உருவாகத்திலும் மண்வளத்திலும் அதன் பங்கு” (Soil organic Matters: its Nature, Its Role in Soil Formation and Fertility) என்ற ஆய்வுத் தொகுப்பு வெளிவந்ததைத் தொடர்ந்து மூன்றாண்டுகள் கழித்து, ”கரிம மக்குப் பொருளும் அதன் முக்கியத்துவமும்” (Humus and its Significance) என்ற ஆய்வுக் கட்டுரையையும் கோனோ நோவா வெளியிட்டார். ஒவ்வொரு நாட்டிலும் வேளாண்மை ஆராய்ச்சிக்கழகத்தின் ஒரு பகுதியாக மண் ஆராய்ச்சி நிலையங்கள் இருப்பினும் ஹாவொர்ட் கூறியதைப் போலவே ஷாட்சும், ”ரசாயன உர ஊட்டங்களுக்கும் மண்ணுக்கும் உள்ள உறவைத்தான் வெளிப்படுத்துகின்றனரே தவிர ஹ்யூமஸ் என்ற கரிம மக்கு ஊட்டம் பற்றிய கவனமோ, ஆய்வுகளோ புறக்கணிக்கப்படுகிறது. மண்ணில் ரசாயனம் பணிபுரிகிறது என்று மண்ணை ஒரு பாத்திரமாக மட்டுமே மதிப்பிட்டு, மண்ணின் வளம் இழக்கப்படுவதை” எடுத்துக்காட்டியுள்ளார்.

மண் என்பது ஒளியாலும் இரவாலும் பாதிக்கப்படுகிறது. மண்ணில் நுண்ணுயிரிகளும் உண்டு. உயிரற்றவையும் உண்டு. மண்ணின் பல்வேறு பெளதிக சக்திகளையும் சேர்த்து இவை எவற்றையுமே லீபெக் வகுத்த ரசாயனக் கொள்கை (என்.பி.கே) கணக்கில் கொள்ளவில்லை. இந்தியாவில் கரிம மக்குப் பொருளின் பல்வேறுபெளதிக மாற்றங்களையும் நுண்உயிரிகளின் வலிமையையும் ஹாவொர்ட் ஆராய்ந்ததைப் போலவே, ஷாட்ஸ் அமெரிக்காவில் ஆராய்ந்துள்ளார். ஷாட்ஸ் மருத்துவத்துறையில் கண்டுபிடித்த ஸ்ட்ரெப்டோமைசின் உண்மையில் மண்ணிலிருந்து பெற்ற காளான். இவ்வாறே இவருடைய மற்றொரு கண்டுபிடிப்பு லைகெனின் ஆற்றல் பற்றியது. லைகென் (Lichen) என்பது ஒரு பாசியினம். இது பற்றியும் ருஷிய மண்ணுயிரியல் ஆராய்ந்துள்ளது. இதுவும் வேளாண்மையில் மண்ணில் உள்ள உலோகங்களைக் கரைத்து ஊட்டமாகப் பயிருக்கு வழங்குவதை ஷாட்ஸ் எடுத்துக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக